PUBLISHED ON : மே 22, 2017
12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் எண்ணத்தோடு, பிளஸ் 1 பாடங்களைப் படிக்காமல், நேரடியாக பிளஸ் 2 பாடங்களைப் படிக்கும் போக்கு மாணவர்களிடையே அதிகமாக காணப்படுகிறது. இதனால், அவர்களுக்கு அகில இந்திய நுழைவுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் திறன் வாய்ப்பதில்லை. சமீபத்தில், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள், பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்தின், அடிப்படையில் முதலாண்டு மாணவர்களுக்கு, மாதிரி தேர்வு வைத்தனர். அதில், பிளஸ் 1 அடிப்படை பாடங்களுக்குப் பதில் அளிக்க முடியாமல், மாணவர்கள் திணறினர். இதற்கு, மாணவர்கள் பிளஸ் -1 பாடத்தை முறையாகப் படிக்காததுதான் காரணம் என்று தெரியவந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன், செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு போன்று பிளஸ் 1 வகுப்புக்கும், அடுத்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடைபெறும். பள்ளிப் பாடத் திட்டங்கள் மாற்றியமைக்கப்படவுள்ளன. மேலும், குடிமைப் பணிகள் (சிவில் சர்வீஸ்) தேர்வுக்கு, மாவட்ட நூலகங்களில் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.' என்று கூறினார்.
