PUBLISHED ON : செப் 05, 2016

டென்னிஸ் ரிட்ச்சி பிறந்த தினம் செப்டம்பர் 9
ஆங்கில மொழியில் A,B,C... எழுத்துகள் தெரியும்!
அது என்ன C என்றொரு கணினி மொழி?!
மனிதன் கணிப்பொறியுடன் உரையாட அது புரிந்துகொள்ளும் வகையில் உயர்நிலை மொழிகள் (High Level Languages) தேவைப்பட்டன. பொறியியல் மற்றும் அறிவியல் பணிகளுக்காக ஃபோர்ட்ரான் (FORTRAN - FORmula TRANslation), வணிகத் துறைக்காக கோபால் (COBOL - COmmon Business Oriented Language) என ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு மொழி உருவானது. அப்போதுதான் எல்லாப் பணிகளுக்காகவும் ஒரு பொதுவான கணினி மொழி உருவாக்கலாமே என்ற எண்ணம் உருவானது.
பல வல்லுநர்கள் சேர்ந்து 1960ல் 'அல்கால்' (ALGOL - ALGOrithmic Language) மொழியை உருவாக்கினார்கள். மிகக் குறைவான நிரல் குறியீடுகளுடன் (Programming Codes) புரிவதற்குக் கடினமாக இருந்தது. அதன் குறைகளை நீக்கி, 1963ல் சிபீஎல் (CPL -- Combined Programming Language) என்ற புதிய மொழியை உருவாக்கினார்கள். அதுவும் கற்பதற்கும் பயன்படுத்துவதற்கும் மிகக் கடினமாக இருந்தது. அதன்பிறகு, பிசிபீஎல் (BCPL - Basic Combined Programming Language) என்னும் புதிய மொழியை 1967ல் உருவாக்கினார்கள். பிசிபீஎல் மொழியில் இருந்த பல நல்ல கூறுகளை உள்ளடக்கி, தாம்சன் என்பவர் 'பி' (B) மொழியை உருவாக்கினார்.
இப்படி, தொழில்நுட்பம் ஒருபுறம் வளர்ந்து கொண்டிருக்க, 1970ல் AT&T (அமெரிக்கத் தொலைத்தொடர்பு தொலைபேசி) ஆய்வுக்கூடத்தின் டென்னிஸ் ரிட்ச்சி (Dennis Ritchie) வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையைச் செய்தார். பி- மொழியில் பல திருத்தங்கள் செய்து கம்பைலர் (Compiler) சார்ந்த ஒரு புதிய மொழியை உருவாக்கினார். அது குறிப்பிட்ட பணிகளுக்கு மட்டும் இல்லாமல், எல்லாப் பணிகளுக்கும் பயன்படும் பொதுமொழியாக இருந்தது. கணினி மொழி வல்லுநர்கள் 1960ல் கண்ட கனவைக் கடைசியாக 1972ல் ரிட்ச்சி நிறைவேற்றினார்.
அந்த மொழிக்கு 'சி'(C) என்று பெயரிட்டார். B என்ற ஆங்கில எழுத்துக்கு அடுத்த எழுத்து C என்பதால்தான் அவ்வாறு பெயரிட்டதாக பலரும் கருதினார்கள். கணினி உலகம் கண் சிமிட்டுவதற்குள் வளர்ந்துவிடும் என்பதற்குச் சான்றாக, C, ANSI C, C++, JAVA, C# என மொழிகளும் அடுத்தடுத்து பரிணாம வளர்ச்சி அடைந்துவிட்டன.
1978ல் டென்னிஸ் ரிட்ச்சியும், பிரியன் கெர்னிகனும் இணைந்து 'தி சி புரோகிராமிங் லாங்குவேஜ்' (The C - Programming Language) என்ற நூலை வெளியிட்டார்கள்.
கணினி மொழி: கணினி ஒரு இயந்திரம் என்பதால், 0, 1 என்ற இலக்க மொழி (Machine Language) மட்டுமே புரிந்துகொள்ளும். ஒரு மொழியைக் கணினியில் பயன்படுத்த அந்த மொழியின் ஒவ்வொரு எழுத்துக்கும் ஓர் எண்ணை நிர்ணயிக்க வேண்டும். இதற்கு, குறியீட்டு முறை (Character Encoding) என்று பெயர்.
