PUBLISHED ON : செப் 02, 2019

அமேசான் உலக உயிரினங்களின் வாழ்விடமாகத் திகழ்கிறது. அரியவகை மக்கா கிளிகள் முதல் மரத்தவளை போன்ற பல்லுயிர்கள் வாழ வழிவகுக்கும். ஏறக்குறைய 378 இன ஊர்வன உயிரினங்கள் வாழும் காடு, இன்று காட்டுத்தீக்கு இரையாகி அழிந்து வருகிறது.
இயற்கைப் பேரிடரால் ஒருபக்கம் ஆபத்து. மற்றொரு பக்கம் பழங்குடியினராலும் ஆபத்து.
அமேசான் பழங்குடியினர் ஊர்வனவற்றை விரும்பி உண்ணுவதால், அவர்களும் ஊர்வன உயிரினங்களின் அழிவிற்கு சவாலாகத் திகழ்கின்றனர்.
அமேசான் காட்டுத்தீ பரபரப்பு!
மற்ற உயிரினங்கள் போல் அல்லாது பாம்புகள் இயற்கைச் சீற்றங்களின்போது அருகிலிருக்கும் பொந்துகள், பாறை இடுக்குகள், மண்ணுக்கடியில் என பதுங்கிக்கொள்ளும். காட்டுத் தீ போன்ற பேரிடர்களில் இவை தப்பிக்க வழியின்றி இறக்கின்றன. 250 கிலோ எடை கொண்ட அனகோண்டா பாம்பு முதல் ஒரு கிராம் கூட எடை இல்லாத சிறுபாம்பு வரை வாழக்கூடியக் காடு, அமேசான்.
பாம்பு இனங்கள்:
பச்சை அனகோண்டா, மலைப்பாம்புகள், புஷ்மாஸ்டர், ஈட்டித்தலையன் பாம்பு, மரகத மலைப்பாம்பு, கண்ணிமை விரியன், பவளப் பாம்பு, காட்டுக்குழி விரியன், தென் அமெரிக்க கிலுக்கப் பாம்பு, புழுப் பாம்பு என, பல வகைப் பாம்பு இனங்கள் அமேசான் காடுகளில் வாழ்கின்றன.
காட்டுத்தீ போன்ற இயற்கைப் பேரிடரில் பாம்புகள் தப்பிக்க வழியின்றி இறக்க நேரிடும். இதனால் உணவுச் சங்கிலியின் மூன்றாம் நிலையில் முக்கிய பங்கு வகிக்கும் பாம்புகளின் எண்ணிக்கை குறையும். இதனைச் சுற்றுச்சூழலின் முறிவு என்று கூறுவர்.
இதன் விளைவாக, உணவுச் சங்கிலியில் மாற்றம் ஏற்பட்டு, பல்லுயிரிகளுக்கு உணவுத் தட்டுப்பாடு/ ஆபத்து ஏற்படும்.
- ந.ச.மனோஜ்
