
பிப்ரவரி 28, 1969 - யு. ஸ்ரீநிவாஸ் பிறந்தநாள்
கர்நாடக இசை மரபில் இல்லாத மேண்டலின் என்ற வாத்தியத்தை ஐந்து வயதில் கற்கத் தொடங்கி, 9 வயதில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வியக்க வைத்தார். கர்நாடக இசையை, ஹிந்துஸ்தானி, மேற்கத்திய இசைகளுடன் இணைத்து இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். பத்மஸ்ரீ, சங்கீத நாடக அகாடமி போன்ற மிக உயரிய விருதுகள் பெற்றுள்ளார்.
பிப்ரவரி 28, 1987 - இந்தியா - தேசிய அறிவியல் நாள்
சர். சி. வி. இராமன் தனது புகழ்பெற்ற, 'ராமன் விளைவை' இந்த நாளில்தான் கண்டுபிடித்தார். இந்த நிகழ்வின் நினைவாகவும் அறிவியல் மேதைகளைக் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தோடும் இந்திய அரசால் இந்த நாள் பிரகடனப்படுத்தப்பட்டது.
மார்ச் 1, 1910 - எம். கே. தியாகராஜ பாகவதர் பிறந்தநாள்
தன் வசீகரக் குரலால் தமிழ் திரை ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகர். 'எம்.கே.டி' என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார். தமிழ்த் திரைப்படத்துறையின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற கதாநாயகனாகவும் மிகச் சிறந்த கர்நாடக சங்கீத தமிழ் பாடகராகவும் இருந்தார்.
மார்ச் 1, 1968 - குஞ்சராணி தேவி பிறந்தநாள்
பளுதூக்குதலில் 44, 46, 48 கிலோ என பல்வேறு பிரிவுகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்றுள்ளார். தொடர்ச்சியாக ஏழு பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார். அர்ஜுனா விருது, பத்ம ஸ்ரீ, ராஜீவ் கேல் ரத்னா விருதுகள் பெற்றுள்ளார்.
மார்ச் 2, 1935 - குன்னக்குடி வைத்தியநாதன் பிறந்தநாள்
'வயலின்' என்றதும் நினைவுக்கு வருபவர். வயலின் இசையால் அனைவரையும் கவர்ந்தார். கர்நாடக இசை, மெல்லிசை, திரையிசை போன்ற பல்வேறு துறைகளில் சாதனை படைத்தார். பத்மஸ்ரீ, கலைமாமணி, கர்நாடக இசைஞானி விருது எனப் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
மார்ச் 3, 1839 - ஜாம்செட்ஜி டாடா பிறந்தநாள்
இந்தியாவின் நவீன தொழில்துறையின் முன்னோடி. இந்திய தொழில்துறையின் தந்தை என்றும் அறியப்படுகிறார். டாடா குழுமத்தை நிறுவியதும் இவர்தான். எஃகு உற்பத்திக்குப் பெயர்பெற்ற ஜாம்ஷெட்பூர் நகரம் இன்று இவருடைய பெயரைத் தாங்கி நிற்கிறது.
மார்ச் 4, 1971 - இந்திய தேசிய பாதுகாப்பு நாள்
பல்வேறு தொழில்துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் நலன், பாதுகாப்பு மற்றும் பணிபுரியும் சூழல் ஆகியவற்றில் கவனத்தோடு இருக்க வேண்டும். இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

