PUBLISHED ON : ஆக 22, 2016

அன்னை தெரசா பிறந்த தினம் ஆகஸ்ட் 26
வெள்ளை நிறக் கைத்தறிச் சேலையின் ஓரத்தில் நீல நிறக் கரை; வரிவரியாகச் சுருக்கங்கள் நிறைந்த முகம்; கருணை நிறைந்த விழிகள்; இன, மத வேறுபாடு கடந்த சேவை மனப்பாங்கு, என அன்பின் மொத்த உருவமாகத் திகழ்ந்தவர் அன்னை தெரசா.
தன்னுடைய 12 வயதில் துறவறம் போக முடிவு செய்து, 18ஆவது வயதில் வீட்டை விட்டு வெளியேறினார். மாசிடோனியாவில் 1910 ஆகஸ்ட் 26ல் பிறந்தார். அல்பேனிய இனத்தவரான இவரது இயற்பெயர் அக்னஸ் கொன்ஸா பொஜாக்யு. அல்பேனிய மொழியில் கொன்ஸா என்றால் 'மொட்டு' அல்லது 'சிறு மலர்'!
சிறுமியாக இருந்தபோதே ஆழ்ந்த இறை பக்தியும் சமூக நலத் தொண்டில் மிகுந்த ஆர்வமும் கொண்டிருந்தார். தனது 18ஆவது வயதில் அயர்லாந்து, லொரேட்டா கத்தோலிக்க கன்னிகா மடத்தின் உறுப்பினர் ஆனார். கல்கத்தாவில் இந்திய அமைப்புகள் செய்துவந்த சமூகத் தொண்டுகளைப் பார்த்துப் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.
இந்திய குழந்தைகளுக்குக் கல்வி கற்பிப்பதற்காக, 1929ல் இந்தியா வந்தவர், டார்ஜிலிங்கில் தன்னுடைய பணியைத் தொடங்கினார். அதன்பின், அயர்லாந்து சென்று, 1931ஆம் ஆண்டு ஞானஸ்நானம் பெற்று 'தெரசா' ஆனார். இந்திய குடியுரிமையை 1948ல் பெற்று, “உங்களுக்குத் தொண்டு செய்யவே நான் இங்கு வந்துள்ளேன். உதவி செய்ய என்னை அழைப்பீர்களா?” என்று கேட்டவாறு குடிசைப் பகுதிகளைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தார்.
ஏழை மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவும், தொழுநோய், காச நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் இறுதி மூச்சு உள்ளவரை உழைத்தார். அதனால் தான், தெரசா என்கிற அல்பேனிய பெண்ணை இந்திய மக்கள் தங்களின்
அன்பின் வெளிப்பாடாக 'அன்னை' என்று அழைத்தார்கள்!
1950: மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி இல்லம் (Missionaries of Charity) தெரசாவால் தொடங்கப்பட்டது.
1962: பொதுச் சேவைக்கான இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது
1979: அமைதிக்கான நோபல் பரிசு
1980: இந்தியாவின் உயர்ந்த விருது பாரத ரத்னா
1983: பிரிட்டிஷ் மகாராணி 2ஆம் எலிசபெத் மகாராணியின் கௌரவ விருது
