PUBLISHED ON : ஜன 25, 2016

“பட்டம் விடப் போகிறேன். வருகிறாயா?” என்றார் ஞாநி மாமா. “இந்த வயசுல நீங்க பட்டம் விட்டா எல்லாரும் சிரிப்பாங்க.” என்றேன். “பட்டம் விடறதுக்கு வயசு வரம்பெல்லாம் இருக்கா, வாலு நீ சொல்லு என்று “ வாலுவை துணைக்கு அழைத்தார்.
வாலு உடனே இணையத்திலிருந்து படங்களும் செய்திகளுமாக எடுத்து அடுக்கியது. நாம் தமிழ்நாட்டில் பொங்கல் கொண்டாடும் அதே சமயத்தில் குஜராத்திலும் இன்னும் பல வட இந்தியா மாநிலங்களிலும் பட்டத் திருவிழாவே நடத்துகிறார்கள். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரும் பட்டம் விடுகிறார்கள். இந்தியாவில் மட்டும் அல்ல. ஜப்பான், வியட்நாம், அமெரிக்கா என்று பல நாடுகளில் பட்டத் திருவிழா வசந்த காலத்தில் நடக்கிறது.
“சரி. நாம் எங்கே போய் பட்டம் விடுவது ?”என்று கேட்டேன். “பட்டம் பத்திரிகை அறிமுக விழா கொளத்தூர் எவர்வின் பள்ளியில் நடக்கிறது. அங்கேதான்” என்றார் மாமா. அவருடன் போனேன். பெரி…ய்ய ஸ்கூல். அங்கே வழக்கமான பள்ளிக்கூட மீட்டிங் மாதிரி கொஞ்ச நேரம் பேச்சு, டான்ஸ், பாட்டு எல்லாம் இருந்தது. அப்புறம் ஐம்பூதங்கள் பற்றி ஒரு வினாடி வினா நிகழ்ச்சி நடந்தது.
ஏன் 'எலிமெண்ட்ஸ்'- ஐ (Elements) பூதம் என்று சொல்கிறோம் என்று கேட்டு ஆறுமுகத்தமிழன் மாமாவுக்குக் குறுஞ் செய்தி அனுப்பினேன். தமிழை ஹார்லிக்ஸ் (Horlicks) மாதிரி, கரைக்காமல் அப்படியே சாப்பிட்டவர் அவர். மாமா உடனே இந்த பூதம் என்ற சொல் தொல்காப்பியத்தில் தொடங்கி, திருக்குறள், புறநானூறு எல்லாவற்றிலும் வந்திருக்கும் பாட்டையெல்லாம் எனக்கு அனுப்பிவிட்டார். பூத்தது பூதமாம். ஐம்பூதங்களும் அப்படி தானாகவே இயற்கையில் பூத்ததாம்.
வினாடி வினா முடிந்ததும் ஜெயித்தவர்களுக்கு தலையில் பட்டம் சூட்டினார்கள். பல்கலைக்கழக விழாக்களிலே சூட்டுவார்களே அதே தொப்பி. எனக்கு அது கறுப்பு தொப்பியாக இருப்பதுதான் பிடிக்கவில்லை. இனிமேல் கலர் கலராகச் செய்யச் சொல்ல வேண்டும் என்று மாமாவிடம் சொன்னேன்.
'இதோ இந்தப் பட்டம் எல்லா கலரிலும் இருக்கிறது” என்று மாமா நிறைய காற்றாடிப் பட்டங்களைக் காட்டினார். பள்ளி மாணவர்கள் எல்லாரும் மைதானத்தில் கூட்டமாக நின்றார்கள். மாமாவும் சிலரும் சேர்ந்துகொண்டு ஒவ்வொரு பட்டமாக பறக்கவிட முயன்றார்கள்.
நிறையப் பேருக்குப் பட்டம் பறக்க விடுவதைப் பற்றியே தெரியவில்லை.
ஏன் என்று கேட்டேன். பட்டம் விட சட்டப்படி அனுமதி இல்லையாம். போலீஸ் தடை செய்திருக்கிறார்களாம். நிறைய விபத்து நடக்கிறதாம். காற்றாடி நூல் தெருவில் பைக்கில் போகிறவர் கழுத்தில் சுற்றி அறுத்து உயிருக்கே ஆபத்தெல்லாம் வருகிறதாம்.
காற்றாடி விடுவதற்கு, சட்டென்று கையால் இழுத்தாலே அறுந்துவிடக் கூடிய 'புஸ்க்கு' நூலே போதும்தான். அது காயம் ஏற்படுத்தாது. மாஞ்சா நூல்தான் பிரச்னை. இன்னொருத்தர் பட்டத்தை அறுத்துக் காட்டவேண்டும் என்பதற்காக, நூலில் பசை, கண்ணாடித்தூள் எல்லாம் சேர்த்து செய்வதுதான் மாஞ்சா நூல்.
என்னைப் போல எல்லாரும் இப்படி மாஞ்சாவை வேண்டாம் என்று தூக்கிப் போடாததால், இப்போது பட்டம் விடுவதற்கே தடை வந்துவிட்டது.
பட்டம் வெறும் ஜாலி விஷயம் மட்டும் இல்லை என்றார் மாமா. முதல் உலக யுத்தத்தின்போது பட்டங்களைப் பயன்படுத்தி எதிரிகளை உளவு பார்த்திருக்கிறார்கள். ஆட்களை, பொருட்களைத் தூக்கிப் போகிற பிரமாண்டமான பட்டமெல்லாம் இருந்திருக்கிறது. பட்டங்களில் கேமரா பொருத்தி இப்போது பயன்படுத்தும் ஆளில்லா குட்டி விமான கேமரா போலப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
ஸ்கூலுக்கெல்லாம் லீவு விடுவாரே ரமணன், அந்த மாமாவெல்லாம் வேலை செய்யும் வானிலை துறையில் கூட ஒரு காலத்தில் பட்டம் விட்டிருக்கிறார்கள். வானிலையை அளக்கும் கருவிகளைப் பட்டத்தில் வைத்து அனுப்புவார்களாம். அவ்வளவு ஏன், ஆகாய விமானத்தைக் கண்டு பிடித்ததே பட்டத்தை வைத்துத்தான் ! கிரஹாம் பெல், ரைட் சகோதர்கள் எல்லாரும் முதலில் விதவிதமாகப் பட்டம் விட்டுப் பார்த்து, அப்புறம்தான் விமானத்தை வடிவமைத்து இருக்கிறார்கள். பட்டம் விடக் கற்றுக் கொண்டால், ஏரோடைனமிக்ஸ் (Aerodynamics) புரிந்துவிடும். அப்புறம் ஏரோநாட்டிக்கல் எஞ்சினியரிங் (Aeronautical Engineering) கூடப் படிக்கலாம் !
இப்படி 2500 வருடங்களாக உலகத்தில் இருந்து வரும் பட்டம் தமிழ்நாட்டில் மட்டும் இப்போது இல்லை என்பது எவ்வளவு பெரிய கொடுமை! ஆபத்தான பட்டாசையெல்லாம் அனுமதிக்கிறோம். சாதுவான பட்டத்தை ஏன் தடுக்கிறோம்?
தவிர இந்தியாவிலேயே மீதி ஊர்களில் எல்லாம் பட்டம் விட தடையில்லை. ஏன் தமிழ்நாட்டில் மட்டும் தடை? நான் பட்டம் விடுவதற்கு அகமதாபாத்துக்கா போகமுடியும்? அங்கே முதலமைச்சரே பட்டம் விட்டு விழாவைத் தொடங்குகிறார்! தமிழ் நாட்டு சிறுவர்களுக்கு பட்டம் விட உரிமை வேண்டாமா?
இதைப் பற்றி அம்மா அழைப்பு மையத்துக்கு நானும் பாலுவும் வாலுவும் போன் செய்யலாம் என்று இருக்கிறோம்.
என்னை மட்டும் தொடர்ந்து பட்டம் விட அனுமதித்திருந்தால் பெஞ்சமின் பிராங்க்ளின் மாதிரி ஏதாவது கண்டுபிடித்திருப்பேன் என்கிறான் பாலு. முதலில் பிராங்க்ளினுக்கு சரியான ஸ்பெல்லிங் (Spelling) சொல்லு என்றேன். Pranklyn என்றான். ஃபிராங்க்ளின் என்று எழுதி Franklin என்று உச்சரிக்கவேண்டும். சரி அவர் காற்றாடியை வைத்துக் கொண்டு என்ன கண்டுபிடித்தார் தெரியுமா? இடி இடித்து மின்னல் வெட்டும்போது அந்த மின்னலில் மின்சாரம் இருக்கிறது என்று கண்டுபிடித்தார். இதற்காக மழையில் நனையாத ஒரு பட்டுத்துணியில் பட்டம் செய்து பறக்கவிட்டு, அதில் நூலுடன் ஒரு ஒயரை (Wire) இணைத்து அந்த ஒயர் வழியே மின்சாரம் வருவதைத் தொட்டுப் பார்த்து அறிந்தார். இந்த ஐடியாவிலிருந்துதான் அடுத்து உயரமான கட்டடங்கள் மேலே இடிதாங்கிகளை அமைக்கும் ஐடியாவும் அவருக்கு வந்தது.
இப்படி பளிச் பளிச் என்று மின்னல் மாதிரி அவருக்கு ஐடியாவாக வந்துகொண்டே இருக்கும். அந்த ஐடியாவையெல்லாம் அவர் அமெரிக்க அரசியல் சட்டத்திலே கூட சேர்த்து எழுதியிருக்கிறார். அதனால்தான் அவர் படத்தை நாம் காந்தி படத்தை ரூபாயிலே போடுகிற மாதிரி அவர்கள் டாலரிலே போடுகிறார்கள்.
எனக்கு பெஞ்சமின் ஃபிராங்க்ளினை இதை விட வேறொரு விஷயத்துக்காக ரொம்பப் பிடிக்கும். அவர் சிறுவனாக இருந்தபோதே நிறைய குட்டிக் குட்டிக் கதைகள் கட்டுரைகள் எழுதினாராம். அதையெல்லாம் அவருடைய அண்ணன் நடத்திய பத்திரிகைக்கு அனுப்ப ஆசை. ஆனால் அண்ணன் திட்டுவார் என்று பயம். எனவே தினமும் ராத்திரி ரகசியமாக அண்ணன் அலுவலக கதவு ஓட்டை வழியே, எழுதிய காகிதங்களை ஒரு கவரில் போட்டு உள்ளே போட்டு விடுவார். யார் அனுப்பினார்கள் என்று தெரியாமல் ஆனால் நன்றாக இருக்கிறதே என்று அண்ணனும் அவற்றை தொடர்ந்து வெளியிட்டு வந்திருக்கிறார்.
இப்படித்தான் பெஞ்சமின் ஒரு பத்திரிகையாளராகியிருக்கிறார்.
ஆனால் மாலு, உனக்கு இந்தக் கஷ்டமெல்லாம் இல்லை. உன் டயரியைக் கேட்டு வாங்கிப் போடுகிறார்கள். நீதான் சோம்பேறி. ஒழுங்காக தினமும் எழுதுவதில்லை என்றது வாலு. இனிமேல் எழுதுவேன் என்று சொல்லிவிட்டு டயரியை மூடிவிட்டேன் ! இன்னிக்கு இவ்வளவு போதும்.
வாலுபீடியா
1. 1978ல் ஒரே நூலில் 4,128 பட்டங்களைக் கோத்துப் பறக்கவிட்டு அசத்தியவர் குஜூஹிகோ அசாபா.
2. உலகத்திலேயே பெரீ……ய்ய பட்டம் ராபர்ட் மூர் விட்டதுதான். செப்டம்பர் 2014ல, 129 சதுர அடி அளவுப் பட்டத்தை 16 ஆயிரம் அடி உயரத்துல அவர் டீம் பறக்கவிட்டுச்சு.
-மாலுவின் டயரி ஞாநி
