ஞாநி எழுதும் மாலுவின் டைரி (28) - கை கொடுக்கும் கை
ஞாநி எழுதும் மாலுவின் டைரி (28) - கை கொடுக்கும் கை
PUBLISHED ON : ஜூலை 25, 2016

“யார் திருடன்னு இப்பக் கண்டுபிடிச்சுருவேன்” என்று உற்சாகமாகச் சொல்லிக்கொண்டு வந்தான் பாலு. அவன் கையில் ஒரு ஜாமெட்ரி பாக்ஸ். இரு விரல்களால் அதை நுனியில் பிடித்துக்கொண்டு இருந்தான்.
பாலு வகுப்பில் அவனுடைய பொருட்கள் அடிக்கடி திருட்டுப் போகும். பேனா, பென்சில், இரேஸர், புது நோட், புக் இந்த மாதிரிதான்.
“எப்படிக் கண்டுபிடிக்கப் போறே?”
“இந்த பாக்ஸ்ல திருடினவன் கைரேகை இருக்கும். ரேகையைப் பார்த்து கண்டுபிடிச்சுரலாம்” என்றான் பாலு.
“ககை ரேகை ஜோசியம் கத்துகிட்டிருக்கியா பாலு?” என்று கேட்டபடி வந்தார் ஞாநி மாமா.
“ககை ரேகை ஜோசியத்துல யார் திருடனா இருப்பாங்கன்னு சொல்ல முடியுமா என்ன?” என்று கேட்டேன். ஜோசியர்கள் கையைப் பார்த்து இது ராஜ யோகம் இருக்கற கைன்னு சொல்லுவாங்களே தவிர “இந்த கைக்குரியவர் திருடனா இருப்பார்”ன்னு சொன்னது இல்ல. சொல்லவும் முடியாது. அது ஒரு சயன்ஸ்ன்னு இன்னும் நிரூபிக்கப்படல” என்றார் மாமா.
“எது சயன்ஸ்?” என்றான் பாலு.
“ஒரு கோட்பாட்டை எங்கே யார் எத்தனை முறை செய்து பார்த்தாலும் ஒரே ரிசல்ட்தான் வரணும். மாறி மாறி வரமுடியாது. அதுதான் சயன்சோட அடிப்படை. ஜோசியம் நிறைய பேருக்கு மன ஆறுதலுக்குப் பயன்படும். நான் கூட யார் கையை வேண்டுமானாலும் பார்த்து ரெண்டு விஷயம் சொல்லுவேன். சரிதான்னு எல்லாரும் ஏத்துப்பாங்க” என்றார் மாமா.
“என்ன ரெண்டு விஷயம்?”
“இப்ப நீங்க கொஞ்சம் சிரமமான காலகட்டத்துல இருக்கீங்க. இன்னும் கொஞ்ச நாள்ல இதைக் கடந்து வந்துடுவீங்கன்னு சொன்னா எல்லாரும் ஆமான்னுதான் நினைப்பாங்க. இன்னொண்ணு, உங்களைச் சுத்தி இருக்கறவங்க உங்கள இன்னும் சரியாப் புரிஞ்சுக்கல. புரிஞ்சுக்க ஆரம்பிச்சுட்டா உங்க பிரச்னையெல்லாம் தீர்ந்துரும். இதையும் எல்லாரும் நம்புவாங்க. ஒரு தடவை நான் டெல்லிக்கு மாணவர்களோட போனப்ப குதுப்மினார் பக்கத்துல இருக்கற பூங்காவுல உட்கார்ந்து இந்த விளையாட்டைக் கொஞ்சம் பொது மக்களோட விளையாடிப் பார்த்தோம். ஒருத்தர் கூட இப்ப நான் சிரமத்துல இல்ல. என்னை யாரும் தப்பாப் புரிஞ்சுக்கறது இல்லன்னு சொல்லல. ஆமான்னுதான் தலையாட்டினாங்க.”
“அப்ப கைரேகையை வெச்சுகிட்டு போலீஸ் திருடனைக் கண்டுபிடிக்கறது எப்பிடி?” என்றான் பாலு.
“அது உள்ளங்கை ரேகை இல்ல. ஒவ்வொரு விரல் நுனியிலயும் இருக்கற ரேகை. அது சயன்ஸ். ஒருத்தர் விரல் ரேகை மாதிரி இன்னொருத்தருக்கு இருக்காது. ஒவ்வொருத்தரோட விரல் ரேகையும் தனித்துவமானது என்ற அடிப்படையிலதான் இது இயங்குது. இப்படி விரல் ரேகைகளை வகைப்படுத்தி ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான வழிமுறைகளை வகுத்தது நம்ம நாட்டுலதான்” என்றார் மாமா.
'யார் அதைச் செய்தது?' என்று கேட்டேன்.
“கொல்கத்தாவுல, 1897ல ரிச்சர்ட் ஹென்ரின்னு ஒரு ஆங்கிலேய போலீஸ் அதிகாரி இருந்தார். அவர் கூட அசீசுல் ஹேக், ஹேம் சந்திரபோஸ்ன்னு இரண்டு இந்திய இன்ஸ்பெக்டர்கள் இருந்தாங்க. இந்த இரண்டு பேரும்தான் கைரேகைகளை ஒப்பிட்டு ஆராய்வதற்கான வழிமுறைகளை உருவாக்கினாங்க. அதுக்கு ஹென்ரி சிஸ்டம்னு பேர் வெச்சாங்க. அதை முதல்ல பிரிட்டன் ஏத்துகிட்டது. அப்பறம் உலகம் முழுக்க அதே முறையைப் பின்பற்ற ஆரம்பிச்சாங்க. இதுக்கு நூறு வருஷம் முன்னால இருந்தே பல நாடுகள்ல பல வழிமுறைகளைப் பின்பற்றிகிட்டிருந்தாங்க. அதெல்லாம் திருப்திகரமா இல்ல.”
“முதன்முதல்ல கைரேகையை ஒப்பிட்டுப் பார்க்கலாம்னு எப்பக் கண்டுபிடிச்சாங்க?”
“பாபிலோனிய நாகரிக காலத்துலயே கையெழுத்துக்குப் பதிலா கைநாட்டு வைக்கற பழக்கம் இருந்திருக்கு. 1800 வருஷம் முன்னாலயே சீனாவுல குற்றவாளியோட கைரேகையைப் பதிஞ்சு வெச்சிருக்காங்க.”
“இதெல்லாம் திருட்டு நடந்த அப்புறம், குற்றம் நடந்த அப்புறம், யாரு செஞ்சாங்கன்னு கண்டுபிடிக்கத்தானே உதவும்? குற்றம் நடக்காம தடுக்க வழி என்னன்னு யாரும் வழிமுறையைக் கண்டுபிடிக்கலியா?” என்று கேட்டேன்.
“அதுக்கு நிறைய வழிமுறை இருக்கு. சின்ன வயசுலருந்தே இன்னொருத்தர் பொருளுக்கு நாம் ஆசைப்படக் கூடாதுங்கற மனநிலையை நாம் ஏற்படுத்தணும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கற சமூக அமைப்பு இருந்தா, நிச்சயம் திருட்டு குறையத்தான் செய்யும்” என்றார் மாமா.
“ஒருத்தர் திருடனாவதற்குப் பல காரணங்கள் இருக்கு. அந்தக் காரணங்களைத்தான் நாம் சரி செய்யணும். முப்பது வருஷம் முன்னால் என் நண்பர் நாகார்ஜுனன் வீட்டு மாடி அறையில் புகுந்து திருடிட்டாங்க. திருடின ஆளை போலீஸ் கண்டுபிடிச்சுக் கைது செஞ்சிடுச்சு. நாகார்ஜுனன் ஜெயிலுக்குப் போய் அந்த திருடனை சந்திச்சாரு. அவனோட பேசினார். அந்தத் திருடன் உண்மையில ஒரு குழாய் ரிப்பேர் செய்யற தொழிலாளி. குழாய் ரிப்பேர் செய்யற வேலை கிடைக்காம, குடும்பத்தைக் காப்பாத்த கஷ்டமான உடனே, இதுக்கு முன்னே ரிப்பேர் செய்த வீடுகளாப் பார்த்துப் போய் திருடியிருக்காரு. வறுமை திருடத் தூண்டறதுக்கு ஒரு காரணம்.”
“வேற காரணங்கள் என்ன?”
“இன்னிக்கு நம்ம சுத்தி ஏராளமான பொருட்கள் விற்கப்படுது. அது நமக்குத் தேவையோ இல்லையோ, விளம்பரம் மூலம் அது நமக்கு வேணும்கற ஆசையைத் தூண்டிவிட்டுகிட்டே இருக்காங்க. சிலருக்கு எதையும் வாங்கிட பண வசதி இருக்கு. பெரும்பாலானவங்களுக்கு இல்லை. எல்லாருடைய ஆசையும்தான் தூண்டப்படுது. இதுவும் குற்றங்கள் பெருகக் காரணம். அப்புறம் வசதி இருக்கறவங்க இன்னும் வசதிக்கு ஆசைப்படறாங்க. அவங்க வீடு புகுந்து திருடறது இல்ல. பொய்க் கணக்கு எழுதி கறுப்புப் பணத்தை சேர்க்கற மாதிரி ஒயிட் காலர் க்ரைம்ல ஈடுபடறாங்க.”
உடனே “திருடனாப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்று வாலு ஒரு பாட்டுப் பாடியது.
“திருடரா ஒருத்தர் உருவாகாம தடுக்கறதுதான் நிஜமான தீர்வு” என்றார் மாமா. “அதுக்குச் சின்ன வயசுலருந்தே, நான் இப்படித்தான் வாழ்வேங்கற நெறிமுறைகளை உருவாக்கிக்க நம்ம சிறுவர்களுக்குச் சொல்லித்தரணும்.”
“இப்ப என் பேனா திருடனை நான் எப்படி கண்டுபிடிக்கறது?” என்றான் பாலு. “அதுக்கு நீ ஜாமெட்ரி பாக்ஸை கைரேகை பீரோல குடுத்து அதுல இருக்கற ரேகையை பிரின்ட் எடுக்கணும். அப்புறம் உன் வகுப்புல இருக்கற எல்லார் கைரேகையையும் எடுத்துப் போய் குடுக்கணும். அவங்க ஒப்பிட்டுக் கண்டுபிடிப்பாங்க. இதெல்லாம் நடக்கற காரியம் இல்ல” என்று சிரித்தார் மாமா.
“வேற ஒரு தீர்வு இருக்கு. உனக்கு எந்தப் பையன் மேல சந்தேகமோ, அவன் பெட்டியில நீயாவே போய் ஒரு புதுப் பேனாவை வெச்சுடு. ஒவ்வொரு வாரமும் இதைச் செய். அவன் குழப்பமாகி தானே உன்கிட்ட வந்து உண்மையை ஒப்புக்குவான்.”
“இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண நன்னயம் செய்துவிடல்” என்றது வாலு.
வாலுபீடியா 1: விரல் ரேகையைப் பயன்படுத்தி ஒரு நபர் ஆணா, பெண்ணா என்று கூடக் கண்டறியலாம் என்று 2015ல் ஓர் ஆய்வில் அறியப்பட்டுள்ளது. ஆணை விட பெண்ணுக்கு வியர்வை அதிகம் என்றும் விரல் நுனியில் இருக்கும் அமினோ ஆசிட் அளவின் மூலம் ஆணா, பெண்ணா என்று கண்டறியலாம் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.
வாலுபீடியா 2: ஒரே மாதிரி கைரேகை இருவருக்கு இருக்கும் வாய்ப்பு 64 பில்லியனில் ஒருவருக்குத்தான் என்று கருதப்படுகிறது.
