PUBLISHED ON : அக் 15, 2018

காஜல் தேய் (Kajal Dey) திரிபுராவைச் சேர்ந்தவர். ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையைத் தொடர்ந்து நடந்த வன்முறையில் இரு கைகளையும் இழந்தார்.
செயற்கைக் கரங்கள் பொருத்துவதற்காக, பல்வேறு மாநிலங்களுக்கும் அலைந்தார். கடைசியாகப் புனேயில் உள்ள ஆயுதப் படை மருத்துவக் கல்லூரியின் செயற்கை மூட்டு பொருத்தும் மையத்தை (Artificial Limb Centre - ALC) அணுகினார் காஜல். அங்கு தொடர் சிகிச்சையில் மணிக்கட்டுக்கு மேலுள்ள இரண்டு எலும்புகளைப் பிரிக்கும் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அவ்விரண்டு பிரிவுகளையும் இரு விரல்கள் போல பாவித்து, எல்லா வேலைகளையும் செய்ய காஜல் கற்றுக் கொண்டார். ஸ்பூனைப் பயன்படுத்தி உணவு உண்பதிலிருந்து, மேஜைப் பந்தாட்ட மட்டையைக் கையாள்வது வரை, எல்லாவற்றையும் தனது மாற்றியமைக்கப்பட்ட கைகளால் செய்யப் பழகினார் காஜல். திரிபுராவில் இளைஞர்களுக்கு இலவச விளையாட்டுப் பயிற்சி அளித்து வந்த போல் ஸ்டார் கிளப் (Pole Star Club) எனும் சமூக சேவை நிறுவனம் மூலம், தன் கை எலும்புகளுக்கு நடுவில் மட்டையை கட்டிக் கொண்டு மேஜைப் பந்தாட்டம் ஆடப் பயின்றார் காஜல்.
தற்போது, குழந்தைகளுக்கு மேஜைப் பந்தாட்டப் பயிற்சியை அளித்து வருகிறார். இவரிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் தேசிய, மாநில அளவிலான பல போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
“பள்ளிக் கல்வி ஒன்றே வாழ்வில் முன்னேற்றம் தரும் என்பதே பெரும்பாலான பெற்றோரின் கருத்தாக உள்ளது. அந்தச் சூழலில் பல திறமையான விளையாட்டு வீரர்கள் காணாமல் போகிறார்கள். என் மகளேகூட கல்லூரிக் காலம் வரை விளையாடிக் கொண்டிருந்தவர், பட்ட மேற்படிப்பில் சேர்ந்தபின் விளையாட்டை நிறுத்தி விட்டார்” என்று வருந்துகிறார் காஜல்.
