sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

வள்ளுவர் பொய் சொல்லச் சொன்னாரா?

/

வள்ளுவர் பொய் சொல்லச் சொன்னாரா?

வள்ளுவர் பொய் சொல்லச் சொன்னாரா?

வள்ளுவர் பொய் சொல்லச் சொன்னாரா?


PUBLISHED ON : ஜன 16, 2017

Google News

PUBLISHED ON : ஜன 16, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

“உனக்கு திருவள்ளுவர் பற்றி என்ன தெரியும் ?” என்று கேட்டான் பாலு.

“அவர் 1330 திருக்குறள் எழுதியிருக்கிறார் என்று தெரியும். வருங்காலத்தில் தமிழ் செய்யுள் பாடத்தில் அதை வைப்பார்கள்; சிறுவர்கள் கஷ்டப்படக் கூடாது என்று அவர் இரண்டு வரிகளுக்கு மேல் ஒரு குறளையும் எழுதவில்லை. அதனால் எனக்கு அவரை ரொம்பப் பிடிக்கும்” என்றேன் சிரித்துக் கொண்டே.

“எங்கே பிறந்தார்? எப்போது பிறந்தார்? என்ன வேலை பார்த்தார்? அதெல்லாம் ஏதாவது தெரியுமா?” என்று பாலு கேட்டதும், ஞாநி மாமா “அதெல்லாம் யாருக்கும் நிச்சயமாகத் தெரியாது. விதவிதமான கதைகள் இருக்கின்றன.” என்றார். அந்தக் கதைகளையெல்லாம் சொல்லும்படி மாமாவைக் கேட்டோம்.

திருவள்ளுவரின் அப்பா, அம்மா இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள். ஒருவர் உயர் சாதி. இன்னொருவர் தாழ்த்தப்பட்ட பிரிவினர். வள்ளுவருக்கு நான்கு சகோதரிகள். அதில் ஒருவர் அவ்வை. இரண்டு சகோதரர்கள். அதில் ஒருவர் கபிலர். இது ஒரு கதை. இன்னொரு கதையின்படி வள்ளுவர் தாழ்த்தப்பட்ட சாதியான வள்ளுவன் குலத்தைச் சேர்ந்தவர். அடுத்த கதை, அவரை மதுரையை சேர்ந்த நெசவாளர் என்கிறது. அங்கிருந்து சென்னை மயிலாப்பூருக்கு வந்து இங்கே நெசவு செய்து பிழைத்தாராம்.

திருக்குறளை ஆராய்ச்சி செய்து சிலர் வள்ளுவர் சைவ மதத்தை சேர்ந்தவர் என்றார்கள். குறளில் சமணக் கருத்துகள் இருப்பதால் அவர் சமணர் என்றார்கள் வேறு சிலர். இன்னொருத்தர் சில குறள்களில் பயன்படுத்தப்படும் உவமைகளை வைத்து, இப்போது கேரளாவாக இருக்கும் சேர நாட்டைச் சேர்ந்தவர் வள்ளுவர் என்று சொல்லியிருக்கிறார்.

“வள்ளுவரின் மனைவி வாசுகி பற்றிக் கூட கதைகள் இருக்கின்றன. கணவர் அழைத்ததும் கிணற்றில் தண்ணீர் எடுத்துக் கொண்டிருந்தவர் அப்படியே வாளியை விட்டுவிட்டு வந்தார். வாளியும் கயிறும் பாதியில் அப்படியே அந்தரத்தில் நின்றன என்கிறார்கள். அவ்வளவு உத்தமியாம் வாசுகி. ” என்றது வாலு.

“வள்ளுவர் துறவி இல்லையா ? அவர் படத்தைப் பார்த்தால் தலையில் ஜடாமுடி, தாடியோடு சாமியார் மாதிரி இருக்கிறாரே!” என்றான் பாலு.

“அது கற்பனையாக வரைந்த ஓவியம்தானே. யாருக்குத்தெரியும் அவர் எப்படி இருந்தார் என்று. எனக்குத் தெரிந்து அவர் தாடியெல்லாம் வைத்திருக்கவே மாட்டார். மழித்தலும் நீட்டலும் வேண்டா என்று ஒரு குறளே எழுதியிருக்கிறார்.” என்றார் மாமா.

“வள்ளுவர் எப்போது பிறந்தார், எந்த வருடங்களில் வாழ்ந்தார் என்றாவது ஆதாரம் இருக்கிறதா ?” என்று கேட்டேன். “மாமூலர் என்று ஒரு சங்கப் புலவர் திருவள்ளுவரைப் பாராட்டி எழுதியிருப்பதால், அவருக்கு முந்தைய காலத்தவராக இருப்பார் என்று நினைக்கிறோம். கி.மு ஏழாம் நூற்றாண்டு அதாவது 2700 வருடங்களுக்கு முன்பு அவர் இருந்திருக்கலாம்.” என்று மாமா சொன்னதும் பாலுவுக்கு ஒரு சந்தேகம் வந்தது.

“அப்படியானால் இந்த வருடத்தை திருவள்ளுவர் ஆண்டு 2048 என்று சொல்கிறார்களே ? அது எப்படி ?” என்று கேட்டான் பாலு.

“ அது 1921ல் சில தமிழறிஞர்கள் ஒன்றுசேர்ந்து எடுத்த முடிவு. யேசு கிறிஸ்துவுக்கு 31 வருடம் முன்னர் வள்ளுவர் பிறந்திருக்க வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்தார்கள். தை முதல் நாள்தான் வள்ளுவராண்டின் தொடக்கம் என்றும் முடிவு செய்தார்கள். அந்த அடிப்படையில்தான் இது 2048வது ஆண்டு.” என்று மாமா சொன்னார்.

“எல்லாமே பொய்தானா?” என்றான் பாலு.

“கற்பனை என்று சொல்லலாம் பாலு. பொய் என்றே வைத்துக் கொண்டாலும், சில சமயம் பொய் சொன்னால் தப்பில்லை என்று வள்ளுவரே சொல்லியிருக்கிறார். பொய்மையும் வாய்மையிடத்த புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின். ஒரு பொய்யால், கெடுதல் இல்லாத நன்மை ஏற்படுமென்றால், அதுவும் உண்மைக்கு சமம்தான் என்கிறார். அதைத்தான் ஆங்கிலத்தில் ஒயிட் லைஸ் (white lies) என்கிறோம்.” என்று மாமா சமாதானப்படுத்தினார்.

எனக்கும் பாலுவுக்கும் ஒயிட் லைஸ் ரொம்பவும் பழக்கம். அது இல்லாவிட்டால் வீட்டில் இருக்கும் பெரியவர்களை சமாளிக்கவே முடியாது. அதைப் பற்றி எனக்குக் கொஞ்சம் குற்ற உணர்ச்சி இருக்கும், அம்மா அப்பாவை ஏமாத்துகிறோமே என்று. வள்ளுவரே ஓ.கே. சொல்லியிருக்கிறார் என்றதும் எனக்கு மகிழ்ச்சியாகிவிட்டது.

“ஒயிட் லையானாலும், ப்ளூ லையானாலும், லை டிடெக்டர் மெஷின் கண்டுபிடித்துவிடும்” என்றது வாலு.

“அந்த மாதிரி மெஷின் எல்லாம் இருக்கிறதா? அதை நம்பமுடியுமா ?”

“எண்பது வருடங்களுக்கு மேல் பொய்யறியும் பொறி உலகத்தில் இருந்துவருகிறது. பல நாடுகளில் வேலைக்கு ஆள் எடுக்கும்போது பேட்டியில் உபயோகிக்கிறார்கள். காவல் துறை சந்தேகப்படுபவர்களை விசாரிக்கப் பயன்படுத்துகிறது. ஆனால் பொறியை முழுமையான சாட்சியமாக ஏற்பது கிடையாது.” என்றார் மாமா.

ஒருவரின் ரத்த அழுத்தம், சுவாசம், தோலில் ஏற்படும் அதிர்வு மாற்றங்கள் மூன்றையும் அளவிட்டுத்தான் அவர் பொய் சொல்கிறாரா உண்மைதான் பேசுகிறாரா என்று முடிவு செய்கிறார்கள். பொய் சொல்லும்போது ரத்த அழுத்தம் உயருமாம். மாட்டிக் கொள்வோமோ என்ற பயம் சுவாசத்திலும் தோலிலும் பிரதிபலிக்குமாம்.

“நிஜமான லை டிடெக்டர் ஒருத்தருடைய கண்தான். நேருக்கு நேரே என் கண்ணைப் பார்த்து பேசச் சொன்னால் பொய் சொல்ல முடியாது” என்றேன். “சினிமா, நாடக நடிகர்களால் முடியும். அடுத்த வசனம் என்ன என்று தெரிந்தும் தெரியாதது போல நேருக்கு நேர் கண்ணைப் பார்த்து பேச அவர்கள் பயிற்சி எடுத்திருக்கிறார்கள்.” என்றார் மாமா.

“எப்போதும் உண்மையையே பேசினால், இந்தப் பிரச்னை எதுவும் இல்லை” என்றேன். “சில கேள்விகளுக்கு பொய்யும் சொல்ல முடியாது. உண்மையும் சொல்ல முடியாது.”என்றார் மாமா. “அப்ப ஒயிட் லைஸ் சொல்லிக்கலாம்” என்றது வாலு. எல்லாரும் சிரித்தோம்.

வாலுபீடியா 1: லை டிடெக்டரைப் பயன்படுத்துவது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

ஆயினும் மும்பையில் ஒரே ஒரு வழக்கில் மூளை அதிர்வுகள் சோதனை அடிப்படையில் ஒரு குற்றவாளிக்கு தண்டனை தரப்பட்டது.



வாலுபீடியா 2:
திருவள்ளுவருக்கு சென்னை மயிலாப்பூரில் கோவில் உள்ளது. அங்கே இப்போதும் வழிபாடு நடக்கிறது. வள்ளுவருடன் வாசுகி அம்மனுக்கும் சிலை உள்ளது. கோவிலுக்குள் வள்ளுவர் பிறந்த மரத்தடி என்று ஒரு இலுப்பை மரத்தடியில் அறிவிப்பு உள்ளது.






      Dinamalar
      Follow us