sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

முகத்துக்கு வேறு சொல்லுண்டோ?

/

முகத்துக்கு வேறு சொல்லுண்டோ?

முகத்துக்கு வேறு சொல்லுண்டோ?

முகத்துக்கு வேறு சொல்லுண்டோ?


PUBLISHED ON : மார் 02, 2020

Google News

PUBLISHED ON : மார் 02, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழ் மொழியில் ஒரு பொருளுக்குப் பல சொற்கள் இருக்கின்றன. எடுத்துக்காட்டாகக் கால் என்ற சொல்லை எடுத்துக்கொண்டால், அந்த உடலுறுப்பைக் குறிப்பிடுகிற வேறு சொற்கள் பல இருக்கின்றன.

அடி, கழல், தாள் போன்ற சொற்கள் காலைக் குறிப்பதுதான்.

தமிழில் முகத்தைக் குறிப்பதற்கு வேறு சொற்கள் இருக்கின்றனவா? வதனம் என்ற சொல் இருக்கிறது. ஆனால், அது வடசொல். எப்படிப் பார்த்தாலும் 'முகம்' என்ற சொல்லைத் தவிர வேறு சொல் எதுவும் முகத்தைக் குறிக்கும் பொருளில் நினைவுக்கு வரவில்லை. அப்படியானால், முகம் என்ற சொல்லைத் தவிர தமிழில் வேறு சொல் இல்லையா?

முகம் என்ற சொல்லும் வடசொல்தான் என்று வழக்குக்கு வருவோர் இருக்கிறார்கள். வடமொழியில் முகம் என்ற சொல் முகத்தைக் குறிக்கும் பொருளில் வழங்கப்படுகிறது. இவ்விடத்தில்தான் வேர்ப்பொருள் ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

முகர் என்ற வினைவேர் மூக்கினால் ஒன்றினை முகர்ந்து பார்ப்பதைக் குறிக்கிறது. முகத்தை நீட்டுமாறு, அசைக்குமாறு செய்வதற்கு முகரும் வினையே காரணமாகிறது. முகர்வதற்காகக் குவிந்ததால்தான் நாய், பன்றி முதலான விலங்குகளின் முகங்கள் கூம்பு வடிவமாக முன்வந்தன. முகத்தின் நடு உறுப்பாக விளங்குவது மூக்கு. அதனால் முகர் என்ற வினையோடு தொடர்புடைய உடலுறுப்பு முகம் என்பதில் ஐயமில்லை.

முகு என்ற சொல் விருப்பம் என்ற பொருளைத் தருவது. விருப்பமோ வெறுப்போ உடனே அது முகத்தில் வெளிப்படுகிறது. அதனால், உள்ளத்தின் நிலையைக் காட்டும் உறுப்பு என்றும் முகத்தைக் கருதலாம்.

திருக்குறளில் 'முகநக நட்பது நட்பன்று', 'நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்' என, பல இடங்களில் முகம் என்ற சொல் ஆளப்படுகிறது. 'வாள்முகம் துமிப்பவள்' என்று குறுந்தொகையும் (227) 'கூர்வாள் குவிமுகம் சிதைய' என்று அகநானூறும் (144) சுட்டுகின்றன. எனவே, முகம் தூய தமிழ்ச்சொல் என்பதில் ஐயுறத் தேவையில்லை.

முகத்திற்குத் தமிழில் வழங்கப்படும் பிற சொற்கள் பேச்சு வழக்கில் அழியாமல் இருக்கின்றன. மூஞ்சி, முகரை என்பன அச்சொற்கள். மூய் என்றால், எல்லாம் முடியும் இடம். நெருங்கிச் சூழ்ந்த நிலைக்கும் மூய்தல் என்று பெயர். புலன்களின் நெருங்கிச் சூழ்ந்த இடம் என்ற பொருளில் மூய் என்ற வினையோடு 'தி' என்ற விகுதி சேர்ந்தது. மூய்தி என்ற சொல்லே மூஞ்சி ஆனது (தெலுங்கில் மூத்தி). முகர்தல் என்ற வினைவேர் 'ஐ' என்ற தொழிற்பெயர் விகுதி பெற்றால், அது முகரை ஆகிறது. எதுகை மோனையைப் பேச்சு வழக்கில் எகனை முகனை என்பார்கள். மோனை என்பது சொல்லின் முகமாக இருக்கக்கூடிய முதலெழுத்து. மோனை, முகனை என்பனவும் முகத்தைக் குறிக்கும் சொற்களே.

முகம் என்பதற்கு எத்தனை சொற்கள் கிடைத்துவிட்டன பாருங்கள். முகம், மூஞ்சி, முகரை, முகனை. இவற்றில் பலவும் பேச்சுத் தமிழில் வாழ்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

- மகுடேசுவரன்






      Dinamalar
      Follow us