PUBLISHED ON : மே 29, 2017

பல்லாங்குழி, ஒத்தயா ரெட்டையா, ஊதிக்கலைத்தல் என புளியங்கொட்டைகளை வைத்து விளையாடப்படும் விளையாட்டுகள் ஏராளம். அதில், சுவாரஸ்யமான ஒன்றுதான், முத்து செதுக்குதல்... புளியங்கொட்டை (புளிமுத்துகளை) சிப்பி வைத்து செதுக்கி அள்ளும் விளையாட்டு என்பதால், முத்து செதுக்குதல் என்று இவ்விளையாட்டுக்கு பெயர் வந்தது.
அதிகபட்சமாக ஆறு சிறுவர்கள் வரை சேர்ந்து விளையாடலாம். கொஞ்சம் புளியங்கொட்டைகளும், தட்டையான செதுக்கு சிப்பியும் (உடைந்த செங்கல், சிமென்ட் ஸ்லாப், உடைந்த தட்டோடு போன்றவற்றில் ஏதேனும் ஒன்று) இந்த ஆட்டத்திற்குத் தேவை.
1. இரண்டு கார் டயர்களை சேர்த்தால் எவ்வளவு பெரியதாக இருக்குமோ, அந்த அளவுக்கு வட்டத்தை வரைந்து கொள்ளுங்கள்.
2. அந்த வட்டத்துக்குள், சிறுவர்கள் அனைவரும் புளியங்கொட்டைகளை வைக்க வேண்டும். உதாரணத்துக்கு, 40 புளியங்கொட்டைகள் என்று முடிவெடுத்தால், சிறுவர்கள் எல்லோரும் தம்மிடமுள்ள 40 புளியங்கொட்டைகளை வட்டத்துக்குள் வைக்க வேண்டும்.
3. ஆட்டத்தை தொடங்குவதற்கு முன்னால், யார் முதலில் சிப்பியால் செதுக்கப் போகிறவர் என்பதை முடிவு செய்ய வேண்டும். அதற்கு இருபது அடி தொலைவில் ஒரு பக்கவாட்டு கோட்டை வரைந்து, அதை நோக்கி அனைவரும் தங்களுடைய சில்லை வீசுங்கள். யாருடைய சிப்பி, கோட்டை தாண்டாமல், கோட்டுக்கு நெருக்கத்தில் விழுகிறதோ அவர்தான் முதல் ஆட்டக்காரர். அதற்கு அடுத்தபடியாக நெருக்கத்தில் உள்ள சிப்பிக்கு உரியவர் அடுத்து ஆடுபவர் என்று வரிசைப்படி முடிவுசெய்து கொள்ள வேண்டும்.
4. இப்போது ஆட்டத்தைத் தொடங்க வேண்டியதுதான். முதல் ஆட்டக்காரர், வட்டத்துக்குள் உள்ள புளியங்கொட்டைகளை நோக்கி சிப்பியை வேகமாக எறிய வேண்டும். அதாவது, புளியங்கொட்டைகளை செதுக்குவது போன்று, பக்கவாட்டில் விர்ரென்று சிப்பியை வீச வேண்டும்.
5. எவ்வளவு புளியங்கொட்டைகள், வட்டத்துக்கு வெளியே சிதறி விழுகிறதோ, அவை அனைத்தும் அவருக்கு. ஆனால், எறியப்படுகிற சிப்பி வட்டத்துக்குள்தான் இருக்க வேண்டும். வட்டத்துக்கு வெளியே போய் விழுந்தால், சிதறிய முத்துகளை மறுபடியும் எடுத்து உள்ளே வைத்துவிட வேண்டும்.
6. வெற்றி பெற்றவர், மீண்டும் முத்து செதுக்கலாம். ஆனால், முத்து எதுவும் வட்டத்தை விட்டு வெளியே வரவில்லை என்றால், அடுத்தவர் ஆட வேண்டும்.
- மு. கோபி
