PUBLISHED ON : ஆக 21, 2017
நவீன கற்பித்தல் முறையின் அடுத்தகட்ட வளர்ச்சியாக, திறன் பலகை கற்பித்தல் முறை (Smart Board Education) பல பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பாடங்களைக் காட்சி வடிவிலும், காணொளி வாயிலாகவும் கற்பிக்கும் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் கற்றலை மேலும் எளிமையாக்குமா? என்று சென்னை, போலச்சேரி, மகரிஷி வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்களுடன் உரையாடினோம்.
திறன் பலகையில் பாடங்களைப் படிப்பது சுலபம். உற்சாகம். பாடப் புத்தகம் படிப்பதைவிட இது எளிது. நன்கு மனத்தில் பதியும். ஆசிரியர்களும் குறுகிய நேரத்துக்குள்ளேயே எல்லா பாடங்களை எடுத்துச் சொல்கிறார்கள். இன்னும் பரவலாக எல்லா பள்ளிகளிலும் ஸ்மார்ட் போர்டு வந்தால், மாணவர்களின் கல்வித் தரம் நிச்சயம் உயரும்.
த.விஷ்ணுசரண், 7ம் வகுப்பு
ஆசிரியர்கள் நேரடியாக வகுப்பறையில் கற்பிக்கும்போது, சில சமயம் சில பாடங்கள் புரியாமல் போகலாம். ஆனால், படங்கள், வீடியோக்கள் மூலம் பாடம் கற்பிக்கப்படுவதால், அந்தப் பிரச்னை இல்லை. கற்பனைத் திறன் விரிவடைகிறது. எல்லா பள்ளிகளிலும் ஸ்மார்ட் போர்டு கல்வி முறை புழக்கத்துக்கு வரவில்லை. செலவு அதிகம். ஆனால், பள்ளிக் கல்வித் துறை நினைத்தால், இதை அரசுப் பள்ளிகளுக்கு வாங்கித் தர முடியும். மாணவர்களுடைய புரிந்துகொள்ளும் திறன், இதனால் இன்னும் மேம்படும்.
ஸ்ரீ.ஹரிஹரன், 8ம் வகுப்பு
ஸ்மார்ட் போர்டின் சிறப்பே, அதன் நேரடித்தன்மைதான். உதாரணமாக, வரலாற்றுப் பாடத்தில் போர் பற்றி படிக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அங்கே, எழுத்தால் தான் எதையும் கற்பனை செய்து பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், போர் எப்படி நடந்திருக்கும் என்பது தெரியாது.
அதை வீடியோக்களாகப் பார்க்கிறபோது, அந்தக் காலச் சூழல், அவர்கள் அணிந்திருக்கும் உடைகள், ஆயுதங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம். பின்னர் மீண்டும் புத்தகங்களைப் படிக்கும்போது, வரலாறு காட்சிகளாக மனத்தில் பதிந்திருக்கும். அதை நினைவில் வைத்துக்கொண்டு, தேர்வு எழுதிவிடலாம். எத்தனை காலம் ஆனாலும் மறக்கவும் மறக்காது.
ச். முஹம்மது ஃபலாஹ், 6ம் வகுப்பு
உண்மையில் இந்த முறை ஆசிரியர்களுக்குத்தான் வரப்பிரசாதம். கரும்பலகையைப் பயன்படுத்திச் சொல்லிக்கொடுத்தவர்களுக்குக் கிடைத்த நல்ல கருவி இது. அவர்கள், எல்லாவற்றையும் காட்சிகளாக, விளக்கிச் சொல்லும்போது, ரொம்ப சுலபமாகப் புரிகிறது. மீண்டும் மீண்டும் பல வீடியோக்களைப் போட்டுப் பார்த்து, ஞாபகப்படுத்திக் கொள்ளலாம். இதனால், ஆசிரியர்களுடைய பங்கு இல்லாமல் போய்விடவில்லை. இன்னும் சொல்லப் போனால், அவர்கள் இந்த வீடியோக்களை வைத்துக்கொண்டு, இன்னும் ஆழமாகச் சொல்லிக் கொடுக்க உதவியாக இருக்கிறது.
த.தர்ஷிணி, 7ம் வகுப்பு
ஸ்மார்ட் போர்டுடைய சிறப்பே, அதனோடு இணைந்துள்ள இணையம்தான். எந்த வகுப்பாக இருந்தாலும், அதில் நடைபெறும் சமீபத்திய விஷயங்களை, உடனடியாக இணையத்தில் இருந்து டவுன்லோடு செய்துகொண்டு, தெரிந்துகொள்ளலாம். இன்னொரு முக்கியமான விஷயம், இன்டராக்டிவிட்டி. அதாவது, மாணவர்களே போர்டைத் தொட்டு, நேரடியாக பல கேள்விகளுக்குப் பதில் சொல்லி, கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். இது கரும்பலகையாகவும் பயன்படும், தொடுதிரையாகவும் பயன்படும், தொலைக்காட்சியாகவும் பயன்படும். பிரமாதமான சாதனம்.
எஸ்.லேமினா, 8ம் வகுப்பு
ஸ்மார்ட் போர்டை ஆன் செய்துவிட்டால், வேறு எங்கும் கவனம் சிதறவே சிதறாது. பக்கத்தில் இருப்பவர்களோடு பேசத் தோன்றாது. அரட்டை அடிக்கத் தோன்றாது. திரையில் என்ன வரும் என்பதைப் பார்த்து தெரிந்துகொள்வதில்தான் கவனம் இருக்கும். கவனம் சிதறாமல் படிப்பதால், ஏராளமான விஷயங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. எல்லா பாடங்களும் காட்சிப்படுத்தப்படுவதால், வகுப்பில் டீச்சரால் புரியவைக்க முடியாத விஷயங்களையும் புரிந்துகொள்ள முடியும்.
ந.லக் ஷணா, 6ம் வகுப்பு

