PUBLISHED ON : டிச 30, 2019

குத்துச்சண்டையில் இந்தியப் பெண் ஒருவர் எப்படி உலகப் போட்டிகளில் அதிக பதக்கங்களை வென்று உலக சாதனை படைக்க முடியும்? அதுவும் மணிப்பூர் போன்ற வசதிகள் குறைவான மாநிலத்திலிருந்து வந்து எப்படிப் புகழ் பெறமுடியும்? திருமணமாகி, மூன்று குழந்தைகள் பெற்ற பிறகும், எப்படித் தங்கங்களைக் குவிக்க முடியும்? இது எப்படிச் சாத்தியம்? மேரி கோமின் வாழ்க்கைதான் இவை அனைத்துக்குமான பதில்.
உலக மகளிர் குத்துச்சண்டைப் போட்டியில் 8 பதக்கங்கள் வென்ற ஒரே வீரர் என்கிற உலக சாதனையைப் படைத்துள்ளார் மேரி கோம். 48 கிலோ எடைப்பிரிவில் 6 தங்கம், 1 வெள்ளி மற்றும் 51 கிலோ எடைப்பிரிவில் வெண்கலம். ஆடவர் பிரிவில் கியூபாவின் ஃபெலிக்ஸ் சவோன் 7 பதக்கங்கள் வென்றுள்ளார். அவருடைய சாதனையைப் பின்னுக்குத் தள்ளி குத்துச்சண்டை விளையாட்டில் தனக்கு இணையான இன்னொரு வீரர் இல்லை என்று நிரூபித்துள்ளார். 2012 ஒலிம்பிக்ஸில் வெண்கலம், 5 ஆசிய சாம்பியன் பட்டங்கள், ஆசிய, காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கங்கள், இந்திய ஓபன், இந்தோனேஷியா பிரசிடென்ட் கோப்பை போட்டிகள் என, மேரி கோம் வெல்லாத போட்டிகளே கிடையாது.
17 வயதில் முறையாகக் குத்துச்சண்டை பயில ஆரம்பித்துப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார் மேரி கோம். வீட்டுக்குத் தெரியாமல் விளையாடி, மாநில அளவிலான போட்டியில் தங்கம் வென்றபோதுகூட மூச்சுவிடவில்லை. செய்தித்தாள் வழியாகத்தான் பெற்றோருக்கு விஷயம் தெரிந்தது. படிப்புக்கான செலவை விடவும் குத்துச்சண்டை விளையாட்டுக்குக் குறைவாகச் செலவாகும் என்பதால் அனுமதியளித்துள்ளார் மேரி கோமின் தந்தை. திருமணத்துக்குப் பிறகும் எந்தச் சாக்குப்போக்கும் சொல்லாமல் விளையாடி, பதக்கங்கள் வெல்லவேண்டும் என்று முடிவெடுத்தார். விளையாட்டில் எனக்குப் பக்கபலமாக இருப்பேன் என்றால்தான் திருமணத்துக்குச் சம்மதிப்பேன் என்று வருங்காலக் கணவரிடம் சத்தியம் வாங்கிய பிறகே மணம் முடித்துள்ளார்.
மணிப்பூர் பெண்கள் முடிவெடுப்பதில் துணிச்சல்காரர்கள் என்பதால், அந்தச் சூழலில் வாழ்ந்த மேரி கோம் ஒருபோதும் எதற்கும் தயங்கியதில்லை. மேரிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்த பிறகுதான், 2012 ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வென்றார். 2013இல் மூன்றாவது குழந்தை பிறந்த பிறகு, சிறிது ஓய்வு எடுத்துவிட்டு வழக்கம்போல போட்டிகளில் பங்கேற்று தங்கங்களை அள்ளிக்கொண்டு வந்தார். அடுத்த ஆண்டில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றார்.
2019ஆம் ஆண்டு தன்னை விடவும் 13 வயது குறைவான உக்ரைன் வீராங்கனையைத் தோற்கடித்து, உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார். இரட்டை மகன்களில் ஒருவருக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்ற சமயத்தில், மனஉறுதியுடன் சீனா சென்று ஆசியன் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்ற பிறகுதான் மகனைப் பார்க்க ஓடோடி வந்தார். இந்த மனஉறுதியும் விடாமுயற்சியும் தான் மேரி கோம். வயதோ, திருமணமோ, மகனின் உடல்நலக் குறைவோ எந்தச் சூழலும், அவருடைய கவனத்தைத் திசை திருப்பவில்லை.
ஒரு முறை சாதித்தால், ஒரு முறை பதக்கம் வென்றுவிட்டால் அத்துடன் எளிதில் திருப்தியடைய வேண்டாம். ஒரு வெற்றியுடன் சுருங்கிப் போகவேண்டாம். முயற்சியைக் கைவிடவேண்டாம் என்கிற அறிவுரையைச் சொல்ல தகுதியானவராக தன்னைத் தானே செதுக்கி இருக்கிறார் மேரி கோம்.
- செந்தில்
