PUBLISHED ON : ஜன 18, 2016
எல்லோருக்கும் வணக்கம்!
இதமான குளிர் மிச்சம் இருக்கும், தை மாதத்தில் உங்களோடு கை குலுக்குகிறது 'பட்டம்'.
நிறைய பத்திரிகைகள் இருக்கின்றன. பெரியவர்கள் படிக்கிறார்கள். அவற்றை நாம் புரட்டிப் பார்க்கிறோம். திரும்பத் திரும்ப சில செய்திகளையே பார்க்க வேண்டி இருக்கிறது. எத்தனை நாளைக்குத்தான் பெரியவர்கள் படித்துப் போட்ட பத்திரிகைகளையே நாம் படிப்பது? முழுக்க முழுக்க மாணவர்களுக்கு என்றே ஒரு பத்திரிகை இருந்தால் எப்படி இருக்கும்?
இதுவரை தமிழில் இல்லாத ஒரு பெரிய முயற்சியாக, தொடக்கத்தில் வாரத்துக்கு ஓர் இதழ் என்கிற முறையில் இதோ உங்கள் கைகளில் தவழ்கிறது, 'பட்டம்'!
படித்துப் பாருங்கள், பிடித்துப் போகும்!
அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள், அறிவியல் உலக முன்னேற்றங்கள், நாளுக்கு நாள் நடைபெறும் கண்டுபிடிப்புகள் போன்ற செய்திகளின் வரிசை ஒரு புறம்.
வார்த்தைக்கு வார்த்தை வேடிக்கை, மூளையைத் தூண்டி சிந்திக்க வைக்கும் விஷயங்கள், புதிர்கள், வகைப்படுத்த முடியாத சுவாரசியங்கள், கதைகள், தொடர்கள், கேள்வி பதில் ஆகியவை மறுபுறம்.
இவற்றிற்கு இடையில் மகிழ்ச்சியைக் கூட்டும் இன்னொரு விஷயமும் இருக்கிறது. பள்ளியில் ஆசிரியர் பாடம் சொல்லித் தருகிறார். அதை நினைவில் நிறுத்துவதற்காக, வீட்டில் அதையே ஹோம் வொர்க்-ஆக செய்து பார்க்கிறோம். அப்படியும் சில விஷயங்கள் நம் கைக்குச் சிக்காமல் கண்ணாமூச்சி காட்டலாம். இனி அந்தப் பிரச்னை இல்லை.
உங்கள் விருப்பத்துக்கு உரிய 'பட்டம்' இதழில் சில பகுதிகள் இடம் பெற்றிருப்பதைப் பார்க்கப் போகிறீர்கள். இந்தப் பகுதிகள், உங்கள் பாடப் புத்தகத்தில் இருக்கும் விஷயங்களை, ஆர்வத்தைத் தூண்டும் வடிவத்தில் உங்களுக்குக் கொடுக்கும். ஒரு கதையாக இருக்கலாம், கட்டுரையாக இருக்கலாம், கவிதையாக இருக்கலாம். எந்த உருவத்தில் வந்தாலும் அவை உங்கள் பாடத்தின் ஒரு பகுதியை உங்களால் மறக்கவே முடியாத வகையில் உங்கள் மனதில் பதிய வைக்கும். உதாரணத்துக்கு, இதழில் மழையைப் பற்றிய பாடல் ஒன்று இருக்கிறது. ஆடிக்கொண்டே அதைப் பாடலாம். அத்தோடு, 'இரட்டைக் கிளவி' என்கிற இலக்கண விஷயம் உங்கள் மனதில் பதிந்துவிடும்!
இவை எல்லாம் போக, நம்மைச் சுற்றி நடக்கும் அன்றாடச் செய்திகளில் நாம் அறிந்துகொள்ள வேண்டியவை ஏராளம். அடுத்து, நமக்கு எல்லாம் மிகவும் பிடித்த விளையாட்டுச் செய்திகள், உங்கள் பள்ளிகளில் நடந்த விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகள் தொடர்பான செய்திகள்… இவை எல்லாம் ஒரு செய்தித் தொகுப்பாக உங்களை வந்து சேர்ந்துவிடும்.
இதெல்லாம் சந்தோஷம்தான், நீங்களேகூட, எழுதுவது, வரைவது என்று பல வித்தைகளைக் கை வசம் வைத்திருக்கும் கில்லாடிகள்தானே. உங்கள் கைவண்ணமும் 'பட்டம்' இதழில் இடம் பெறும்!
இப்போது வானத்தில் பட்டம் விட்டு, மகிழும் பருவத்தில் இருக்கிறீர்கள். சீக்கிரத்திலேயே கல்வியில் பட்டம் பெற்று வாழ்க்கை என்னும் வானத்தில் பறக்கக் காத்திருக்கிறீர்கள்.
இப்போது நீங்கள், உங்கள் ஆசிரியர், உங்கள் மீது பேரன்பு வைத்திருக்கும் பெற்றோர் ஆகியோரின் பங்கெடுப்பு மற்றும் ஆதரவோடு பட்டொளி வீசிப் பறக்க ஆரம்பித்திருக்கிறது 'பட்டம்'!
இனியென்ன… வண்ண வண்ணப் பட்டங்கள் போல் உயரே பறப்போம்; பல விதமான பட்டங்கள் பெற்று உலகில் சிறப்போம்!
அன்புடன்,
ஆசிரியர்
பட்டம்
