PUBLISHED ON : மே 16, 2016
தேர்தல் பிரச்சாரப் பரபரப்பு ஒருவழியாக ஓய்ந்துவிட்டது. நம்மை, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு யார் ஆளப் போகிறார்கள் என்று தெரிந்துகொள்ள நம் அனைவருக்கும் ஆவலாகத்தான் இருக்கிறது. நம் வீட்டுப் பெரியவர்கள் எல்லாம் ஓட்டுப் போட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் (Electronic voting machine) என்ன சொல்லப்போகிறது? யாரைக் கைகாட்டப் போகிறது?
அது ஒரு பக்கம் இருக்க, அந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொள்வோமே...
இந்த இயந்திரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது 1982ஆம் ஆண்டில். அப்போது கேரளாவில் வட பரவூர் (North Paravur) தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. சில வாக்குச் சாவடிகளில் மட்டும் சோதனை முயற்சியாக இந்த இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.
அதன் பிறகு, 1998ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், டில்லி ஆகிய மாநிலங்களின் 16 சட்டமன்றத் தொகுதிகளில் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டது. இந்தியா முழுக்க இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி வாக்குப் பதிவு நடைபெற்றது, 2004 நாடாளுமன்றத் தேர்தலின்போதுதான்!
ஒரு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் அதிகபட்சமாக 3,840 வாக்குவரை பதிவாகும். ஒரு வாக்குப் பதிவு எந்திரத்தில் 16 வேட்பாளர்களின் பெயர் வரை பதிவு செய்ய முடியும். அதற்கு மேலும் பெயர்கள் இருந்தால் அடுத்தடுத்த இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும்.
ஒரு தொகுதியில் அதிகபட்சம் 64 பேர் வரை போட்டியிடும் போதுதான் மின்னணு வாக்கு இயந்திரத்தைப் பயன்படுத்த முடியும். அதிகமான வேட்பாளர்கள் இருந்தால் வாக்குச் சீட்டு முறை பின்பற்றப்படுகிறது.
