PUBLISHED ON : நவ 04, 2019

பழைய பொருட்களைத் தேடுவது, மனிதர்களின் இயல்பான குணங்களில் ஒன்று. அந்தக் காலத்தில், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைத் தோண்டி, அங்கிருந்த பொருட்களைத் திருடுவது ஒரு வழக்கம்.
குறிப்பாக, எகிப்திய பிரமிடுகளில் குவிந்திருந்த செல்வங்களைத் திருடுவது, இருநூறு ஆண்டுகளுக்கு முன்புவரைகூட ஒரு தொழிலாக இருந்தது.
இதையெல்லாம் அகழாய்வு என்று சொல்ல முடியாது.
மறுமலர்ச்சிக் காலத்தின்போது (Renaissance period, காலம்: கி.பி. 1300 - 1600) கிரேக்க, ரோமானியக் கட்டமைப்புகள் பற்றிய தேடல் ஐரோப்பாவில் ஏற்பட்டது.
மண்வெட்டி, குந்தாலி (Pickaxe) போன்ற கருவிகளைக்கொண்டு மண்ணைத் தோண்டுவதும், கிடைக்கும் பொருட்களைச் சந்தையில் விற்பதுமே அந்தக் கால அகழாய்வுகளின் அதிகபட்ச நோக்கம். இதனாலும், மறைந்திருந்த பழைய நகரங்கள் வெளிப்படத் தொடங்கின.
15ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்த, இத்தாலியர்களான ஃப்ளாவியோ பியோண்டோ (Flavio Biondo), போஜ்யோ ப்ராச்யோலினி (Poggio Bracciolini) ஆகிய இருவரும் தொல்லியல்துறையின் முன்னோடிகள் என்று கருதப்படுகின்றனர்.
இதன்பிறகு, எவ்வளவு ஆழமாகத் தோண்டுகிறோமோ, அவ்வளவு பழமையான பொருட்கள் கிடைக்கும் என்ற கருத்து உருவானது.
19ஆம் நூற்றாண்டில், டென்மார்க்கைச் சேர்ந்த கிறிஸ்டியன் தாம்சன் (Christian Thomsen), யென்ஸ் ஒர்சா (Jens Worsaae) ஆகியோர் தொல்லியல் அகழாய்வுப் பணிகளுக்கான நுட்பங்களையும் வழிமுறைகளை உருவாக்கி நடைமுறைப்படுத்தினர்.
தொல்லியலாளராக, எகிப்தைப் பற்றி ஆய்வுசெய்யும் அறிஞராக அறியப்படும் ஃப்ளிண்டர்ஸ் பீட்ரி (Flinders Petrie) பிரிட்டனில் பிறந்தவர்.
அகழாய்வில் தோண்டியெடுக்கப்படும் ஒவ்வொரு கைப்பிடி மண்ணும் ஆராயப்பட வேண்டும் என்பது இவரது கொள்கை. பழம்பொருட்களை எப்படிப் பாதுகாப்பது என்ற வழிமுறையையும் இவர்தான் உருவாக்கினார். இவையே அவருக்கு, 'நவீன தொல்லியலின் தந்தை' (The Father of Modern Archaeology) என்ற பட்டத்தைப் பெற்றுத்தந்தது.
