PUBLISHED ON : ஜூலை 15, 2024

மன்னர்கள் தங்கள் வெற்றியை அல்லது விழாக்களைக் கொண்டாட வீதி உலா வருவது வழக்கம். உலா என்பது, வலம் வருதல் என்ற பொருளைத் தரும். ஊர்வலம், பவனி, பவனியுலா, உலாப்புறம், உலாமாலை என்ற பெயர்களிலும் வீதி உலா அழைக்கப்படுகிறது.
யானை, தேர், குதிரை, பல்லக்குப் போன்றவற்றில் அரசர்கள் உலா சென்றனர். சங்க இலக்கியங்களிலும் உலா பற்றிய பாடல்கள் உள்ளன. நற்றிணையில் (பாடல் 190) 'அழிசி என்ற சோழ அரசன், தேன் மணக்கும் மலர்மாலை அணிந்து, தேரில் உலா செல்கிறான்' என்று குறிப்பிடப்படுகிறது. உரையாசிரியர் நச்சினார்கினியரும் உலா பற்றிய குறிப்புகள் தருகிறார். பெருங்கதை, சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம், முத்தொள்ளாயிரம் முதலிய நூல்களிலும் உலா பற்றிய செய்திகள் உள்ளன.
உலாவில் அரசர்கள், காப்பியத் தலைவர்கள், கடவுள், தலைவன் ஆகியோர் பாடுபொருளாக இருப்பார்கள். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் இயற்றிய தேவாரப்பாடல்களில் திருவிழாக்காலத்தில், இறைவன் திருவீதி உலா வரும் செய்திகள் இடம்பெற்றுள்ளன. மிதிலையில் இராமன் வீதியில் உலா சென்றபோது, மான்வருவது போலவும், மயில் வருவது போலவும், மின்னல் கூட்டங்கள் நெருங்கி வருவது போலவும் பெண்கள் கூட்டமாகச் சென்றதாகக் கம்பர் குறிப்பிடுகிறார்.
சிறப்பான நாட்களிலும், ஆலயத்திற்குச் செல்லும் நாட்களிலும் அரசன் வீதி உலா செல்வான். யானை மீது அமர்ந்து செல்வான். அப்போது வெண்கொற்றக் குடையின் நிழல் இருக்காது. இருபுறமும் பெண்கள் கவரி வீசி நிற்க, சங்கும் முரசும் இசைக்கும்.
வீதியின் இருமருங்கிலும் மாளிகையில் நிற்கும் மக்கள், மலர் தூவி, வாழ்த்தொலி எழுப்புவார்கள் என்று பெருங்கதை எனும் நூலில் குறிப்பிடப்பட்டு உள்ளது.