வலி மிகுதல் - பகுதி 19 : குற்றியலுகர வினையெச்சங்கள்
வலி மிகுதல் - பகுதி 19 : குற்றியலுகர வினையெச்சங்கள்
PUBLISHED ON : பிப் 04, 2019

தமிழ்மொழியில் பெரும்பாலானவை உகர ஈற்றுச் சொற்கள். சொல்லின் இறுதி ஓசை 'உ' என்ற குறிலோசையோடு முடியும். அன்பு, பண்பு, பந்து, தெங்கு போன்றவை உகர ஈற்றையுடைய பெயர்ச் சொற்கள். வினைச் சொற்களிலும் உகர ஈற்றோசையுடைய சொற்கள் கணக்கின்றி இருக்கின்றன. ஆடு, ஓடு, தேடு, போன்றவை ஏவல் பொருள் தரும் வினைவேர்கள். முடிவு பெறாமல் எச்சமாக எஞ்சி நிற்கும் வினையெச்சச் சொற்களிலும் உகர ஈற்றோசையுடைய சொற்கள் பற்பல.
கண்டு, நின்று, பணிந்து, போன்ற சொற்கள் முடிவுறாமல் எஞ்சி நிற்கின்றன. தம்மை அடுத்து ஒரு வினைச்சொல்லை வரவைக்கும் தன்மையோடு இருக்கின்றன. கண்டு சொன்னான், பணிந்து பேசினான் என்று அவை அடுத்தொரு வினைச் சொல்லை நாடி நிற்கின்றன. அதனால் இத்தகைய எச்சவினைகள் வினையெச்சங்கள் எனப்பட்டன.
வல்லின உயிர்மெய் எழுத்தில் உகர ஓசையை இறுதியாகக் கொண்டு, ஒரு சொல் இருந்தால், அது குற்றியலுகரச் சொல் என்பதை அறிவீர்கள். குசுடுதுபுறு ஆகிய எழுத்துகளில் ஒன்றை ஈற்றெழுத்தாகக் கொண்டு அந்த வினையெச்சச் சொல் இருக்குமாயின் அங்கே வலிமிகுமா மிகாதா என்று பார்க்க வேண்டும்.
படித்துக் கூறினான்
பிடித்துத் தொங்கினான்
உடைத்துப் போட்டான்
வெளுத்துக் கட்டியது
மேற்கண்ட வினையெச்ச முதற்சொற்களில் படித்து, பிடித்து, உடைத்து, வெளுத்து என 'து' என்னும் குற்றியலுகர ஈறு வருவதைப் பாருங்கள்.
'க், ச், ட், த், ப், ற்'ஆகிய வல்லின மெய்யை அடுத்து ஒரு குற்றியலுகர ஈற்றெழுத்து (குசுடுதுபுறு) வருமாயின் அது வன்தொடர்க் குற்றியலுகரம். வல்லின மெய்யைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் என்று பொருள்.
வன்தொடர்க் குற்றியலுகர ஈற்றையுடைய வினையெச்சத் தொடரில், கட்டாயம் வலி மிகும். மேற்சொன்ன எடுத்துக்காட்டுகளில், வலி மிகுந்திருப்பதைப் பாருங்கள்.
ங், ஞ், ண், ந், ம், ன் ஆகியவை மெல்லின மெய்கள். இம்மெய்களை அடுத்து, ஒரு குற்றியலுகர ஈற்றெழுத்து (குசுடுதுபுறு) தோன்றினால் அது மென்தொடர்க் குற்றியலுகரம். பணிந்து, விளைந்து, கண்டு, கொண்டு, நின்று, மென்று ஆகியவை மென்தொடர்க் குற்றியலுகர வினையெச்சச் சொற்கள். அவற்றுக்கு வலி மிகுதல் கூடாது. பணிந்து பேசினான், விளைந்து செழித்தது, நின்று பேசினான், மென்று தின்றாள். இவ்வேறுபாட்டை மறக்கவே கூடாது.
வன்தொடர்க் குற்றியகலுகர ஈற்றையுடைய வினையெச்சத்திற்கு வலிமிகும் (படித்துப் பார்த்தான்)
மென்தொடர்க் குற்றியலுகர ஈற்றையுடைய வினையெச்சத்திற்கு வலிமிகாது (எழுந்து சென்றான்)
- மகுடேசுவரன்
