
நாம் உண்ணும் அரிசியை ஒரு பூதமாக இன்றைய மருத்துவம் சித்திரித்துவிட்டது. நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு அரிசிதான் காரணம் என நினைக்கிறோம். அதுமட்டுமன்றி, அரிசி குறித்து எண்ணற்ற கற்பனைக் கதைகள் உள்ளன. நம்முடைய சில கற்பனைகளும், அதற்குப் பின்னால் இருக்கும் உண்மைகளும் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.
கற்பனை
அரிசியில் உயர் க்ளைசெமிக் குறியீடு உள்ளது; சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் சாப்பிடக் கூடாது.
உண்மை:
நாம் அரிசியை சாம்பார், ரசம், காய்கறிகள், நெய், தயிர் ஆகியவற்றோடு சேர்த்து உண்கிறோம். இது உயர் க்ளைசெமிக் குறியீட்டைக் குறைக்கும். ஆகவே, சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் தைரியமாகச் சாப்பிடலாம்.
பூடான் நாட்டில் அரிசி முக்கிய உணவு. அங்கு சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை மிகக் குறைவு.
கற்பனை
அரிசியில் மாவுச்சத்து உள்ளது.
உண்மை:
சமைத்த அரிசியில் 10 சதவீதத்திற்கும் குறைவான அளவே மாவுச்சத்து உள்ளது.
கற்பனை:
அரிசியில் மாவுச்சத்து அதிகம் இருப்பதால், இரவில் அரிசி உணவு சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
உண்மை:
எந்தவொரு உணவுப் பொருளிலும், வெறும் மாவுச்சத்து அல்லது புரதம் அல்லது கொழுப்பு என, ஒரே ஒரு சத்துப்பொருள் மட்டுமே இருக்காது. அதில் வைட்டமின்கள், அமினோ அமிலம், தாது சத்து என, பல்வேறு வகையான சத்துகள் நிறைந்திருக்கும். மேலும், மாவுச்சத்தும் உடலுக்குத் தேவையான ஒன்றுதான். இது, மூளையை அமைதிப்படுத்த உதவும். ஆகவே, இரவில் அரிசி உணவைத் தேவையான அளவில் எடுத்துக் கொள்ளலாம்.
கற்பனை:
வெள்ளை அரிசியைவிட பழுப்பு அரிசி சிறந்தது.
உண்மை:
பல ஆண்டுகளாக கைக்குத்தல் அரிசியையோ, ஒரு தடவை மெருகேற்றப்பட்ட அரிசியையோதான் பயன்படுத்தி இருக்கிறோம். அது வெள்ளை அரிசிதான்; பழுப்பு அரிசி கிடையாது.
வெள்ளை அரிசியில் தேவையான அளவு நார்ச்சத்து இருப்பதோடு, மற்ற ஊட்டச்சத்துகளும் சேர்ந்தே இருக்கின்றன. வெள்ளை அரிசி சிறந்ததுதான்.
ருஜுதா, ஊட்டச்சத்து நிபுணர்

