
உலகம் எங்கும் கொண்டாடப்படும் விழாக்கள், பண்டிகைகள் சுவையான உணவுகள் இன்றி நிறைவடைவதில்லை. அதுவும் இந்தியா மாதிரியான பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் பண்டிகைகளுக்கும் பலகாரங்களுக்கும் பஞ்சமில்லை. இந்த வரிசையில் தனி இடம் பிடிப்பவை தீபாவளிப் பலகாரங்கள். இன்று பல புதுவகை இனிப்புகள் நம்மிடம் வந்து சேர்ந்துள்ளன. 500 ஆண்டுகளுக்கு முன்னால் தீபாவளிக்கு என்னென்ன பலகாரங்கள் இருந்தன என்று நமக்குத் தெரியுமா? அவற்றைக் கல்வெட்டுகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
கி.பி.1542ஆம் ஆண்டைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டு ஒன்று திருப்பதி பெருமாளுக்கு தீபாவளி அன்று அதிரசம் படைப்பதற்காகக் கொடுக்கப்பட்ட நிவந்தனம் (நிலதானம் அல்லது பணம்) பற்றிக் குறிப்பிடுகிறது. இது விஜயநகர அரசரான அச்சுத தேவராயர் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தது.
கி.பி.1596ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு திருப்பதியில் எழுந்தருளி உள்ள ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளுக்கு தீபாவளி அன்று திருப்பணியாரம் உள்ளிட்ட பலகாரங்கள் செய்ய பச்சைப் பயறும் வெல்லமும் கொடுக்க ஒப்புக்கொண்டது பற்றிக் கூறுகிறது. இது ஸ்ரீவேங்கடபதி தேவ மகாராயரின் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்தது.
காஞ்சி வரதராஜப்பெருமாள் கோவிலில் விஜயநகர மன்னர் சதாசிவராயர் காலமான கி.பி. 1558ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று உள்ளது. இதில் தீபாவளி 'தீவிளி நாள்' என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நாளில் இறைவனுக்கு அப்பம், அதிரசம், வடை, சுகியன், தோசை, பணியாரம் ஆகிய பலகாரங்கள் செய்வர். இவற்றைச் செய்வதற்காக அரிசி, பயறு, நெய், மிளகு, சீரகம் உள்ளிட்டவற்றை வாங்க நிவந்தங்கள் தரப்பட்டன. இந்தச் செய்தியைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.