PUBLISHED ON : ஆக 21, 2017
'வுல்ஃபியா அர்ஹிசா' என்பதைப் படித்துவிட்டு, ஏதோ உங்களை வசை பாடுவதாக எண்ண வேண்டாம். 'லெம்மாசியே' தாவரக் குடும்பத்தைச் சார்ந்த 'வுல்ஃபியா அர்ஹிசா' (Wolffia Arrchiza) என்பதுதான், உலகிலேயே மிக மிகச் சிறிய மலர். இது நீரில் மிதந்து வளரும் தாவரம். ஓர் இலை மட்டும்தான் இருக்கும். அவை 1.5 மி.மீ.
அளவு மட்டுமே இருக்கும். வேர்கள் கிடையாது. 'டக்வீட்' (Duckweed) என்பது இதன் ஆங்கிலப் பெயர். 'வாட்டர் மீல்' (Watermeal) என்ற வேறு பெயரும் உண்டு. இலைப்பாசி, வாத்துப் பாசி என்ற பல பெயர்களில் இது அழைக்கப்படுகிறது. பாசி என்ற அடைமொழியோடு குறிப்பிடப்பட்டாலும், இது பாசி வகை அல்ல. இந்தத் தாவரத்தின் மலர்கள் மிகச் சிறியவை. வாத்துகளின் கால்களுக்கு இடையே புகுந்து ஒட்டிகொண்டு, வாத்து ஒரு நீர் நிலையிலிருந்து மற்றொரு நீர் நிலைக்குச் செல்லும்போது, அங்கு தாவிப் படர்ந்து வளரும் என்பதால் இது, 'வாத்து களைச் செடி' என்றும் குறிப்பிடப்படுகிறது.
நம் நகத்தின் மீது சுமார் 12 செடிகளை வைத்துவிடலாம் என்றால், இது எவ்வளவு சிறியது என்பதை யூகித்துக்கொள்ளுங்கள். அவ்வளவு நுணுக்கமானது. அளவு சிறியது என்றாலும், இந்தத் தாவரம் பூ பூக்கும். ஒரு பூவின் விட்டம் 0.5 மி.மீ. அளவு மட்டுமே இருக்கும். ஊசியில் நூல் கோக்கும் துளைக்குள் மூன்று, நான்கு மலர்களைப் பொருத்தி விடலாம். ஒரு பூவின் எடை 150 மைக்ரோ கிராம் மட்டுமே! இரண்டு உப்புத் துகள் அளவு எடைதான்! நுண்ணோக்கியைப் பயன்படுத்தி, இந்த மலரின் அழகைக் கண்டு களிக்கலாம். இலைகளின் விளிம்பின் அடிப்பாகத்தில் இருக்கும் இடுக்கில் இருந்து பூ தோன்றும் மடல் போன்ற ஓர் உறுப்பினுள் ஒன்று அல்லது இரண்டு கேசரங்களும், ஒரு சூலகமும் இருக்கும். சூல் கொண்ட பின், ஒரே ஒரு விதைகொண்ட பழமாக இது மாறும். ஒரு வகையில் இதுதான் உலகின் மிக மிகச் சிறிய பழமும் கூட!
'கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது' என்பதுபோல, மிகச் சிறிய தாவரமாக இருந்தாலும், கழிவு நீர்க் குட்டைகளில் இந்தத் தாவரத்தை வளர்ப்பதன் மூலம் பல்வேறு மாசுகளை அகற்ற முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், கால்நடைத் தீவனம், மனிதர்களுக்குத் தேவையான புரதம் முதலியவற்றைக்கூட இந்தத் தாவரத்தைப் பயிர்செய்து அறுவடை செய்து பெறலாம்.