PUBLISHED ON : நவ 12, 2018

இன்று மருத்துவம் என்பது, பெரும் வணிகமாகி வருகிறது. இப்படியான சூழலில் ஒருவர் கிராமப்புற மக்களுக்காகத் தொடர்ந்து 44 ஆண்டுகளாக இலவச மருத்துவ சேவை செய்துவருகிறார். ரமணராவ், 1974இல் மருத்துவம் படித்து முடித்தபோது, அவரது தந்தை கிராம மக்களுக்குத் தொடர்ந்து மருத்துவ சேவை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டாராம். அதை இன்றுவரை கடைப்பிடித்து வருகிறார்.
இதய நிபுணரான இவர், பெங்களூருவில் பிரபலம். திரைத்துறையினர், தொழிலதிபர்கள், என பலருக்கும் சிகிச்சையளிப்பவர். ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் செயற்படும் இலவச மருத்துவமனையை, பெங்களூருவில் இருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ள பேகூர் என்ற கிராமத்தில் தொடங்கினார்.
வார நாட்களில் பெங்களூருவில் பணிபுரியும் ரமணா, ஞாயிற்றுக்கிழமை தோறும் பேகூருக்கு வந்துவிடுகிறார். 44 ஆண்டுகளில் ஒரு ஞாயிற்றுக்கிழமையைக்கூட தவறவிட்டதே இல்லை. ஆரம்பத்தில் தனது பணத்தில் இருந்தே இலவச மருந்து மாத்திரைகளைக் கொடுத்துள்ளார். பின்னர் நன்கொடைகள் வரத்தொடங்கின.
ஞாயிற்றுக்கிழமைகளில் சுமார் 700 முதல் 1,200 நோயாளிகள் வருகின்றனர். இவர்களுக்குப் பரிசோதனைகளும், மருந்துகளும் முற்றிலும் இலவசம். உயர்சிகிச்சை தேவைப்பட்டால், அதையும் இலவசமாகவே செய்கிறார். இவரது சேவையைப் பாராட்டி, மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது.
நம் நாட்டிற்கு இதுபோன்ற மருத்துவ உதவிகள் செய்வோர் எண்ணிக்கை பெருகவேண்டும் என்கிறார் ரமணா. தற்போது இவருக்கு உதவியாக, இவரது மனைவி, இரு பிள்ளைகள் (எல்லோருமே மருத்துவர்கள்) என, மொத்தக் குடும்பமும் துணை நிற்கிறது.
