PUBLISHED ON : ஜூலை 02, 2018

மண், மரம், கட்டை, சாணம் போன்றவற்றில் வளர்வன பூஞ்சைக் காளான்கள் (Fungi - ஃபங்கை). பல வண்ணங்களிலும், வடிவங்களிலும் இதைக் காணலாம். ஒரு செல் உயிரில் இருந்து, பல கிலோ மீட்டர் நீளம் வரையிலும் வளரும். தாவர உலகின் 'தேலோபைட்' (Thallophyte) பிரிவைச் சேர்ந்தவை. தாவரம், மண், விலங்கு, கடல், உணவுப் பொருட்கள், மனிதர்களின் தோல், உள்ளுறுப்புகள் என எல்லாவற்றிலும் வாழும். நாம் சுவாசிக்கும் காற்றில் கூட இவை இருக்கின்றன.
உடல் அமைப்பு
உடல் பகுதி 'தாலஸ்' (Thallus) எனப்படும். வேர், தண்டு, இலை என இவற்றின் பாகங்களைப் பிரித்தறிய முடியாது. ஏராளமான கிளைகள் கொண்ட நூல் வடிவ 'ஹைபா' (Hyphae) எனப்படும் இழைகளால் ஆனவை. 'ஹைபா' இழைகளின் தொகுப்பு பூசண வலை (Mycelium - மைசீலியம்) எனப்படும். செல் சுவரில், கைட்டின் (Chitin), பூஞ்சை செல்லுலோஸ் (Fungal cellulose) காணப்படும்.
பூஞ்சைகளில் 'குளோரோஃபில்' (Chlorophyll) எனப்படும் பச்சையம் கிடையாது. இவை உணவூட்டத்தை மட்குண்ணிகளாகவோ (Decomposer - டிகம்போசர்), ஒட்டுண்ணிகளாகவோ (Parasite - பாராசைட்) அல்லது கூட்டுயிர்களாகவோ (Symbiont -சிம்பியன்ட்) பெறுகின்றன.
இனப்பெருக்கம்
பூஞ்சைகளின் குடை, சிப்பி, பந்து, கோப்பை வடிவப் பகுதிகள் முதிர்ச்சியடைந்தவுடன், மிகமிகச் சிறிய வித்துகள் (Spores - ஸ்போர்ஸ்) வெளியாகின்றன. இவற்றில் பாலினப் பெருக்கமும் காணப்படுகிறது.
முக்கியத்துவம்
* மட்கிய பொருட்களில் காணப்படும் புரதங்களை அமினோ அமிலங்களாகச் சிதைக்கின்றன.
* இறந்த உடல்களைச் சிதைத்து கனிமச் சுழற்சி தொடர்ந்து நடைபெற உதவுகின்றன.
* 'ட்ரஃபல்' (Truffle), அகாரிகஸ் (Agaricus), மோரல் (Morel) போன்ற சிப்பி/குடைக்காளான்கள் புரதங்கள், வைட்டமின்கள் நிரம்பியவை. உணவாக உட்கொள்ளத் தகுந்தவை.
* ரொட்டி, பழச்சாறு தயாரிப்பில், சர்க்கரைக் கரைசலை ஆல்கஹாலாகவும், கார்பன் டை ஆக்ஸைடாகவும் நொதிக்கச் செய்ய ஈஸ்ட் பயன்படுகிறது.
* பூஞ்சைகள் ரொட்டி, உணவுப்பொருட்கள், பழக்கூழ், தோல் பொருட்கள் மீது வளர்ந்து அவற்றை வீணாக்குகின்றன. இவற்றில் சில நஞ்சுள்ளவை. சில பூஞ்சைகள் மனிதர்களுக்கும், தாவரங்களுக்கும் நோய்களையும், ஒவ்வாமையையும் ஏற்படுத்துகின்றன.
அப்படியா?
உலகில் மிகப்பெரியது தேன் பூஞ்சை (Honey Fungus). இது அமெரிக்காவின் ஓரிகான் (Oregon) பகுதியில் காணப்படுகிறது. 2,400 ஆண்டுகள் பழமையான இந்தக் காளான், 2,200 ஏக்கர் பரப்பளவில் படர்ந்துள்ளது. இதன் மொத்த எடை 605 டன்கள். பூமியில் சுமார் 50 லட்சம் பூஞ்சை இனங்கள் உள்ளன.
