
வைரஸ் கிருமிகள்தான் இந்த உலகில் தோன்றிய முதல் உயிரினம். 1892ஆம் ஆண்டில் வைரஸ் கிருமிகளை முதன்முதலில் கண்டுபிடித்துப் பெயர் சூட்டியவர், டிமிட்ரி ஐவனாஸ்கி (Dmitri
Ivanovsky) என்ற உயிரியல் அறிஞர். சுமார் 350 கோடி ஆண்டுகளாகப் பூமியில் வாழ்ந்து வரும் வைரஸ்களை மனித குலம் கண்டறிந்து, 128 ஆண்டுகளாகின்றன.
வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட போது, அவை உயிரற்றவை என்றே கருதப்பட்டது. ஆகவே, உயிரியல் அறிஞர்கள் அவற்றை பிற உயிரினங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்ட நினைத்தனர். அதற்காக, வைரஸ் உலகம் (Virosphere) என்றும், உயிரி உலகம் (Biosphere) என்றும் இருவேறு நிலையில் பகுத்து வைத்திருந்தனர்.
ஆனால், தற்போது வைரஸ்களும் உயிரினங்களாக நிரூபிக்கப்பட்டு விட்டன. வைரஸ்களை அவற்றின் உயிரி மூலக்கூறு அடிப்படையில் ஆர்.என்.ஏ. (RNA) டி.என்.ஏ. (DNA) வைரஸ் என்று இருபெரும் தலைப்பில் பிரிக்கலாம். இவற்றில் பல உட்பிரிவுகள் உண்டு.
வைரஸ்களை அவற்றின் உருவ வேறுபாட்டின் அடிப்படையில் நூல் வடிவம், உருளை வடிவம், எண்கோண வடிவம், பொதி வடிவம் என்றும் பகுத்திருக்கிறார்கள்.
நன்மை செய்யும் வைரஸ்கள்
வைரஸ்களில் தாவரங்களைத் தாக்கும் வைரஸ், விலங்குகளைத் தாக்கும் வைரஸ், பாக்டீரியாக்களைத் தாக்கும் வைரஸ் என்று பல வகை உண்டு. ஓர் உயிரினத்தைத் தாக்கும் வைரஸ் மிக அபூர்வமாகவே பிற உயிரினத்தைத் தாக்கும்.
எல்லா வைரஸ்களும் நோயை ஏற்படுத்துவதில்லை. உண்மையில் மனிதர்களுக்கு நன்மை செய்யும் வைரஸ்கள் நிறையவே இருக்கின்றன. வைரஸ்கள் இல்லாமலிருந்தால், உலகில் பரிணாம வளர்ச்சியே ஏற்பட்டிருக்காது.
ஏனெனில், வைரஸ்கள் ஒருவர் உடலிலிருந்து மற்றொருவர் உடலுக்குத் தாவும்போது அவை முதல் மனிதரிடமிருந்து ஒரு சில மரபணுத் துண்டுகளையும் பிரித்தெடுத்துக்கொண்டு, இரண்டாமவர் உடலில் சேர்த்துவிடும். இப்படியாகத்தான் புது மரபணுக்கள் உற்பத்தியாகின்றன.
மனிதர்களுக்கு நோய்களை உருவாக்கும் வைரஸ்களைவிட நன்மை செய்யும் வைரஸ்கள் அதிகம். குறிப்பாக, மனிதர்களின் வாய், சுவாசப்பாதை, குடல் ஆகியவற்றில் நிரந்தரமாகக் குடியிருக்கும் பல வைரஸ்கள் பல ஆபத்தான பாக்டீரியா, வைரஸ்களிடமிருந்து பாதுகாக்கின்றன.
பாக்டீரியாக்களைத் தாக்கி அழிக்கும் பாக்டீரியோ பேஜ் (Bacteriophage) எனும் வைரஸ்கள் பலவிதமான தொற்று நோய்களிலிருந்து மனிதர்களைப் பாதுகாக்கின்றன. மனிதர்களுக்கு ஏற்படும் பலவிதமான நோய்களிலிருந்து பாதுகாக்கும் விதமாக ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன.
எடுத்துக்காட்டாக, ஹெர்பிஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் (Herpes simplex virus) ஒருவர் உடலில் இருந்தால், அவருக்கு புற்றுநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
பெஜி வைரஸ் (Pegivirus) என்ற வைரஸ் கிருமி இருப்பவர்கள் உடலில், எய்ட்ஸ் வைரஸ் அதிகரிக்காது. ஆகவே, பெஜி வைரஸைப் பயன்படுத்தி எய்ட்ஸ் பரவாமல் தடுக்கும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
சிலரை மட்டும் தாக்குவது ஏன்?
எந்த வைரஸும் எல்லா மனிதர்களுக்கும் ஒரே மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தாது. அதேபோல் எந்த வைரஸாலும் மனிதர்கள் அனைவரையும் தாக்கி அழிக்கவும் முடியாது.
ஒவ்வொரு வைரஸும் ஒரு மனிதனின் உடலில் உள்ளே புகுவதற்கு செல் ரிசப்டார் (Cell Receptor) என்ற ஒரு புரதம் தேவைப்படும். ஒருவர் உடலில் இருக்கும் செல் ரிசப்டார், இன்னொருவர் உடலில் இல்லாமல் இருக்கலாம்.
ஆகவேதான், எய்ட்ஸ் போன்ற வைரஸ்கள் எல்லா மனிதர்களையும் ஒரே மாதிரியாகத் தாக்குவதில்லை. செல் ரிசப்டார் என்பது, பரம்பரையாக மரபணுக்களால் நிர்ணயம் செய்யப்படுபவை.
அதனால்தான் கொரோனா வைரஸ், சீனாவில் கூட அனைவரையும் தாக்கி அழிக்கவில்லை.
- டாக்டர் த.ஜெகதீசன்
மரபியல், குழந்தைகள் மருத்துவர்

