PUBLISHED ON : டிச 18, 2017

லூஜ் (Luge) பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது ஒரு பனிச்சறுக்கு விளையாட்டு. நாமெல்லோரும் அறிந்த வழக்கமான பனிச்சறுக்கு அல்ல இது. இதில் விளையாட்டு வீரர், ஸ்லெட்ஜ் என்று சொல்லப்படும் பனிச்சறுக்குப் பலகை மேல் மல்லாக்கப் படுத்துக்கொண்டு, 1.5 கிலோ மீட்டர் தூரத்தை வேகமாக, விரைவாகக் கடக்கவேண்டும். குளிர்கால ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் 1964 முதல் இடம்பெற்றிருக்கும் இந்தப் போட்டியில், ஐந்து முறை பங்குபெற்ற ஒரே இந்தியர் யார் தெரியுமா?
சிவா கேசவன்.
நம்ம ஊர் பெயராக இருக்கிறதே என்று ஆச்சரியத்தோடு பார்க்கிறீர்களா? ஆமாம். தந்தை கேரளத்தைச் சேர்ந்தவர், தாய் இத்தாலி நாட்டவர். பிறந்தது, வளர்ந்தது எல்லாம் குலுமணாலி, ஹிமாச்சல பிரதேசம்.
“பதினாறு வயதில், லூஜ் விளையாட்டு வீரர்களைத் தேர்வு செய்வதற்காக, சர்வதேச லூஜ் ஃபெடரேஷன் அமைப்பைச் சேர்ந்த பயிற்சியாளர் குன்டர் லெம்மெமர் இந்தியா வந்திருந்தார். எங்கள் பகுதியில் தேர்வு நடந்தது. அதில், நானும் என்னுடைய சகோதரனும் கலந்துகொண்டோம். பனிச்சறுக்குப் பலகையின் அடியில் சக்கரங்களைப் பொருத்தி, சாலையிலேயே எங்களை சறுக்கச் சொன்னார். அதில் என்னுடைய லாகவத்தையும் திறனையும் கண்டு, உடனே தேர்வு செய்தார். ஆஸ்திரியாவுக்கு அழைத்துச் சென்று, உண்மையான பனிப் பாதையில் லூஜ் பயிற்சி கொடுத்தார்.
முதல் இரண்டு வாரங்கள் பனிப் பாதையில் பயிற்சி செய்வது சிரமமாக இருந்தது. பின்னர் அதில் தேர்ச்சி பெற்றவுடன், படிப்படியாக நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன். இதெல்லாம் 1996இல் நடைபெற்றது. இன்றைக்கு சுமார் 20 ஆண்டுகள் கழித்துப் பார்க்கும்போது, அவ்வளவு பிரமிப்பாக இருக்கிறது.
அன்றிலிருந்து இன்றுவரை ஆர்வம் குறையவில்லை. ஒவ்வொருமுறை நடைபெறும் ஆசியப் போட்டிகளிலும் ஏதேனும் ஒரு பதக்கம் பெற்றுவிடுவேன். 2016இல் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம். அதற்கு முன்னர் வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் பெற்றுள்ளேன்.
லூஜ் போட்டி மிகவும் சுவாரசியமானது. விளையாட்டுப் பூங்காக்களில் இருக்கும் மிகப்பெரிய ரோலர் கோஸ்டர் மாதிரியானது. ஆனால், பாதுகாப்புக்கு பிடிமானம் எதுவும் கிடையாது. 1.5 கிலோ மீட்டர் தூரத்தை எவ்வளவு வேகமாகக் கடக்கிறோம் என்பதே முக்கியம். அந்த பனிப் பாதையில், எண்ணற்ற திருப்பங்கள் இருக்கும். அது அத்தனையையும் மனப்பாடமாக மனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும். நேரமும் வேகமும்தான் முக்கியம்.
இதற்கு தியானம் தான் சரியான அணுகுமுறை. மொத்த பனிப்பாதையிலும் நிதானம் இழக்காமல், அதேசமயம் கூர்மையான கவனத்தோடு சறுக்க வேண்டும். வளைவுகளில் திரும்ப, கால்களே சுக்கான்; தலையோ, ஹான்டில் பார். உடலே வாகனம். இது அத்தனையையும் ஒருமித்து இயங்கச் செய்வதற்குத் தியானம் தான் சரியான பயிற்சி.
லூஜுக்குப் பயன்படுத்தும் பலகையைத் தயாரிப்பது முதற்கொண்டு, உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வது வரை, கடுமையான முயற்சி வேண்டும். ஆரம்ப காலத்தில் எனக்குப் பெரிய வசதி இல்லை. படிப்படியாக என் போட்டிகளின் மூலம், கொஞ்சம் கொஞ்சமாக ஸ்பான்சர்களைப் பெற்றுள்ளேன். ஆனாலும், இந்திய அளவில் இந்தப் போட்டி பல பேருக்குத் தெரியாத ஒன்று. மற்ற விளையாட்டுக்குக் கிடைக்கும் கவனம்கூட இதற்குக் கிடைப்பதில்லை.
இதோ, 2018இல் நடைபெறும் தென்கொரிய குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தேர்வாகிவிட்டேன். இதில் ஒரு பதக்கத்தையேனும் பெற்றுவிட வேண்டும் என்பதே என்னுடைய ஆசை” என்று நம்பிக்கை பொங்க தெரிவித்தார் சிவா கேசவன்.
இதையும் படியுங்க!
1.5 கிலோமீட்டர் இருக்கும் இப்பாதை, அரைக்கோள வடிவில் அமைக்கப்பட்டிருக்கும். இதில் மிக வேகமாகச் சறுக்குவதே சாதனை.
குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டியில், தங்கப் பதக்கத்தை கடந்த இரண்டு முறையும் பெற்றிருப்பவர் ஜெர்மனியைச் சேர்ந்த ஃபெலிக்ஸ் லோச் என்பவர். மணிக்கு 153.98 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்தவர்.
சிவா கேசவன், ஆசிய அளவில் சாதனை படைத்தவர். தாம் படைத்த சாதனையைத் தாமே முறியடித்தவர். முதலில் மணிக்கு 131.9 கிலோ மீட்டர் வேகத்தில் சறுக்கியவரின் சமீபத்திய சாதனை மணிக்கு 134.3 கி.மீ.
மனைவி நமிதா கேசவன். பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்.
குளிர்கால விளையாட்டுப் போட்டிகளின் முக்கியத்துவத்தைத் தொடர்ந்து, இந்தியாவில் வலியுறுத்தி வருகிறார் சிவா கேசவன். ஐம்பது இளம் வீரர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு லூஜ் விளையாட்டில் பயிற்சி கொடுத்தார். பின்னர் அவர்கள் ஜப்பானில் தொடர் பயிற்சிபெறத் தேர்வாகினர். லூஜ் விளையாட்டைப் பிரபலப்படுத்தும் முயற்சியிலும் இருக்கிறார் சிவா.