தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/கடலில் எறியச் சொன்ன தங்கக் கட்டிகள்!

கடலில் எறியச் சொன்ன தங்கக் கட்டிகள்!

கடலில் எறியச் சொன்ன தங்கக் கட்டிகள்!


PUBLISHED ON : செப் 16, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 16, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு கதை உண்டு. திருவள்ளுவரின் நண்பர், ஏலேல சிங்கர். அவர் பெரும் வணிகர். அவர் தன்னுடைய செல்வத்தையெல்லாம் நல்வழியில் மட்டுமே செலவிட விரும்பினார். அதற்கேற்ப, பல நற்செயல்களில் ஈடுபட்டார். ஊருக்கெல்லாம் உதவினார்.

அப்படி உதவிய பிறகும் அவரிடம் செல்வம் நிறைய இருந்தது. அதை என்ன செய்வது என்று புரியாமல் குழம்பினார். வள்ளுவரிடம் ஆலோசனை கேட்டார்.

''உன்னுடைய செல்வத்தை எப்படிச் சேர்த்து வைத்திருக்கிறாய்?'' என்று கேட்டார் வள்ளுவர்.

''தங்கக்கட்டிகளாகச் சேர்த்து வைத்திருக்கிறேன்'' என்றார் ஏலேல சிங்கர்.

''அப்படியானால், அந்தத் தங்கக் கட்டிகளைக் கொண்டுபோய்க் கடலில் வீசிவிடுங்கள்'' என்று ஆலோசனை சொன்னார் வள்ளுவர்.

இதைக்கேட்ட ஏலேல சிங்கர் சிறிதும் தயங்கவில்லை. கடலில் சென்று தன்னிடமிருந்த தங்கக் கட்டிகளையெல்லாம் நீரில் தூக்கிப்போட்டுவிட்டு வீடு திரும்பினார்.

சில மாதங்களுக்குப்பிறகு ஒரு நாள், ஏலேல சிங்கர் தன்னுடைய வீட்டின் கதவைத் திறந்துகொண்டு வெளியில் வந்தார், வியந்து நின்றார்.

காரணம், முன்பு அவர் தூக்கிப்போட்ட தங்கக்கட்டிகள் அனைத்தும் அவருடைய வீட்டு வாசலில் பாசி படிந்து கிடந்தன. அதைக்கண்டு திகைத்த ஏலேல சிங்கர், மீண்டும் வள்ளுவரிடம் சென்றார். ''இது எப்படிச் சாத்தியம்?'' என்று கேட்டார்.

வள்ளுவர் சிரித்தார், ''நீ நல்வழியில் பொருள் சேர்த்திருக்கிறாய், அதனால்தான் நீயே தூக்கிப்போட்டாலும் அந்தச் செல்வம் உன்னிடமே திரும்பி வந்துவிட்டது. நல்வழியில் ஈட்டிய செல்வத்தை நாம் போ என்று விரட்டினாலும் போகாது.

தீயவழியில் ஈட்டிய செல்வத்தை இரு என்று கெஞ்சினாலும் இருக்காது. ஆகவே, எப்போதும் நல்வழியைப் பின்பற்றி வா'' என்று சொன்னார்.

'ஏலேல சிங்கருடைய பொருள் ஏழுகடல் போனாலும் திரும்பும்' என்கிற பழமொழியை அடிப்படையாக வைத்து இப்படியொரு சுவையான கதை சொல்லப்படுகிறது. இதற்குச் சான்றாக ஒரு திருக்குறளையும் குறிப்பிடுகிறார்கள்:

'அழக் கொண்ட எல்லாம் அழப் போம், இழப்பினும்

பின் பயக்கும் நற்பாலவை.'

'ஒருவர் பொருளீட்டுவதில் எந்தப் பிழையும் இல்லை. ஆனால், பிறரை அழவைத்துச் சம்பாதிப்பது கூடாது. அப்படிச் சம்பாதித்த பொருள் அவரிடம் நிலையாக இருக்காது. என்றைக்காவது அவரை அழவைத்துச் சென்றுவிடும்' என்பதே இக்குறளின் பொருள்.

மாறாக, நல்வழியில் ஈட்டிய பொருள் எப்போதும் நன்மை தரும். ஒரு வேளை, சூழ்நிலை காரணமாக அவர் அந்தப் பொருளை இழந்தாலும், பின்னர் அது அவரிடம் வந்துசேரும் என்கிறார், வள்ளுவர்.

ஆக, எதைப் பெறுகிறோம் என்பதுபோல, எப்படிப் பெறுகிறோம் என்பதும் முக்கியம். நாம் நடக்கும் வழி தூய்மையாக இருக்கவேண்டும். அப்போதுதான் சென்றுசேரும் இடத்துக்கு மதிப்பு.

இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது, காந்தியடிகளும் இதைத்தான் வலியுறுத்தினார். விடுதலை என்பது உயர்ந்த நோக்கமாக இருப்பினும், அதற்காக வன்முறை வழியைப் பயன்படுத்தக்கூடாது. நன்முறையில் நடந்து விடுதலையைப் பெற வேண்டும் என்றார். அதன்படி நாட்டை வழிநடத்தினார்.

உங்களுடைய இலக்கு என்ன? அதற்காக நீங்கள் பின்பற்றும் வழிமுறைகள் என்ன? இரண்டிலும் கவனம் செலுத்துங்கள். நன்முறையில் நல்லதைப் பெறுவீர்கள்.

- என். சொக்கன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us