PUBLISHED ON : நவ 28, 2016

முன் குறிப்பு: இந்தக் கட்டுரையில், புதுப் புதுச் சொற்கள் எல்லாம் வரும். 'தோப்பு', 'ஓடை', 'வயல்' இப்படி… குழம்பிவிடாதீர்கள். இப்போதும் நகரத்துக்கு வெளியே, சின்ன ஊர்களில் வசிக்கும் சிலருக்கு, அவை தெரிந்திருக்கலாம். நகரத்தில் உள்ளவர்களுக்காக, அப்படிப்பட்ட ஒவ்வொரு வார்த்தைகளுக்கும், விளக்கமும் சேர்த்தே தரப்படும்!
இது, மாணவர்களாக இருக்கும் நமது ஒரு பிரிவினரின் விடுமுறைக்காலப் பொழுதுபோக்குகளில் ஒன்றைப் பற்றிய, சிறு அலசல். சுவாரசியமாக இருக்கும், படிக்கலாம்.
வெயிட்… வெயிட்… மாணவர்களில் ஒரு பிரிவினர் என்றால், ஏ, பி, சி, டி, என்கிற செக்ஷ்ன் இல்லை; கிராமப்புற மாணவர்கள் என்கிற செக்ஷ்ன்.
இவர்களுக்கு விடுமுறை என்றால், வீட்டில் தங்க மாட்டார்கள். குழுவாகச் சேர்ந்துகொண்டு, ஊர் சுற்றப் போய்விடுவார்கள். போகிற இடங்கள், ஊருக்கு வெளியே இருக்கும் தோப்பு, தோப்புக்குள் இருக்கும் கோவில், கோவிலை ஒட்டி இருக்கும் தெப்பக்குளம், இப்படி இருக்கும்.
தோப்பு என்றால் என்ன?
மரங்கள் பல அடர்ந்து, குளுகுளு என்று இருக்கும் ஓர் இடம். விதவிதமான மரங்கள் அங்கே, நிழலும் காற்றும் தந்துகொண்டு இருக்கும். மரங்கள் இருந்தாலே, பறவைகளும், மரத்தை நெருங்கி வாழும் பூச்சி, வண்டு போன்ற உயிரினங்களும் இருக்கும்தானே…
கிராமப்புற மாணவர்களுக்கு, அந்தத் தோப்புப் பகுதியில் பொன் வண்டு பிடித்து விளையாடுவது ஒரு பொழுதுபோக்கு. வண்ண வண்ண உடல், டிசைன் போட்ட கழுத்து என்று பார்க்கவே அழகாக இருக்கும் பொன்வண்டு. அதை எப்படியோ பிடித்து விடுவார்கள். ஒரு தீப்பெட்டிக்குள் அதை அடைத்து வைப்பார்கள். வீட்டிற்கு எடுத்துச் சென்று வளர்க்கப் போகிறார்களாம்.
அதற்கு மூச்சு முட்டுமே, அதற்காக தீப்பெட்டியில் சிறிய ஓட்டைகளைப் போட்டுவிடுவார்கள்.
மூச்சு விட்டால் போதுமா, அது சாப்பிட வேண்டுமே… எங்கெங்கோ அலைந்து புளிய இலைகளையும், அரப்பு இலைகளையும் கொண்டு வருவார்கள். அதை தீப்பெட்டிக்குள் போட்டு விடுவார்கள்.
(இதில், இந்த அரப்பு இலையைத்தான் உலரவைத்து அரைத்து, தலைக்குப் பூசிக் குளிப்பது. தலை சும்மா ஷாம்பூவும் கண்டிஷனரும் போட்டது போல இருக்கும்.)
அது தப்பித்துப் போகாமல் இருக்க, ஓர் உபாயமும் செய்வார்கள். அதை ஒரு நூலால் கட்டி, நூலின் மறு முனையை தீப்பெட்டியோடு இணைத்து விடுவார்கள்.
இவர்களிடம் மாட்டிக்கொண்டு, படாத பாடுபடும் அந்தப் பொன்வண்டு. அது பாட்டுக்கு சுற்றித் திரிந்துகொண்டு இருந்ததை, அடைத்து வைத்தால் எப்படி இருக்கும்? நம்மை ஓர் அறைக்குள் போட்டுப் பூட்டி வைத்ததைப் போல இருக்கும்தானே?
பூட்டி வைத்ததும் இல்லாமல், தாங்கள் பிடித்த பொன் வண்டை, தோப்புக்கு வராத நண்பர்களுக்கும் பெருமையாகக் காட்டுவார்கள். அதைப் பார்க்கிற நண்பன், ஆசை ஆசையாக, நாய்க்குட்டியின் கழுத்தைத் தடவிக் கொடுப்பது போல, பொன் வண்டின் கழுத்தையும் தடவிக் கொடுப்பான்.
போச்சு…
பொன் வண்டு, குனிந்திருக்கும்போது அதன் கழுத்தில் ஒரு பிளவு ஏற்படும். தன்னை யாரோ தொடுகிறார்கள் என்று அது உணர்ந்த உடன், தலையைத் தூக்கும். அப்போது, அதன் பிடறிப் பிளவு மறையும். அங்கே இருந்த சிறுவனின் பிஞ்சு விரல் சின்னதாக வெட்டுப்படும். அவ்வளவுதான், வெட்டுப்பட்ட இடத்தில், கொஞ்சூண்டாக ரத்தம் கசிய ஆரம்பிக்கும்.
பொன் வண்டு கடித்துவிட்டது என்று (தவறாகச் சொல்லிக் கொண்டு) அந்தப் பையன் அழுதுகொண்டே ஓடுவான்.
ஓடுபவனை விடுவார்களா மற்றவர்கள்? அவனைப் பிடித்து சிகிச்சை கொடுக்க ஆரம்பிப்பார்கள்.
சிகிச்சை என்றால் பயப்பட வேண்டாம், ஊசி, மாத்திரை எல்லாம் இல்லை… அவனை, அந்த காயத்தின் மீது, எச்சில் துப்பச் சொல்வார்கள். ஈரம் காய்வதற்குள் ஒரு காகிதத் துண்டை அந்தக் காயத்தின் மேலே ஒட்டுவார்கள். அந்தக் காகிதம் ஒட்டிக்கொள்ளும். அப்போதைக்கு ஒன்றும் தெரியாது. கசிந்த ரத்தத்தின் மேல் காகிதம் கெட்டியாக ஒட்டிக் கொள்ளும்… பிற்பாடு அந்தக் காகிதத்தைப் பிரித்து, பிய்த்து எடுத்தால், ரத்தப் பெருக்கும் சேர்ந்தே பிய்ந்து வரும். அப்போது மறுபடி ரத்தம் கசியும், வலிக்கும்.
இப்படி வலித்து வலித்து விளையாடுவதில், அவர்களுக்கு ஓர் இன்பம்.
இப்படி, ஒரு நாளோ இரண்டு நாளோ பொன் வண்டோடு பொழுதுபோகும். அடுத்த நாள் காலையில் தூங்கி எழுந்து பார்த்தால், தீப்பெட்டி காலியாக இருக்கும். அதில் பொன் வண்டைக் கட்டிய நூல் இருக்கும். பொன் வண்டு மட்டும் இருக்காது.
எப்படி இருக்கும்? தன்னை வலுக்கட்டாயமாகச் சிறையில் வைத்தால், அது விடுதலைப் போரில் இறங்காதா? கழுத்துப் பகுதியாலேயோ, கடித்தோ, அந்த நூலை அறுத்து அது தப்பிவிட்டிருக்கும்.
சுதந்திரம்தானே எல்லா உயிரினங்களுக்கும் விருப்பம்!
