PUBLISHED ON : அக் 17, 2016
மாற்றுத்திறனாளிகளின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை, 'பாரா ஒலிம்பிக்' போட்டி நடத்தப்படுகிறது. 2016ஆம் ஆண்டிற்கான பாரா ஒலிம்பிக் போட்டி, பிரேஸிலில் நடந்தது. அதில், உயரம் தாண்டும் போட்டியில், இந்தியா சார்பாகப் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றவர் மாரியப்பன் (21 வயது).
மாரியப்பனின் சொந்த ஊர் சேலம் மாவட்டத்தில் இருக்கும் பெரியவடக்கம்பட்டி என்கிற சிறிய கிராமம். இவருக்கு ஐந்து வயதாக இருக்கும்போது, ஒரு சாலை விபத்தில் சிக்கியதால் அவரது வலது கால் கட்டை விரலை தவிர மற்ற கால் பகுதிகள் சிதைந்து, ஊனமானார். அதனால், அவருடைய ஒரு கால் ஊனமானது. ஏற்கெனவே, அவருடைய குடும்பமும் வறுமையின் பிடியில் சிக்கியிருந்தது. அவருடைய தாய் சரோஜா, காய்கறி வியாபாரம் செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார்.
இந்த சூழ்நிலைகளுக்கு இடையிலும், சாதிக்க வேண்டும் என்ற துடிப்பு மாரியப்பனிடம் இருந்தது. இதைப் புரிந்துகொண்ட பெங்களூர் பயிற்சியாளர் சத்ய நாராயணா உயரம் தாண்டுதலில் அவருக்குத் தீவிர பயிற்சி அளித்தார்.
மாரியப்பனும் விடா முயற்சியும், நிறைய பயிற்சியும் செய்தார். அவருடைய கடின உழைப்புக்கு அங்கீகாரமாகவே, பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. தடைகள் பல தாண்டி, 1.89 மீட்டர் உயரம் குதித்து சாதனை படைத்த மாரியப்பன், நம் எல்லோருக்கும் சிறந்த முன்னுதாரணம்தான்!
சாதனைகள்
* கடந்த 2012 முதல் 2015 ஆம் ஆண்டு வரை, சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று, தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
* கடந்த முறை நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் 1.74 மீட்டர் உயரம் தாண்டினார்.
* மை ஸ்டாம்ப் (My stamp) என்ற திட்டத்தின்கீழ் சேலம் தபால் துறை சார்பில், இவருக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.
