
டில்லியில், குடிசைப் பகுதி ஒன்றில் வாழ்ந்து வருபவர் பிரதிமா தேவி. இவரைப் பகுதி மக்கள், நாய்களின் அம்மா என்றே அழைக்கின்றனர். இவருக்கும் அந்தப் பட்டம் பிடித்திருக்கிறது. தெருவில் அநாதையாக விடப்பட்ட நிறைய நாய்களுக்கு உணவு அளித்து, பாதுகாத்து வருகிறார்.
62 வயதாகும் பிரதிமாவின் பூர்விகம், வங்காளத்தைச் சேர்ந்த ஒரு சிறு கிராமம். 7 வயதில் கல்யாணம், 19 வயதிற்குள் 3 குழந்தைகள். குடிகாரக் கணவனிடமிருந்து தினம், அடி உதை. அடி உதைக்குத் தாக்குப்பிடிக்க முடியாத நிலையில், தப்பி டில்லிக்குக் குடிபெயர்ந்தார். வீட்டு வேலைகள் செய்து பிழைத்தார். மாதம் ரூ.100 மட்டுமே கிடைத்தது. தனது சொற்ப வருமானத்திலும், தெருவில் அலையும் நாய்களுக்கு உணவளிக்கத் தொடங்கினார். 1984ம் ஆண்டு 2 நாய்களுடன் தொடங்கிய இவரது சேவை, தற்போது 300 நாய்களில் வந்து நிற்கிறது. குப்பைகளைச் சேகரிப்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில்தான் தற்போது வாழ்ந்து வருகிறார். இவரது மூன்று குழந்தைகளும், பெரியவர்களாகி, அவரது கிராமத்திலேயே வசிக்கிறார்கள். அவர்கள் இந்தப் பாட்டியைத் தங்களுடன் அழைத்துச் சென்று பராமரிக்க நினைத்தாலும், தன்னை நம்பியிருக்கும் இந்த வாயில்லா ஜீவன்களைக் கைவிடத் தயாராக இல்லை.

