PUBLISHED ON : செப் 02, 2024

சென்னைக்கு அருகில் உள்ள திருவொற்றியூரில், தியாகராஜ சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயில் ராஜேந்திர சோழன் காலத்தில் கற்றளியாகக் கட்டப்பட்டது. கோயில் சுவர்களில் இடம்போதாமல், மண்டபத்தைத் தாங்கி நிற்கும் உருளைத் தூண்களில் கூடக் கல்வெட்டுகளைச் செதுக்கி வைத்திருக்கிறார்கள் அரசர்கள். ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்து, ஆங்கிலேயர் காலம் வரையிலான இருநூறுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள், மன்னர்களின் ஆணைகளையும், தானங்களையும் தாங்கியபடி நின்றுகொண்டிருக்கின்றன.
சோழ அரசர்களின் மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி. 1178 - 1218) திருவொற்றியூரில் நடந்த ஆனி மாதத் திருவிழாவிற்காக இங்கு வருகைப் புரிந்துள்ளார். அவர் தேவரடியார்கள் ஆடிய நடனத்தைப் பார்த்து ரசித்ததாக ஒரு கல்வெட்டு கூறுகிறது.
மூன்றாம் ராஜராஜ சோழனும் கி.பி.1235ஆம் ஆண்டு, இங்கு வந்துள்ளார். அவர், நன்கு நடனமாடிய ஒரு நாட்டியப் பெண்ணிற்கு 60 வேலி நிலத்தைக் கொடையாகக் கொடுத்துள்ளார். 'தலைக்கோலி' என்ற பட்டம் பெற்றவர் அந்தப் பெண். இந்தப் பட்டம் பெற்றவர்கள், அரசர்கள் முன் ஆடக்கூடியவர்கள்.
ஒரு சில கல்வெட்டுகள், கோயில் நந்தவனத்தில் சிமென்ட் பலகையில் பதித்து வைத்திருக்கிறார்கள். 'இந்தக் கல்வெட்டுகள் மட்டும் ஏன் மரங்களுக்கு மத்தியில் இருக்கின்றன?' என்று கோயில் அதிகாரி ஒருவரிடம் கேட்கப்பட்டது.
''2014ஆம் ஆண்டு, கோயிலைப் புனரமைக்கும் போது, சில கல்வெட்டுகளை அதன் அருமை தெரியாமல், கட்டடப் பணி செய்தவர்கள் பெயர்த்து எடுத்து விட்டார்கள். பின்னர் அந்தக் கல்வெட்டுகளின் முக்கியத்துவம் கருதி, இங்கு பதித்து வைக்கப்பட்டுள்ளன'' என்றார் அந்த அதிகாரி. போரில் பெற்றோரை இழந்து அநாதையாக விடப்படும் குழந்தைகளைப் போல, பறவை எச்சங்கள் நிறைந்த நந்தவனப் பகுதிக்குள், நின்று கொண்டிருக்கின்றன அந்தக் கல்வெட்டுகள். கோயில்களில் திருப்பணி செய்யும் போது, வரலாறு தெரிந்த ஆர்வலர்கள் அல்லது அதிகாரிகள் மேற்பார்வையில் செய்தால், கல்வெட்டுகள் பாழாகாமல் பாதுகாக்க முடியும்.
வெளியூர்களில் இருந்து திருவொற்றியூருக்கு வரும் வரலாற்று ஆர்வலர்கள், நந்தவனத்தில் இருக்கும் கல்வெட்டுகளைக் கவனிக்காமல் விடக் கூடும். அங்கும் கல்வெட்டுகள் உள்ளன என்பதைத் தெரிவிக்க, அறிவிப்புப் பதாகை ஒன்றை வைத்தால் நன்றாக இருக்கும். தவிரவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோயில்களில் உள்ள கல்வெட்டுகளின் தகவல்களை, தொல்லியல் அறிஞர்களைக்கொண்டு, இன்றைய தமிழில் எழுதி வைத்தால், அதன் பெருமை பலரையும் சென்றடையும். கல்வெட்டுப் புத்தகங்களை அதில் ஆர்வம் உள்ளவர்கள் மட்டுமே வாங்கிப் படிக்கும் போக்கு உள்ளது.