PUBLISHED ON : நவ 04, 2024

தென்னிந்தியாவில் ஓடும் முக்கிய நதிகளில் ஒன்று துங்கபத்ரா. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இது உற்பத்தி ஆகிறது. துங்கா, பத்ரா என்ற இரண்டு ஆறுகளும் ஒன்றாக இணைந்து, துங்கபத்ரா என்ற நதியாகப் பயணம் செய்கிறது.
கிருஷ்ணா நதியின் முக்கிய துணை ஆறுகளில் ஒன்றாகத் துங்கபத்ரா விளங்குகிறது. ஹம்பி வளமிக்க பிரதேசமாக விளங்கியதற்கு, துங்கபத்ரா நதியும் ஒரு காரணம். ஆற்றின் குறுக்கே பல கால்வாய்களை ஏற்படுத்தி, நகரை வளமுள்ள பகுதியாக மாற்றினர் விஜயநகர மன்னர்கள்.
பாசனத்திற்காகவும் நீர் பற்றாக்குறையைப் போக்கவும் ஆங்கிலேயர் காலத்தில் ஆற்றின் குறுக்கே அணை கட்ட முடிவெடுக்கப்பட்டது. அப்போதைய மதராஸ் ஆளுநர் சர் ஆர்தர் காட்டன் (Sir Arthur Cotton) என்பவர் 1945இல் இதற்காக அடிக்கல் நாட்டினார்.
இந்திய விடுதலைக்குப் பின், ஐதராபாத், பாகிஸ்தானுடன் போவதற்கு முனைப்புக் காட்டியதால், இந்த அணையைக் கட்டும் வேலை தள்ளிப் போனது. பின்னர், 19532 ஹோஸ்பேட் என்ற ஊரின் அருகே, அணை கட்டப்பட்டது. அது துங்கபத்ரா அணை என்று அழைக்கப்படுகிறது. திருமால் ஐயங்கார் என்ற சென்னை மாகாணத்தின் தலைமைப் பொறியாளர் இந்தப்பணியை மேற்கொண்டார். அணையின் மூலம் நீர் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
அணையைக் கட்டும் பணியில், தமிழகத்தின் சேலம் பகுதியைச் சேர்ந்த மக்கள் பெருவாரியாக ஈடுபட்டனர். அணை கட்டி முடித்ததும் அவர்கள் கர்நாடகத்திலேயே தங்கி விட்டனர். இன்று அவர்கள் கடிராமபுரத்தில் (Kaddi Rampura) வசிக்கின்றனர்.
புகழ்பெற்ற விருபாக்ஷா கோயிலும் இந்த ஆற்றின் கரையில்தான் அமைந்துள்ளது. இந்த நதி முற்காலத்தில், பம்பா என்று அழைக்கப்பட்டது. அந்தப் பெயரிலேயே ஹம்பியும் பம்பாக்ஷேத்திரம் என்று முன்னர் அழைக்கப்பட்டது.
துங்கபத்ரா நதிக்கு குறுக்கே, ஆனேகுண்டி (Anegundi) என்னும் ஊரில் அஞ்சனாத்ரி மலை (Anjanadri Hill) அமைந்துள்ளது. இந்த மலையில்தான் அனுமன் பிறந்ததாகக் கருதப்படுகிறது. மலையில் உள்ள கோயிலில் அனுமன் ஜெயந்தி அன்று, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுகின்றனர்.