
கடலுக்குள் நீந்தி மீன்களுக்கு அருகே ஜாலியாகச் சுற்றி வருகிறவர்களை 'நேஷனல் ஜியோகிராபிக்' (National Geographic) போன்ற சானல்களில் பார்த்திருப்பீர்கள். 'ஸ்கூபா' (Scuba) என்ற சுவாசக் கருவியை அணிந்து கொண்டு இவர்கள் ஆழ்கடல் நீச்சல் செய்கிறார்கள். இதற்கு முறையான பயிற்சி தேவை. 'ஸ்கூபா டைவிங்' (Scuba Diving) மூலம் சாதாரணமாக, 10 மீட்டர் ஆழம் வரை கடலுக்குள் போகலாம். ரொம்ப மூச்சைப் பிடித்து, சாதிக்க நினைப்பவர்கள், 30 மீட்டர் வரை போகலாம்.
கடலுக்கடியில் ஆராய்ச்சி செய்பவர்கள், சுவாசக் கருவி துணையுடன் 1000 அடி வரை செல்கிறார்கள். ஆழ்கடலில் செல்வதற்கு நீரின் அழுத்தத்தைத் தாங்கக்கூடிய விசேஷக் கப்பல்களைப் பயன்படுத்துகிறார்கள். உலகின் உயரமான சிகரங்கள், பள்ளத்தாக்குகள், பாலைவனங்கள் என மனிதன் காலடி படாத இடமே கிடையாது. ஆனால் கடலின் ஆழத்தை அடைவதில் இன்னும் முழுமையான வெற்றியை மனிதன் அடையவில்லை. ஏன் கடலின் ஆழத்திற்குச் செல்ல முடிவதில்லை? கடல்களின் சராசரி ஆழம் 4 கி.மீ. கடலின் அடியில் மலைத்தொடர்கள், பள்ளத்தாக்குகள், எரிமலைகள், குன்றுகள் எல்லாம் உள்ளன. கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள் முதல் மிகப் பெரிய விலங்கான திமிங்கிலம் வரை வாழ்கின்றன.
கடலின் ஆழத்துக்குச் செல்லச் செல்ல நீரின் அழுத்தமும் எடையும் அதிகரிக்கும். தலைக்கு மேலே உள்ள அத்தனை தண்ணீரும் சேர்ந்து அழுத்தும். அத்துடன் நம்மைச் சுற்றிலும் உள்ள தண்ணீரின் எடையும் சேர்த்து அழுத்தும். அந்த அழுத்தம் கடல் மட்டத்தில் உள்ளதைவிட இரண்டு மடங்காக இருக்கும். 20 மீட்டர் ஆழத்துக்குச் சென்றால் அழுத்தம் மூன்று மடங்காகி விடும். 30 மீட்டர் ஆழத்தில் அழுத்தம் நான்கு மடங்காகி விடும். கடலின் ஆழத்தில் கடும் அழுத்தம் மட்டுமில்லை; சுமார் 800 மீட்டர் ஆழத்துக்குக் கீழே சென்றால் அதிக இருள் சூழ்ந்திருக்கும். கடல் நீரானது மிகுந்த குளிர்ச்சியாக இருக்கும்.
கடல்களில் மிக ஆழமான இடம் பசிபிக் கடலில் உள்ளது. 'மரியானா அகழி' (மரியானா டிரென்ச்/Mariyana Trench) என்பது அந்த இடத்தின் பெயர். இந்த இடம் 10.924 கி.மீ. (35,840 அடி) ஆழம் கொண்டது. அதன் நடுவில் உலகிலேயே மிக ஆழமான பள்ளம் உள்ளது. அதன் பெயர் 'சேலஞ்சர் மடு' (சேலஞ்சர் டீப்/Challenger Deep). 'சேலஞ்சர்' (Challenger) என்ற கப்பல் இந்த ஆழத்தைக் கண்டறியப் பயன்படுத்தப்பட்டது.
மரியானா அகழிப் பகுதிக்கு, 'டான் வால்ஷ்' (Don Walsh), 'சாக்கஸ் பிக்கார்ட்' (Jacques Piccard) ஆகிய இருவரும் 'டிரியஸ்டி' (Trieste) என்ற நீர்முழ்கிக் கலத்தில் 1960-ல் சென்று வந்தனர். இவர்கள் 10.912 கி.மீ. (35,800 அடி) தொலைவு வரை தரைப்பகுதிக்குச் சென்று வந்தனர்.
அதன் பிறகு ஆழ்கடல் ஆராய்ச்சியாளரும், திரைப்பட இயக்குநருமான 'ஜேம்ஸ் கேமரூன்' (James Cameron) 2012ல் மரியானா அகழிப் பகுதியின் ஆழத்திற்குள் தனியாகச் சென்று வந்தார். 'டீப் சீ சேலஞ்சர்' (Deep Sea Challenger) என்ற நீர் முழ்கிக் கலத்தில் அவர் பயணம் செய்து மரியானா அகழியின் ஆழத்தில் 10.907 கி.மீ. (35,786 அடி) வரை சென்று வந்தார்.