தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பாட்டு எழுதுவது எப்படி?

பாட்டு எழுதுவது எப்படி?

பாட்டு எழுதுவது எப்படி?


PUBLISHED ON : அக் 13, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 13, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

“பாட்டுப் பிடிக்காத ஆள் எல்லாரும் கை தூக்குங்க” என்று சொன்னால், ஒரு கூட்டத்தில் யார்தான் கை தூக்குவார்கள்? யாருமே தூக்க மாட்டார்கள்.

பாட்டு நம் மனதோடு கலந்த ஒரு விஷயம். பாடத் தெரியாவிட்டாலும் ஏதாவது ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டுதான் இருப்போம். நமக்குப் பாடத் தெரிந்திருந்தாலும், நாமே எழுதிய பாடல்களைப் பாடுவது தனிச் சுவையாக இருக்குமே…

இந்தப் பகுதியில் பாடலை எழுதுவது எப்படி என்று பார்க்கப்போகிறோம். நீங்கள் தயாரா?

சின்ன வயதில் இருந்து எத்தனையோ பாடல்களைக் கேட்டிருப்பீர்கள். அவற்றில் சினிமாப் பாடல்களை விட்டுவிடுங்கள். கடினமான வரையறைகளுக்கு உட்பட்டு உருவாகும் கர்நாடக இசை போன்றவற்றையும் விட்டுவிடுவோம். சிறுவர்களுக்காக என்றே இயற்றப்பட்ட பாடல்களை அவசியம் படித்திருப்பீர்கள்தானே… அங்கே இருந்தே ஆரம்பிக்கலாம், சரியா?

எல்லோரும் படித்த ஒரு பாட்டை நினைவுபடுத்துகிறேன்.

சின்ன வகுப்பில் படித்ததுதான்…

பெ. தூரன் என்பவர் எழுதிய பாட்டு இது. இதே உத்தியைப் பயன்படுத்தி பிற்பாடு பல பாடல்களைப் பல பேர் எழுதியிருக்கிறார்கள். ஆனாலும் எல்லாவற்றையும்விட கச்சிதமாகவும் மிக மிகச் சுவையாகவும் அமைந்திருப்பது இந்தப் பாட்டுதான்…

என்ன பாட்டு என்று கண்டு பிடித்துவிட்டீர்களா?

அம்மா இங்கே வா வா

ஆசை முத்தம் தா தா

இலையில் சோறு போட்டு

ஈயைத் தூர ஓட்டு

உன்னைப் போன்ற நல்லார்

ஊரில் யாவர் உள்ளார்?

என்னால் உனக்குத் தொல்லை

ஏதும் இனிமேல் இல்லை

ஐயம் இன்றிச் சொல்வேன்

ஒற்றுமையே பலமாம்

ஓதுவதே நலமாம்

ஔவை சொன்ன மொழியாம்

அஃதே எனக்கு வழியாம்.

படித்துவிட்டீர்களா?

இந்தப் பாட்டின் சிறப்பு என்ன என்பதை, இதை உங்களுக்கு அறிமுகப்படுத்திய ஆசிரியரே சொல்லி இருப்பார். அ, ஆ, இ, ஈ முதலிய, தமிழின் உயிர் எழுத்துகளை வரிசையாக ஒவ்வோர் அடியிலும் அமைத்து எழுதப்பட்ட பாட்டு இது.

அது மட்டும்தானா?

மாலா அங்கே போனாளாம்.

இது ஒரு வாக்கியம். அதாவது உரைநடையில், சில வார்த்தைகள் சேர்ந்து ஒரு பொருளைத் தந்தால் அது வாக்கியம் எனப்படும். ஒரே வார்த்தையில்கூட ஒரு வாக்கியம் அமையலாம். இதுவே, ஒரு செய்யுளிலோ பாடலிலோ அமைந்தால், அதை அடி என்று சொல்லலாம். பல அடிகள் சேர்ந்தது ஒரு பாட்டு.

மாலா அங்கே போனாளாம்

ஆலாக் குருவியைப் பார்த்தாளாம்

இப்போது இது பாட்டு மாதிரித் தெரிகிறதா?

என்ன காரணம்.

இதில் இயல்பாக அமைந்திருக்கும் சத்த ஒழுங்கு. சத்தம் ஒழுங்காக இருந்தால் அதற்கு சந்தம் என்று பெயர்.

ஒரு உரைநடை வரி, பாடலின் அடியாக மாறுவதற்கு சந்தம், எதுகை, மோனை போன்றவை தேவைப்படும். அவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கப்போகிறோம்.

மேலே சொன்ன 'அம்மா இங்கே வா வா' பாடலில் எதுகை இருக்கிறதா, மோனை இருக்கிறதா என்பதைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னதாக, இதில் இருக்கும் சந்தம் பற்றி இன்னும் தெரிந்துகொள்வோம்.

மூன்றாம், நான்காம் வரிகளை எடுத்துக்கொள்ளுங்கள்…

'இலையில் சோறு போட்டு

ஈயைத் தூர ஓட்டு'

சரிதானே? இந்த இரு வரிகளின் கடைசி வார்த்தைகளை மட்டும் பாருங்கள். 'போட்டு, ஓட்டு.'

இந்த ஒற்றுமைதான் சந்தம்.

நீங்கள் கேட்ட எந்தப் பாடலையும் நினைவுக்குக் கொண்டுவந்து பாருங்கள். பாடல் வரிகளின் கடைசி வார்த்தைகள் சந்த ஒற்றுமை கொண்டிருக்கும். சந்தம் இருந்தாலே, நாம் எழுதும் வரிகள் பாட்டைப் போன்ற தோற்றத்தைக் கொண்டுவந்துவிடும்.

இப்போது ஒரு பாடலைப் படித்து வையுங்கள்...

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு

சந்தனச் சிலையே சாய்ந்தாடு

கட்டிக் கரும்பே சாய்ந்தாடு

கண்ணின் மணியே சாய்ந்தாடு.

ரமேஷ் வைத்யா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us