PUBLISHED ON : மார் 02, 2020

கிளிகள் என்றாலே முதலில் நமக்கு பச்சைக் கிளிகள்தான் நினைவிற்கு வரும். ஆனால், உலகமெங்கும் கிளிகள் பல வண்ணங்களில் காணப்படுகின்றன. 'பெஸ்குவட் பேரட்' (Pesquet parrot) என்ற இந்தக் கிளி, நியூகினியா (New Guinea) தீவில் மட்டுமே காணப்படும் ஓரிட வாழ்வி. இதன் முகம் கழுகுபோல் தோற்றம் அளிப்பதால், 'வல்ச்சரின்' (Vulturine) என்றும், ட்ரான்குலா என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தக் கிளியின் முகத்தில் இறகுகள் இருக்காது, உலகில் மூன்றே வகை கிளிகளுக்குத்தான் அப்படி இருக்கும். அதில் பெஸ்கெட்டினும் ஒன்று. இது அடர் கருப்பு மற்றும் சாம்பல் நிறத்தில் இருக்கும். இதன் இறகுகள் மட்டும் அடர் சிவப்பு நிறத்தில் காணப்படும். ஆண் பறவைகளின் காதுகளில் சிவப்பு நிற திட்டுகள் இருக்கும். இந்தக் கிளி பறக்கும்போது பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும்.
நியூகினியா பழங்குடி மக்கள் சிவப்பு நிற தொப்பிகள் செய்வதற்காக, இந்தப் பறவையை அதிகம் வேட்டையாடுகிறார்கள். சமீபத்தில் இந்தக் கிளி இனம் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. ஆம், இந்தப் பறவை அழியும் அபாயத்தில் உள்ளது.

