PUBLISHED ON : பிப் 19, 2018

அணு எண், அணு எண் என்கிறார்களே? அது எப்படி வந்தது? அதை வைத்துக்கொண்டுதான் தனிம வரிசை அட்டவணை வேறு உருவாக்கப்பட்டுள்ளது. இதனை எப்படிப் புரிந்துகொள்வது? காலையில் கிரேஸ் டீச்சர் பாடம் எடுத்தபோதே, கேள்விகள் உருவாகிக்கொண்டே இருந்தன. வேதியியல் பாடம் என்றாலே கொஞ்சம் சிரமம்தான்.
இன்றைக்கு கிரேஸ் டீச்சருக்கு என்ன ஆச்சோ தெரியவில்லை. கேள்வி கேட்கவே விடவில்லை. வேகவேகமாக பாடங்களை நடத்திக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்துக்குப் பிறகு அவர்கள் நடத்துவது அத்தனையும் தலைக்கு மேல் என்னவோ ஓடுவது போல் இருந்தது.
நூலகத்துக்கு வந்தது அதற்காகத்தான். அடாமிக் நம்பர் எப்படி வந்தது? என்று படிக்க ஆரம்பித்தபோது, பயங்கர சுவாரசியமாக இருந்தது. அதைவிட, குழப்பம் இன்னும் அதிகமாகத்தான் ஆனது. ஏதோ கொஞ்சம் புரிந்தது; நிறைய புரியவில்லை. அணு எண்ணை Z என்று குறிப்பிடுகிறார்கள். அதற்கு ஏன் வேறு ஆங்கில எழுத்துகளைப் பயன்படுத்தவில்லை. Z என்ற எழுத்தைத் தேர்வு செய்தது ஏன்?
உண்மையைச் சொன்னால் ஒன்றும் புரியவில்லை. 'தனிமங்களின் பெயரையும் அணு எண்ணையும் அப்படியே மனப்பாடம் செய்துகொள்' என்றாள் ஓவியா. தேர்வில் தனிமங்களில் பெயரைக் கொடுத்து அணு எண் என்ன என்று கேட்பார்கள். அதற்குப் பதில் சொன்னால் போதும் என்பது அவளது வாதம்.
என்ன கஷ்டம் இது? மனப்பாடமே செய்ய வராது. புரிந்துகொள்ள ஆரம்பித்தால், பூச்சி தான் பறக்கிறது.
“என்ன விஷயம் கதிர்? என்ன படிக்கறே?”
திரும்பிப் பார்த்தால், உமா மிஸ் நின்றுகொண்டிருந்தார். கூடவே ஓவியா. என் முகத்தில் தெரிந்த கலவரம் மிஸ்ஸை பயமுறுத்தியிருக்க வேண்டும்.
“அடாமிக் நம்பர்னு ஒண்ணு சொன்னாங்க மிஸ். அது என்ன? எப்படி வந்தது?ன்னு தேடிக்கிட்டு இருக்கேன் மிஸ்.”
“கெமிஸ்ட்ரி மிஸ்ஸையே கேட்கவேண்டியதுதானே?”
“அவங்க போர்ஷனை முடிக்கறதுல பயங்கர வேகமா இருக்காங்க மிஸ். பேசவே முடியலை.”
“நான் தான் சொன்னேனே கதிர். அணு எண்ணை மட்டும் மனப்பாடம் பண்ணு. போதும்.”
நான் அமைதியாக இருந்தேன். எல்லோருக்கும் சுலபமாக இருப்பது எனக்குத்தான் சிரமமாக இருக்கிறது.
“இதுக்குத்தான் 'போகில்' முறையைப் பின்பற்றணும். ஒண்ணு, ரெண்டு வகுப்பாவது அப்படி செய்யலாம்னு ஸ்கூல் மேனேஜ்மென்ட் கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கேன். 'போகில்' இருந்தால், இந்தச் சந்தேகமோ, குழப்பமோ இருக்கவே இருக்காது,” என்றார் உமா மிஸ்.
அதென்ன 'போகில்'? உமா மிஸ் தெளிவுபடுத்த ஆரம்பிச்சார். செயல்முறை சார்ந்த நெறிப்படுத்தப்பட்ட ஆய்வுமுறைக் கற்றல் (Process Oriented Guided Inquiry Learning - POGIL) என்பதைத்தான் போகில் என்கிறார்கள்.
அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிலும் உயர்நிலைப் பள்ளிகளிலும்கூட இந்த முறை வந்துவிட்டது. மூன்று, நான்கு மாணவர்கள் ஒன்றாகச் சேர்ந்து படிக்க வேண்டும். அவர்கள் அந்த வகுப்பில் என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான இலக்கு உண்டு. அதேபோல், அவர்கள் தங்களுக்குள் என்ன திசையில் கேள்விகள் கேட்டு, தெளிவு பெற முயற்சி செய்யவேண்டும் என்றும் நெறிப்படுத்துவார்களாம்.
“கிளாஸே எடுக்க மாட்டாங்களா மிஸ்?” ஓவியா கேட்டாள்.
“கிளாஸே வேற மாதிரி இருக்கும். அங்கே ஆசிரியர், ஆசிரியர் வேலையைச் செய்ய மாட்டார். அவர் ஒரு 'கல்வி உதவியாளர்.' நீங்கள் சரியான திசையில்தான் சொந்தமா கத்துக்கறீங்களான்னு மேற்பார்வை தான் பார்ப்பார். எங்கேனும் தவறான திசையில் போகும்போது, அவர் சரியான திசையில் திருப்பிவிடுவார். அப்பவும், அவர் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லமாட்டார்.”
“அப்ப எல்லாத்தையும் நாங்களே, படிச்சு புரிஞ்சுக்கணுமா?”
படிப்பு மட்டுமல்ல, கேள்வியும் விசாரணையும், உரையாடலும் தான் தெளிவு பிறக்க வழி. 'குரூப் ஸ்டடி' என்று சொல்வதைத்தான் அமெரிக்காவில் 'போகில்' என்கிறார்களோ?
“அப்படியும் புரிஞ்சுக்கலாம். ஆனால், இந்த முறையில் எல்லாமே 'நெறிப்படுத்தப்பட்டு' இருக்கும். ஒவ்வொரு வகுப்பு முடியும்போதும், என்ன கத்துக்கணுமோ, அதை முழுமையாக கத்துக்கிட்டு இருப்பீங்க. எவ்வளவு கத்துக்கறீங்க என்பதைவிட, எவ்வளவு ஆழமா கத்துக்கணும்ங்கறதுதான் இங்கே முக்கியம்.”
“ஸ்லோ லேனர் இருந்தா என்ன ஆகும் மிஸ்?”
“ஒண்ணும் ஆகாது. அவரும், எல்லோரையும் போலவே முழுமையா பலனை அனுபவிப்பார். புரியல, தெரியலங்கற எண்ணமே ஏற்படாது. இது ஒரு கூட்டு முயற்சி. எல்லோரும் சேர்ந்து மேலே உயரணும். அப்படியானால், ஒருத்தரை கீழே விட்டுட்டு மேலே ஏற முடியாது இல்லையா?”
“அப்ப, நானே டீச்சர், நானே மாணவரா மிஸ்?”
“கரெக்ட், நீங்களே டீச்சரா இருக்கும்போது, இன்னும் மூணு பேருக்குச் சொல்லிக் கொடுக்கணும். அப்படியானால், நீ படிச்சதையே மேலும் தெளிவாக எடுத்துச் சொல்ல ஆரம்பிப்பே. அப்படிச் செய்யும்போதே, உன்னுடைய புரிதலும் கல்வியும் மேலும் விரிவடையும். படிப்படியாக எல்லோரோட அறிவும் உயர்வதற்கான வழி தான் 'போகில்.'”
“இந்தியாவுக்கு இந்தக் கல்விமுறை வந்துடுச்சா மிஸ்?” என்று கேட்டான் கதிர்.
“வந்துடுச்சு. பல்கலைக்கழகங்கள் அளவுல இதனை சோதனை செய்திருக்காங்க. பள்ளிகளிலும் முயற்சி செய்யப் போறாங்க.”
- (தொடரும்)
தகவல் பெட்டகம்
* வேதியியல் பாடத்தை மாணவர்களே உணர்ந்து படிக்க 1994 முதல் அறிமுகமானது 'போகில்' கல்வி முறை. இதற்கு அமெரிக்காவில் உள்ள ஃபிராங்க்ளின் அண்ட் மார்ஷல் கல்லூரியின் வேதியியல் பேராசிரியர் டாக்டர் ரிக் மூக் தான் தலைவர்.
* இன்றைக்கு வேதியியலோடு, அனைத்துப் பாடங்களையும் 'போகில்' முறையில் பயிற்றுவிக்கும் வசதி ஏற்பட்டுவிட்டது.
* 'போகில்' முறையை மாணவர்கள் வரவேற்கின்றனர். வழக்கமான கல்விமுறையைவிட, இதனையே அவர்கள் அதிகம் விரும்புகின்றனர்.
* தேர்வுகளில் மாணவர்கள் வாங்கும் மதிப்பெண்கள் பெருமளவு உயர்ந்திருக்கின்றன.
* வழக்கமான போதிக்கும்முறையோடு, 'போகில்' முறையையும் இணைத்துப் பயன்படுத்தும் உயர்நிலைப் பள்ளிகள் அமெரிக்காவில் இருக்கின்றன.