தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/சிலையும் நானே! சிற்பியும் நானே!

சிலையும் நானே! சிற்பியும் நானே!

சிலையும் நானே! சிற்பியும் நானே!


PUBLISHED ON : ஏப் 17, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 17, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நானும் பாலுவும் சாக்பீஸ்களை வைத்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருப்போம். வகுப்பில் சமயத்தில் பின் பெஞ்சில் உட்கார்ந்திருந்தால், ரகசியமாக டெஸ்க்கிலிருந்து டிபன் பாக்ஸ் சாப்பாட்டை எடுத்து சாப்பிடுவது ஒரு த்ரில். அதே மாதிரி இன்னொரு த்ரில், சுண்ணக்கட்டியில் (Chalk Piece) சிற்பங்கள் செய்வதாகும். டீச்சரிடம் மாட்டிக்கொள்ளும்போது முதல் பதற்றமே, செதுக்கிக்கொண்டிருந்த சாக்பீஸ் பறிபோகாமல்/உடைந்துவிடாமல் இருக்க வேண்டுமே என்பதுதான்.

சாக் பீசில் சிற்பம் செதுக்குவது மிகக் கடினம். நானெல்லாம் கல்லிலோ உலோகத்திலோ சிலை செய்ய முயற்சித்ததே கிடையாது. அதனால் அதெல்லாம் எவ்வளவு கடினம் என்று தெரியாது. ஆனால் சாக் பீஸ் சிற்பம் மிக மிகக் கடினமானது. ஏனென்றால் சாக் பீஸ் மிக மென்மையானது. குண்டூசியால் செதுக்கும்போது சட்டென உடைந்துவிடும். இதுவரை 12 சாக் பீஸ் சிற்பங்கள் நானும் பாலுவும் செய்திருக்கிறோம். நான் செய்த ஒரு சிற்பத்துக்கு பாலு என்று பெயர். பாலு செய்த ஒரு சிற்பத்துக்கு மாலு என்று பெயர். இரண்டும் எங்களை மாதிரி இருக்காது. ஆனால் எங்களை வைத்து செய்தவை என்பதால் எங்கள் பெயர்!

இந்தியாவில் நிறைய சாக் பீஸ் சிற்பிகள் இருக்கிறார்கள். அவ்வளவு மெல்லிசான சாக் பீசில் எப்படிச் செய்தார்கள் என்று பிரமிக்கிறமாதிரி, விவேகானந்தர், திருவள்ளுவர், அமிதாப் பச்சன், பாலகிருஷ்ணன், சங்கிலி, வளையம், பைசா கோபுரம் என்று என்னென்னவோ செய்திருக்கிறார்கள்.

ஞாநி மாமா நீண்ட நாட்களாகவே எங்கள் இருவரையும் சுடுமண் சிற்பங்கள் செய்யும்படி சொல்லிக் கொண்டிருக்கிறார். எனக்கும் அவற்றைப் பிடிக்கும். குறிப்பாக கிராமங்களில் இருக்கும் அய்யனார், குதிரை டெரகோட்டா சிலைகள் ரொம்ப ரொம்பப் பிடிக்கும். களிமண்ணில் செய்து பிறகு சூளையில் வைத்துச் சுட வேண்டும். சென்னையில் சூளை, சூளை மேடு, சூளைப் பள்ளம் என்று நிறைய இடங்களுக்குப் பெயர் இருக்கிறதே தவிர, அசல் சூளையைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

பள்ளிக்கூடத்தில் ஒவ்வொரு மாணவரையும் கண்டிப்பாக ஏதாவது ஒரு சிற்பம் களிமண்ணிலோ, சாக் பீசிலோ, மரத்திலோ, கல்லிலோ செய்யும்படி உத்தரவிடவேண்டும். அதற்குத் தரும் மதிப்பெண்ணை மொத்த மதிப்பெண்ணில் சேர்க்கவேண்டும். அப்போதுதான் சிற்பத்தின் அருமை எல்லாருக்கும் புரியும். சுற்றுலா போகிற இடங்களில் எல்லாம் சிற்பங்களை உடைப்பது, அவற்றின் மேல் பெயர்களை அசட்டுத்தனமாக கீறிவைப்பது எல்லாம் எவ்வளவு தப்பு என்று புரியும்.

புதிதாக சிற்பங்களை உருவாக்குவதைவிட, ஏற்கனவே இருக்கிற சிற்பங்களை பத்திரமாக காப்பாற்றிப் பராமரிப்பது பெரிய வேலை என்று தோன்றுகிறது. மகாபலிபுரத்திலோ, தாராசுரத்திலோ இருக்கிற மாதிரி சிற்பங்களை இன்னொரு முறை யாரும் எங்கேயும் செய்யவேமுடியாது. செய்யப் போவதும் இல்லை. இருப்பதை நாம் காப்பாற்றவேண்டாமா? அதனால்தான் பள்ளிப் படிப்பின்போதே சிற்பம் மாதிரி அபூர்வமான கலைகளைப் பற்றிய அறிவையும் அக்கறையையும் ஏற்படுத்தவேண்டும்.

“கலைகளைப் பற்றி மட்டுமல்ல; சமூகத்தைப் பற்றிய அக்கறையையும் பள்ளிப் படிப்பிலேயே தரவேண்டும்” என்றார் மாமா. “உங்கள் பள்ளிக்கூடத்துக்கு அருகே ஒரு மதுக் கடை இருந்தால் அதை மூடச் சொல்லி நீங்கள் கேட்கவேண்டாமா? வேறு யார் கேட்பார்கள் ?” என்றார் அவர். “அதெல்லாம் பெரியவர்கள் கவனித்துக் கொள்ளமாட்டார்களா ?” என்றேன். “பெரியவர்களில் சிலர் கவனிப்பார்கள். சிலர் தவறு செய்வார்கள். எது சரி, எது தவறு என்று சின்ன வயதிலிருந்தே நீங்கள் அவர்களைப் பார்த்துக் கற்றுக்கொள்வது நல்லது.”

“திருப்பூரில் புது மதுக்கடை திறக்கும்போது, பெண்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் கடையைத் திறக்கப் போவதில்லை என்று கலெக்டர் அறிவித்திருக்கிறாரே” என்றான் பாலு. “ஒவ்வொரு முறையும் எதிர்க்க முடியுமா? திறப்பதற்கு முன்னால் பொதுமக்களைக் கேட்டுவிடலாமே?”என்றேன். “அப்படிக் கேட்பதற்கு பஞ்சாயத்துராஜ் சட்டம் வழி செய்கிறது. ஒவ்வொரு பஞ்சாயத்திலும் கிராம சபையைக் கூட்டி, மக்கள் கருத்தைக் கேட்கவேண்டும்.” என்றார் மாமா.

“எல்லா விஷயத்தைப் பற்றியும் மக்களுக்கு அறிவு இருக்குமா?” என்றான் பாலு. “இருக்காதுதான். ஆனால் அதை ஏற்படுத்த வேண்டாமா? எல்லாரும் குறைந்தபட்சப் படிப்பு, அறிவுடன் உருவாகச் செய்வதுதானே அரசாங்கத்தின் வேலை?” என்று கேட்டார் மாமா.

“அப்படிச் செய்தால் அரசியல்வாதிகளுக்கு வேலை இல்லாமல் போய்விடும், அதைச் செய்யவே மாட்டார்கள்.” என்றது வாலு.

“அப்படியானால், நம்மை நாமே செதுக்கி சீராக்கிக் கொள்ளவேண்டும். சிற்பம் செய்வது என்பது வெளியில் செய்வது மட்டுமல்ல. நம் உள்ளுக்குள்ளேயே செய்வதும்தான். ஒரு கல்லில் வேண்டாததை எல்லாம் நீக்கினால் அதற்குள்ளிருந்து அழகான உருவம் வருவது போல, நமக்குள் வேண்டாததை எல்லாம் நாமே நீக்கினால், நமக்குள் இருக்கும் அழகான உருவம் வெளிப்படும். பின்னர் அது எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளும்.”என்றார் மாமா.

“அதாவது, சிலையும் நானே. சிற்பியும் நானே” என்றேன்.

வாலுபீடியா 1:

உலகப் பாரம்பரிய இடங்கள் பாதுகாப்பு தினம்: ஏப்ரல் 18

உலகச் சிற்ப தினம்: ஏப்ரல் 24

தேசிய பஞ்சாயத்துராஜ் தினம்: ஏப்ரல் 24

வாலுபீடியா 2: உலகின் முதல் சிற்பங்கள் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே செய்யப்பட்டுவிட்டன. இந்தியாவில் சிந்து சமவெளி நாகரிகத்தில் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சிற்பங்கள் செய்யப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us