
உலகில் இருக்கும் பொருட்கள் எல்லாம் பல்வேறு தனிமங்களால் ஆனவை; தனிமங்கள் எல்லாம் மிகச் சிறிய அணுக்களால் ஆனவை என்று கேள்விப்பட்டு இருக்கிறோம். எழுதும்போது வைக்கும் ஒரு புள்ளிக்குள் 20 லட்சம் அணுக்களை அடக்கிவிடலாம். அணுவின் எடை அவ்வளவு குறைவு. ஹைட்ரஜன் அணுவின் எடை 1.673 X 10---24 கிராம் என்று சொல்கிறார்கள். அதாவது 1.673 என்ற எண்ணை, ஒன்றுக்குப் பக்கத்தில் 24 பூஜியங்கள் சேர்த்த ஒரு எண்ணால் (10,00,00,00,00,00,00,00,00,00,00,000) வகுத்தால், என்ன கிடைக்குமோ அவ்வளவு கிராம் தான் ஹைட்ரஜன் அணுவின் எடை.
ஒவ்வொரு அணுவிலும் அணுக்கரு என்ற மையப்பகுதி இருக்கும். அதைச் சுற்றி 'எலக்ட்ரான்' எனும் துகள்கள், தங்களின் பாதைகளில் சுற்றிக்கொண்டிருக்கும். அணுக்கருவுக்குள், புரோட்டான் எனும் துகள்களும், நியூட்ரான் எனும் துகள்களும் பிணைந்து இருக்கும். இந்தப் பிணைப்பை எளிதில் உடைக்க முடியாது. ஒரு வேளை அது உடைபட்டால் வெளிப்படக்கூடிய ஆற்றலுக்கு 'அணு ஆற்றல்' என்று பெயர்.
அணுவுக்குள் பொதிந்து இருக்கும் ஆற்றலை அளப்பதற்கான சூத்திரத்தை ஐன்ஸ்டீன் 1905ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார்.

