தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/அழகான கையெழுத்து அவசியமா?

அழகான கையெழுத்து அவசியமா?

அழகான கையெழுத்து அவசியமா?


PUBLISHED ON : ஜூன் 11, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 11, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிலர் அச்சுக்கோத்தது போல், தெளிவாக அழகாக எழுதுவார்கள். சிலரின் கையெழுத்து ஏதோ வேற்றுக்கிரக மொழியைப் போல புரியாமல் இருக்கும். கையெழுத்து ஏன் அழகாக இருக்க வேண்டும். ஆசிரியர், மாணவர் சிலரிடம் கேட்டோம். அவர்களின் கருத்துகள்:

தமிழ்ச் செய்யுட் பகுதியை எழுதும்போது, சீர் பிரித்து, புரியும்படி, அழகாக எழுதும் மாணவர்களை மிகவும் பிடிக்கும். அவர்களின் முகத்தைப் பார்க்காமலே, அவர்கள் மீது ஒரு நல்ல எண்ணம் ஏற்படும். தேர்வுகளில், முழு மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற நிலை ஏற்படும். அந்த மாணவர்களுக்குப் பாராட்டும் கிடைக்கும். அதை மேம்படுத்தும் வகையில், எங்கள் பள்ளியில், 'கையெழுத்து நேரம்' என ஒதுக்கி, தமிழ், ஆங்கில எழுத்துப் பயிற்சிகளை அளிக்கிறோம்.

நா.ரேணுகா, தமிழாசிரியர், மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி, எழும்பூர், சென்னை.

அழகான கையெழுத்து என்பது, படிப்பவரைக் கவரும் ஒரு தனிக்கலை. நாம் நினைப்பதை, தெளிவான உச்சரிப்போடு சொல்வதைப் போலவே, நினைப்பதை எழுதும்போது, நேராக, அடித்தல் திருத்தல் இன்றி, இடைவெளி விட்டு எழுதினால்தான், படிப்பவரின் மனத்தை ஈர்க்க முடியும். எனக்கு அழகான கையெழுத்து இருப்பதால், கட்டுரைப் போட்டிகளில், என்னால் அடிக்கடி முதற்பரிசைப் பெறமுடிகிறது.

எம்.யுவராணி, 12ஆம் வகுப்பு மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி, எழும்பூர், சென்னை

கிறுக்கலான கையெழுத்து, புரிந்து கொள்வதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. பாடங்களை எழுதுவது முதல், பணிகளில் எழுதுவது வரை தெளிவாகவும், திருத்தமாகவும் எழுதப் பழகிக்கொள்ள வேண்டும். தொடர்ந்து கையெழுத்துப் பயிற்சி செய்தால் எல்லோராலும் அழகாக எழுத முடியும்.

கோ.ஜெகந்நாதன், ஆசிரியர் இந்து மேல்நிலைப் பள்ளி, திருவல்லிக்கேணி, சென்னை.

அழகான கையெழுத்து மாணவர்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே அவசியமானது. அழகான கையெழுத்தைப் பார்க்கும்போதே, படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும். எழுதப்பட்ட கருத்தை, சிரமமின்றிப் படிக்க முடியும். மாணவர்களுக்கு அழகான கையெழுத்து இருந்தால், மற்ற மாணவர்களிடம் இருந்து தனித்துத் தெரிவார்கள். அழகாக எழுதுவோரின் தாள்களில் ஓர் ஒழுங்கு இருக்கும். அவர்களின் நடத்தையிலும், ரசனையும் அமைதியும் வெளிப்படும்.

கே.சந்திரலேகா, உதவித் தலைமை ஆசிரியை, மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி, எழும்பூர், சென்னை.

மாணவர்கள், தாங்கள் கற்றதை எழுதி வெளிப்படுத்துவதில் கையெழுத்து முக்கியப்பங்கு வகிக்கிறது. நன்றாகப் படித்த மாணவர் கூட தெளிவாக எழுதாமல், கிறுக்கலாக எழுதுவதால் உரிய மதிப்பெண்களைப் பெறமுடியாமல் போய்விடுகிறது. எனவே, படிக்கும்போதே மாணவர்கள் தெளிவாகவும், திருத்தமாகவும் எழுதப் பழகிக்கொள்வது நல்லது. தொடர்ந்து பயிற்சி செய்தால் எல்லோரும் அழகாக எழுதலாம்.

க.அபிராமி, தலைமை ஆசிரியை, குருகுலம் பெண்கள் உயர்நிலைப் பள்ளி, குருகுலம்.

சிறுவயதில் இருந்தே, 'தெளிவாக எழுது' என பெற்றோர் அறிவுரை கூறுவர். தாமதமானாலும், அடித்தல், திருத்தல் இல்லாமல் எழுதப்பழகு என அவர்கள் அடிக்கடி கூறியதால், தற்போது என் கையெழுத்து அழகாக உள்ளது. சிறுவயதில் கையெழுத்துக்காகவே, பரிசுகளைப் பெற்றுள்ளேன். தேர்வுகளில் அதிக மதிப்பெண்பெற அழகிய கையெழுத்தே துணையாகிறது.

இ.கமலேஷ்வரன், 12ஆம் வகுப்பு இந்து மேல்நிலைப் பள்ளி, திருவல்லிக்கேணி, சென்னை.

வகுப்பில் பாடம் நடத்தும்போது ஆசிரியர்கள் தெளிவாக எழுதி விளக்கினால், மாணவர்கள் ஆர்வத்தோடு கவனித்துப் படிக்கின்றனர். மாணவர்களைப் பொறுத்தவரை, அழகான கையெழுத்துள்ள மாணவருக்குத் தன்னம்பிக்கை அதிகம் இருக்கும். தேர்வுத்தாளை திருத்தும் ஆசிரியருக்கு, கிறுக்கல் எழுத்துகள் சோர்வையும், தெளிவான எழுத்துகள் உற்சாகத்தையும் கொடுக்கும்.

இ.ஜெயந்தி, கணித ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, எம்.கே.பி. நகர், வியாசர்பாடி, சென்னை.

அழகாக எழுதும்போது, மனம் ஒருநிலைப்படும். எழுதி முடித்தபின், நோட்டைப் பார்க்கும்போது, நம்மையே நாம் பாராட்டிக்கொள்ளத் தோன்றும். தோழியரிடம், பாராட்டுப் பெறும்போது சந்தோஷமாக இருக்கும். தேர்வு முடிவில், அந்த மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.

வி.வினோதினி, 9ஆம் வகுப்பு அரசு மேல்நிலைப் பள்ளி, எம்.கே.பி. நகர், வியாசர்பாடி, சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us