sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

'நீட்' தேர்வுக்குப் படித்தால் மட்டும் போதுமா?

/

'நீட்' தேர்வுக்குப் படித்தால் மட்டும் போதுமா?

'நீட்' தேர்வுக்குப் படித்தால் மட்டும் போதுமா?

'நீட்' தேர்வுக்குப் படித்தால் மட்டும் போதுமா?


PUBLISHED ON : ஜூலை 31, 2017

Google News

PUBLISHED ON : ஜூலை 31, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தற்காலத்தில் பள்ளி இறுதி வகுப்பு படிக்கும்போதே, உயர் கல்விக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராக வேண்டியுள்ளது. அதுவும், மருத்துவம் சார்ந்த உயர் கல்வியில் சேர்வதற்கு, 'நீட்' தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 பாடத் திட்டத்தில் இருந்துதான் 'நீட்' தேர்வுகளுக்கான கேள்விகள் கேட்கப்படுகின்றன. இந்தச் சூழ்நிலையில் மருத்துவப் படிப்பை உயர் கல்வியாகத் தேர்ந்தெடுக்க இருப்பவர்கள், பிளஸ் 2 பாடத்தில் கவனம் செலுத்தாமல், 'நீட்' தேர்வுக்குப் படித்தால் மட்டும் போதுமா என்று சென்னை, வடபழனி ஜே.ஆர்.கே. மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களிடம் உரையாடினோம். தெளிவாகவும், உற்சாகத்துடனும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.

அ.அன்னபூரணி - 12ம் வகுப்பு: 'நீட்' தேர்வு கொண்டு வந்ததன் நோக்கமே, இந்தியா முழுக்க ஒரே மாதிரியான தரத்தோடு மாணவர்களுக்கான கல்வி அமைய வேண்டும் என்பதற்காகத்தான். நம் பாடத்திட்டத்தில், சில விஷயங்கள் விடுபட்டிருக்கலாம். இதை 'நீட்' தேர்வுக்குப் படிப்பதன் மூலமாகக் கற்றுக்கொள்ளலாம். பிளஸ் 2 தேர்வுக்குக் கவனம் செலுத்திப் படிப்பதைப் போலவே, மருத்துவத் துறையைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள், 'நீட்' தேர்வுக்கும் கடின உழைப்பைச் செலுத்திப் படிக்க வேண்டும். இதனால், நம் அறிவும், திறனும் கூடும்.

மு.ஸ்வாதி - 12ம் வகுப்பு: 'நீட்' தேர்வுக்குத்தான் அதிக கவனம் செலுத்திப் படிக்க வேண்டும். முன்பு பல நுழைவுத் தேர்வுகள் இருந்ததால், அதற்காக பல்வேறு புத்தகங்களைப் படிக்க வேண்டியிருந்தது. இப்போது, 'நீட்' என்ற ஒரே நுழைவுத் தேர்வுதான். பிளஸ் 2 படிக்கும்போதே, 'நீட்' தேர்வுக்கு கவனம் செலுத்திப் படிக்கலாம். பிளஸ் 2 பாடத்திட்டத்தில் இருந்தே, 'நீட்' தேர்வுகளுக்கான கேள்விகள் கேட்கப்படுகின்றன என்பதால், 'நீட்' தேர்வுக்குப் படித்தால் மட்டுமே போதும்.

சே.திருமலைவாசன் - 12ம் வகுப்பு: பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் படிக்கிற விஷயங்களை முறையாகப் படித்துப் புரிந்துகொள்கிறார்களா என்பதைச் சோதிக்கவே, 'நீட்' நுழைவுத் தேர்வு கொண்டு வரப்பட்டது. பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டத்தோடு, அதை உள்ளடக்கிய 'நீட்' தேர்வுக்கானவற்றையும் படிக்கலாம்.

ரா.திவ்யதர்ஷிணி - 12ம் வகுப்பு: இத்தனை ஆண்டுகளாக பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், 'கட் ஆஃப்' மதிப்பெண்ணை வைத்துத்தான் மருத்துவப் படிப்புக்குத் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால், திடீரென மருத்துவப் படிப்புக்கு, 'நீட்' என்ற நுழைவுத் தேர்வு கொண்டு வந்ததால், மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். பல பள்ளிகளில், பிளஸ் 1 பாடத்திட்டம் நடத்தப்படாத நிலைதான் இதுவரை இருந்தது. மேலும், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டே 'நீட்' தேர்வுக்கான கேள்விகள் அமைகின்றன. மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் பாடத்திட்ட 'புளு பிரிண்ட்' வேறு. இதனால் நகர்ப்புற, கிராமப்புறப் பள்ளி மாணவர்களைப் பாதிக்கிறது. பிளஸ் 2 படிக்கும்போது, அதற்கான பாடத்திட்டங்களைப் படித்தால் மட்டும் போதும். 'நீட்' தேர்வுக்குத் தனியாகப் பயிற்சி எடுத்துப் படிக்க வேண்டும்.

அனிருத்தன் மணிவண்ணன் - 12ம் வகுப்பு: 'நீட்' தேர்விற்குப் படித்து தேர்ச்சி பெற்றாலும், போதிய மருத்துவ இடங்கள் இல்லாத காரணத்தால், மருத்துவம் படிக்க முடியாத நிலையும் ஏற்படலாம். பிளஸ் 1 படிப்பிற்கு, பொதுத்தேர்வு முறை அறிமுகம் செய்துள்ளார்கள். இந்த நிலையில், பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கும் கவனம் செலுத்திப் படிக்க வேண்டியுள்ளது. அந்தந்த ஆண்டுக்குரிய பாடங்களைத்தான் கவனம் செலுத்திப் படிக்க வேண்டும். அப்போதுதான், பாடங்களைப் புரிந்துகொண்டு படிக்கவும், அதிக மதிப்பெண்கள் பெறவும் முடியும். 'நீட்' தேர்வுக்கு, அதற்கான பாடத்திட்டத்தைத் தனியாகத்தான் படிக்க வேண்டும்.

லோ. நரேஷ்கண்ணா - 12ம் வகுப்பு: பிளஸ் 2 தேர்வுக்குத்தான் கவனம் செலுத்திப் படிக்க வேண்டும். எல்லோரும் மருத்துவப் படிப்பைத் தேர்ந்தெடுப்பதில்லை. அதனால், மருத்துவம்தான் படிக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள், 'நீட்' தேர்வுக்கு தனியாகப் படிக்க வேண்டும். அதற்கு நிறைய பயிற்சிப் பள்ளிகளும் உள்ளன. பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு என்ற நிலையில், அந்த ஆண்டிற்கான பாடத்திட்டத்தைத்தான் கவனம் செலுத்திப் படிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us