PUBLISHED ON : மார் 28, 2016

இன்றைய அறிவியல் உலகத்தில் கணினி அல்லது இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட்போன், அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக ஆகிவிட்டது. விரல் நுனியில் தகவல்கள்; இமைக்கும் நேரத்தில் தகவல் பரிமாற்றம் என உள்ளங்கைக்குள் உலகத்தைச் சுருக்கிய கணினியின் ஃப்ளாஷ்பேக் தெரியுமா?
கணினி வரலாறு: உலகின் முதல் கணினி 'மார்க் - 1'. ஐ.பி.எம். (IBM) நிறுவனத்திற்காக, 1944ல் ஹார்வார்டு பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர். ஹோவார்டு (Howard) உருவாக்கினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் 1946ல் பிரஸ்பெர் எக்கெர்ட் (Presper Eckert), ஜான் மவுக்ளி (John Mauchly) இருவரும் சேர்ந்து 'எனியாக்' (ENIAC - Electronic Numerical Interpreter And Calculator) என்னும் பெரிய்ய்ய... கணினியை, ராணுவத் தேவைகளுக்காக உருவாக்கினர். இதன் எடை 30 ஆயிரம் கிலோ, நீளம் 100 அடி, உயரம் 8 அடி.
முதன்முதலாக, 1951ஆம் ஆண்டில்தான் கணினி விற்பனைப் பொருளாக அறிமுகம் செய்யப்பட்டது. 'யுனிவாக்1' (UNIVAC1: Universal Automatic Computer1) என்கிற கணினியை மார்ச் 31, 1951ல் அமெரிக்க அரசு விலைக்கு வாங்கி, மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பயன்படுத்தியது. அதன் பிறகே, கணினியின் பயன்பாடு அதிகரிக்க ஆரம்பித்தது.
முதல் தலைமுறைக் கணினி: (1944 - 1955) : ஐ.பி.எம். - 650
இரண்டாம் தலைமுறைக் கணினிகள்: (1956 - 1963): ஐ.பி.எம்.- 70, யுனிவாக் பி - 5000, ஜி.இ. - 635.-
மூன்றாம் தலைமுறைக் கணினிகள்: (1964 - 1971): ஐ.பி.எம். 360/370, ஸ்பெக்ட்ரா - 70
நான்காம் தலைமுறைக் கணினிகள்: கணினி வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக 1971ஆம் ஆண்டில் நுண்செயலி (Microprocessor) கண்டுபிடிக்கப்பட்டது. இதுதான் இன்றைக்கு நாம் பயன்படுத்தும் எல்லாவித மின்னணுக் கருவிகளிலும் இதயமாகச் செயல்படுகிறது.
விசேஷப் பயன்பாடுகள்
* தொலை மருத்துவம் (Tele Medicine)
* மின்னணு மேலாண்மை (E - Governance)
* உயிரி தொழில்நுட்பம் (Bio technology)
* நேனோ தொழில்நுட்பம் (Nano technology)
* மின்னணு வணிகம்(E-Commerce)
