தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தண்ணீர் நிர்வாகத்தில் கெட்டிக்காரக் குட்டித்தீவு!

தண்ணீர் நிர்வாகத்தில் கெட்டிக்காரக் குட்டித்தீவு!

தண்ணீர் நிர்வாகத்தில் கெட்டிக்காரக் குட்டித்தீவு!


PUBLISHED ON : ஜூலை 01, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 01, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

700 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட குட்டித்தீவுதான்... ஆனால், 45 இலட்சம் மக்கள் செறிந்து வாழும் பகுதி. அத்துடன் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளும் வந்து செல்லும் பரபரப்பான இடமாக இருக்கிறது சிங்கப்பூர்.

ஆனால், அடிப்படையான குடிநீர்த் தேவையை நிறைவுசெய்ய இயற்கையான நன்னீர் ஆதாரங்கள் எதுவுமே கிடையாது. இந்நிலையில், சிங்கப்பூரின் தெருக்குழாய்களிலும்கூட சுத்தமான குடிநீர், பற்றாக்குறையின்றிக் கிடைக்கிறது.

நிலத்தடி நீர் வளமும், அணைகளும், நன்னீர் ஆதாரங்களும் உள்ள தமிழகத்திலேயே தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு வருகிறது; நீர் வளங்கள் எதுவுமே இல்லாத சிங்கப்பூரில், குடிநீர் குறைவின்றிக் கிடைப்பது எப்படி? உலகின் மிகச்சிறந்த நீர்மேலாண்மையை சிங்கப்பூர் தன்வசம் கொண்டிருப்பதே இதற்குக் காரணம்.

முன்னர், நீர் ஆதாரங்கள் அற்ற சிங்கப்பூர், தண்ணீருக்காக மலேசியாவை மட்டுமே நம்பியிருந்தது. 1942இல், மலேசியாவின் ஜோகூர் ஆற்றிலிருந்து சிங்கப்பூருக்குச் செல்லும் தண்ணீர்க் கால்வாய், பிரிட்டிஷ் படையால் தகர்க்கப்பட்டது.

இதன் விளைவாக, பெரும் தண்ணீர்ப் பிரச்னையில் சிங்கப்பூர் சிக்கியது. அப்போதுதான், உள்நாட்டின் நீர் ஆதாரங்களைப் பெருக்க வேண்டும் என்ற சிந்தனையை சிங்கப்பூர் ஆழமாக உள்வாங்கியது.

மலேசியாவுடன் செய்த தண்ணீர் ஒப்பந்தமும் 2061ஆம் ஆண்டுடன் நிறைவடைகிறது. எனவே, உள்நாட்டிலேயே தண்ணீர் ஆதாரங்களைப் பெருக்கி, தன்னிறைவு அடைய வேண்டும் என்பதில் சிங்கப்பூர் உறுதியாக இருந்தது. மலேசியத் தண்ணீர் இறக்குமதி 50 சதவீதம் தேவையை நிறைவுசெய்ய, மீதத்தை சுயமாகவே நிறைவுசெய்து கொள்ளும் அளவுக்கு சிங்கப்பூர் முன்னேறியுள்ளது. அப்படி என்னென்ன செய்து வருகிறது அந்நாட்டு அரசு?

மழைநீரைப் பிடி...

சிங்கப்பூரில் காலியாக கிடந்த பல இடங்கள் பிரமாண்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளாக மாற்றப்பட்டு, நாடு முழுவதும் 17 நீர்த் தேக்கங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இக்குட்டி நாட்டின் முழுப்பகுதியுமே நகர்ப்புறம்தான். ஆனாலும், வடிகால்கள், கால்வாய்கள் போன்ற சிறந்த கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, மழைநீர், நீர்த்தேக்கங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பல்வேறு கட்ட சுத்திகரிப்புகளுக்குப் பின்னர், மக்களின் குடிநீர்த் தேவைக்கு வழங்கப்படுகிறது.

தண்ணீர் புதுசு…

பயன்படுத்திய நீரை மறுசுழற்சி செய்து, மீண்டும் பயன்படுத்துவதைச் சிங்கப்பூரில் 'புதுத்தண்ணீர்' என்றே அழைக்கிறார்கள்.

இம்முயற்சி 1970களில் தொடங்கப்பட்டாலும், அதிகச் செலவு காரணமாக நிறுத்தப்பட்டது. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கடந்த 2002இல் இத்திட்டம் தொடங்கப்பட்டது.

தற்போது, வெற்றிகரமாக ஐந்து 'புதுத்தண்ணீர்' உற்பத்தி நிலையங்கள் மூலம் நாட்டின் 35 சதவீத தண்ணீர்த் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.

சிங்கப்பூரின் வீடு மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்பட்ட நீரைச் சேகரித்து, புதுநீர் உற்பத்தி நிலையத்துக்குக் கொண்டு செல்கின்றனர்.

அங்கு நுண் வடிகட்டல், சவ்வூடு பரவல், புறஊதா கிருமிஅழிப்பு ஆகிய உயர் தொழில்நுட்ப செயல்முறைக்கு உட்படுத்தி, தூய நீராக மாற்றிப் பயன்படுத்துகின்றனர்.

குடிநீராகும் கடல் நீர்

சிங்கப்பூரின் தண்ணீர்த் தேவையை நிறைவு செய்யும் நான்கு திட்டங்களில், கடல் நீர் சுத்திகரிப்புத் திட்டம் முக்கியமானது. தற்போதைய நிலவரப்படி, சிங்கப்பூரின் தண்ணீர்த் தேவையை, 30 சதவீதம் வரை இத்திட்டம் தீர்க்கிறது. மூன்று கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இயக்கப்படுகின்றன.கடல் நீரைச் சுத்திகரிக்கும் சிறந்த தொழில்நுட்பங்களைக் கொண்ட முன்னணி நாடாக சிங்கப்பூர் உருவெடுத்துள்ளது.

சிக்கனத்தின் அடையாளம்!

மக்கள் கூடும் இடங்கள், பள்ளி வகுப்பறைகள், டி.வி., ரேடியோ, என்று எல்லாவற்றிலும் இதுபற்றிப் பேசப்படுகிறது. ஒவ்வொரு தனிநபரும் தினசரி அதிகபட்சம் 140 லிட்டருக்குள் தண்ணீரைப் பயன்படுத்துங்கள் என்று அரசு வலியுறுத்துகிறது.

இல்லாத நீர் வளத்தை ஏற்படுத்த சிங்கப்பூரால் முடியும்போது, இருக்கும் அபரிமிதமான வளங்களைச் சிறப்பாக நிர்வாகம் செய்ய நம்மால் முடியாதா என்ன?

சிங்கப்பூர் குடிநீர் திட்டங்கள்!

நாளொன்றுக்குப் பெறப்படும் தண்ணீர்

மழைநீர் மூலம் : 5 - 10 %

மலேசியாவிலிருந்து: 50 %

மறுசுழற்சி: 35 %

கடல்நீர் சுத்திகரிப்பு: 25 %

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us