PUBLISHED ON : ஜூலை 31, 2017

ஃபிட்ஜெட் ஸ்பின்னர், உங்கள் கையில் இல்லை என்றால் ஆச்சரியம்தான். இன்றைக்கு பல்வேறு விலைகளில், எல்லா ஊர்களிலும் கிடைக்கும் எளிமையான விளையாட்டுப் பொருள் ஃபிட்ஜெட் ஸ்பின்னர். சின்னவர், பெரியவர் என அனைவரும் மகாவிஷ்ணு கை சக்கரம் மாதிரி, இதனை ஏந்திச் சுற்றிக்கொண்டிருக்கின்றனர்.
இதனால், மன இறுக்கம் குறையும், ஆறுதலும் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். அதேநேரம் பார்ப்பதற்கும் வினோதமாகத் தோன்றாது. மன இறுக்கம், பதற்றம் போன்றவற்றால் அவதிப்படும் சிறப்புக் குழந்தைகளுக்கு, ஃபிட்ஜெட் ஸ்பின்னரின் பயன்பாடு மிகவும் அதிகம் என்கின்றனர். இதன் மூலம், அக்குழந்தைகள் கோபம், வருத்தம் போன்றவற்றைக் கடந்துவர உதவ முடிகிறது.
ஃபிட்ஜெட் ஸ்பின்னர், எளிய விளையாட்டுப் பொருள். இதன் மையத்தில் இருப்பது பால் பேரிங். இதில் இரண்டு வளையத்திற்கிடையில் சின்னச்சின்ன இரும்பு உருளைகள் போடப்பட்டிருக்கும். வெளி வளையத்தை லேசாகச் சுற்றிவிட்டாலே, சில நிமிடங்கள் வரை நின்று சுழலும். அதைச் சுற்றி வேண்டிய வடிவத்தைப் பொருத்தி சுழல விடுகின்றனர். இப்போது, சிறுவர் சிறுமியரின் பிரதான விளையாட்டுப் பொருளாகிவிட்டது இந்த ஃபிட்ஜெட் ஸ்பின்னர்.
ஸ்பின்னருக்கு வடிவம் கொடுத்தவர்
உலகெங்கும் பரபரப்பாக விற்கும் ஒரு விளையாட்டுப் பொருளை வடிவமைத்தவர் எப்படி இருப்பார்? இந்நேரம் கோடிகளில் புரண்டு கொண்டிருப்பார் என்று நினைத்தால் அது தவறு. இந்த பிரம்மாண்ட விற்பனையில் ஒரு பைசா கூட இதைக் கண்டுபிடித்தவருக்குச் சேர்வதில்லை என்பது, ஒரு பெரிய நகை முரண். இத்தனைக்கும் அவர் ஒன்றும் காப்புரிமை பற்றிய விழிப்புணர்வற்ற அப்பாவியும் அல்ல.
கேத்தரின் ஹெட்டிங்கர் (Catherine Hettinger) எனும் அமெரிக்கப் பெண்மணி தான், இன்றைய ஸ்பின்னரைக் கண்டுபிடித்தவர். 90களில் நோயெதிர்ப்பு சக்தி குறைபாட்டால் பாதிப்படைந்து படுக்கையில் வீழ்ந்தார் கேத்தரின். அதிகம் ஓடியாட முடியாத போதும், தனது ஏழு வயது மகள் சாராவை மகிழ்ச்சியாகப் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்ததால், அவர் உருவாக்கிய விளையாட்டுச் சாதனம்தான், இந்த ஃபிட்ஜெட் ஸ்பின்னர்.
ஆரம்பத்தில், சின்னத் தொப்பி வடிவில் இதனைத் தயாரித்தார். சுழலும் இதைக் கண்டு மகளும் அவரும் மகிழ்ச்சியாகப் பொழுதைப் போக்கினர். மகளுக்காக மட்டும் என்றில்லாமல், அதற்கு முன்னரே கேத்தரின் கேள்விப்பட்டிருந்த வேறொரு விஷயமும், இந்தக் கண்டுபிடிப்புக்கான மூல காரணமாக அமைந்தது.
ஒருமுறை, இஸ்ரேல் நாட்டிலிருந்த தனது சகோதரியைச் சந்திக்கச் சென்றிருந்தபோது, அங்கு நடந்த கலவரம் ஒன்றைப் பற்றி கேத்தரின் கேள்விப்பட்டார். அதில், சிறுவர்கள் காவல்துறையினர் மீது கல்லெறிந்தனர் என்று கேட்டதும், வன்முறையின் பாதையில் இருந்து குழந்தைகளை மீட்க ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. தனது ஃபிட்ஜெட் ஸ்பின்னர், குழந்தைகளின் ஆற்றலை ஒருமுகப்படுத்தவும், அதேநேரம் அவர்களின் மன இறுக்கத்தைக் குறைக்கும் ஆற்றலுடைய நல்ல உபகரணம் என்று கண்டுகொண்ட கேத்தரின், தனது உடல் நலம் மீண்டபின், இந்த பொம்மைகளை பெரிய அளவில் செய்து விற்பனைக்கு வைக்க முடிவெடுத்தார்.
முதல் படியாக, 1997ம் ஆண்டு இந்த விளையாட்டுப் பொருளுக்கான காப்புரிமையைப் பெற்றார். அதன்பின், நேரடியாக தானே இதைத் தயாரித்து விற்றுப் பார்த்தார். உபயோகித்த குழந்தைகளுக்குப் பிடித்திருந்தாலும், எதிர்பார்த்த அளவு விற்பனை ஆகவில்லை. எனவே, அமெரிக்காவின் பல பெரிய பொம்மை தயாரிப்பு நிறுவனங்களை அணுகினார். எல்லா இடத்திலும் அவருக்கு ஏமாற்றமே கிடைத்தது.
எல்லா கண்டுபிடிப்பாளர்களைப் போலவே கேத்தரினும், தனது தயாரிப்பின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். குழந்தைகளின் மன இறுக்கத்தைக் குறைக்கவும், வன்முறை எண்ணங்களில் இருந்து திருப்பவும், குறிப்பாக சிறப்புக் குழந்தைகளின் கவனத்தை குவிக்கவும் இந்த பொம்மை மிகவும் பயனளிக்கும் என்ற தளராத நம்பிக்கை, அவருக்கு இருந்தது. ஆனாலும் நடைமுறையில் இதை அவரால் சந்தைப்படுத்த முடியாத நிலையே தொடர்ந்தது. பல ஆண்டுகளாக இந்த விளையாட்டுப் பொருளுக்கான காப்புரிமையை வைத்திருந்த போதும், முன்னேற்றம் எதுவுமில்லை.
இந்நிலையில், 2005ம் ஆண்டு கேத்தரின் தனது காப்புரிமையைப் புதுப்பிக்க வேண்டிய நேரம் வந்தது. அதற்குத் தேவையான, 400 டாலர் (ரூ.26 ஆயிரம்) தொகையை திரட்ட முடியாததால், கேத்தரின், தன் காப்புரிமையைக் கைவிட்டார்.
இன்று, தனது மகள் வயிற்றுப் பேத்தி, கடைகளில் கிடைக்கும் ஸ்பின்னரை வைத்து விளையாடுவதை மகிழ்வுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார் கேத்தரின். யாராவது,''எப்படி சிரிக்க முடிகிறது உங்களால், உங்களுக்கென்ன பைத்தியமா” என்று கேட்டால், ''நிச்சயம் இல்லை. குழந்தைகள் விளையாட என்று நான் வடிவமைத்த பொருள் இது. இந்த ஸ்பின்னர் எதற்குப் பயன்படும் என்று நினைத்தேனோ.. அந்தப் பலனை உலகெங்கும் கொடுத்துக் கொண்டிருப்பது எனக்கு பெருமைதானே” என்று அமைதியாகத் திருப்பிக் கேட்கிறார்.
நன்றியாக நன்கொடை: தன்னலமற்று மகிழும் கேத்தரினுக்கு உதவ, இணையதளம் ஒன்று (https://www.justgiving.com/crowdfunding/fidger-spinner) முன் வந்துள்ளது. மக்களிடமிருந்து 3 ஆயிரம் பவுண்ட் நிதிதிரட்டி, கேத்தரினுக்கு வழங்க முயற்சித்து வருகிறது. (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2.5 லட்சம்). பலரும் அத்தளத்தின் வாயிலாக நன்கொடைகள் வழங்கி வருகின்றனர்.
ஆதாரம் ஏதுமில்லை: இந்த ஸ்பின்னர், குழந்தைகளின் கவனத்தைக் குவிக்கிறது என்ற பொதுவான நம்பிக்கைக்கு, இதுவரையில் எந்தவிதமான அறிவியல் பூர்வமான ஆதாரங்களும் இல்லை. எவ்வகையான ஆய்வுகளாலும் உறுதிப்படுத்தப்படாத இம்முடிவுகளை, பல மருத்துவர்கள், இப்படியான பிரசாரத்தைக் கேள்விக்குள்ளாக்குகின்றனர்.
எச்சரிக்கை தேவை: கையில் வைத்து விளையாடும் சிறு பொருள்தான் என்றாலும், இது சுழலும் வேகம் அதிகம். அதனால், இதைப் பயன்படுத்தும் மாணவர்களும், பெற்றோர்களும் கவனத்துடன் இருப்பது அவசியம்.
ஸ்பின்னருக்குத் தடை: அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் சில பள்ளிகள், ஃபிட்ஜெட் ஸ்பின்னரை மாணவர்கள் பள்ளிக்குக் கொண்டுவர, தடை விதித்துள்ளன. இவ்விளையாட்டு, குழந்தைகளிடம் கல்வியிலிருந்து கவனத்தைப் போக்குவதான குற்றச்சாட்டுகளும் ஆங்காங்கு கேட்கத்தான் செய்கிறது. மேலும் சில குழந்தைகள் இந்த ஸ்பின்னரை வைத்து விளையாடும்போது, காயம்பட்டுக் கொள்வதாகவும் செய்திகள் வெளியாகின்றன.