PUBLISHED ON : நவ 25, 2024

ஒரு சோழ மன்னரின் பெயரில் இந்த ஏரி அழைக்கப்படுகிறது. பொது யுகம் 907 முதல் 953 வரை சோழ நாட்டை அரசாண்ட மன்னர் இவர். 'மதுரையும் ஈழமும் கொண்டான்' என்ற பட்டப் பெயரும் இவருக்கு உண்டு. 'சிவனின் பாதத் தாமரையில் உறையும் வண்டு' என்று தன்னை அழைத்துக்கொண்டார் இந்த மன்னர்.
இவரின் மகன் ராசாதித்தன். தந்தையின் பெயரில் இவர்தான் இந்த ஏரியை உருவாக்கும் பணியில் இறங்கினார். இடையில் திருமுனைப்பாடி நாட்டில் இருந்த திருநாவலூருக்கு (விழுப்புரம் மாவட்டம்) எல்லையைப் பாதுகாக்க, படைகளுடன் சென்றார். அங்கே தங்கி இருந்த காலத்தில், திருநாவலூரில் ஒரு சிவன் கோயிலையும் எழுப்பினார்.
பின்னர் தக்கோலம் போரில் கலந்து கொண்டார் ராசாதித்தன். ராஷ்டிரகூடர்களுடன் ஏற்பட்ட போரில், இரண்டாம் பூதுகன் என்பவர் விட்ட அம்பினால், யானை மீது இருந்து உயிர் விட்டார் ராசாதித்தன். இதனால் 'யானை மேல் துஞ்சிய தேவர்' என்று அழைக்கப்பட்டார்.
ராசாதித்தன் உருவாக்கிய இந்த ஏரி, அவரின் மறைவுக்குப் பிறகே, முழுப் பணியும் நிறைவுற்றது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே, கடல்போல் உள்ள இந்தப் பெரிய ஏரியில் இருந்து, சென்னை மக்களின் தாகம் தீர்க்க நீர் கொண்டு வரப்படுகிறது.
வீராணம் என்று அழைக்கப்படும் இந்த வீரநாராயணன் ஏரி, எந்த மன்னரின் பெயரால் உருவாக்கப்பட்டது?
விடைகள்: முதலாம் பராந்தகச் சோழன். அவரின் இன்னொரு பெயர்தான் வீரநாராயணன்.