தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வடசொல் அறிவோம்: காளஹஸ்திக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது?

வடசொல் அறிவோம்: காளஹஸ்திக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது?

வடசொல் அறிவோம்: காளஹஸ்திக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது?


PUBLISHED ON : மே 14, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 14, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காலத்தைக் குறிப்பதற்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் சொற்களில் பல வடசொற்கள் இருக்கின்றன. முதற்கண் காலம் என்பதையே வடசொல் என்றார்கள். கால் என்பது ஓரிடத்தில் நிற்காமல் தொடர்ந்து நடப்பதற்கு உதவும் உறுப்புக்குப் பெயராகி வருவது. நில்லாமல் உலவும் தன்மையால்தான் காற்றுக்கும் 'கால்' என்ற பெயர் வந்தது. அதனால்தான் காற்று வருவதற்காக கட்டடத்திற்குள் வைக்கும் திறப்புகளான சன்னல்களைக் 'காலதர் ' என்கிறார்கள். கால் என்றால் காற்று. அதர் என்றால் வழி. காற்றுக்குரிய தலம் என்பதால்தான் 'காலத்தி' என்ற ஊர்ப்பெயர் தோன்றி 'காளத்தி' என்று மருவியது. அவ்வூரை வடமொழியில் 'காளஹஸ்தி' என்பார்கள். காற்றைப்போல ஒருபோதும் நில்லாத தன்மையுடையது என்பதால்தான் காலம் என்ற சொல் தோன்றியது. ஆகவே, காலம் என்பது முழுமையான பொருளைத் தரும் தமிழ்ச்சொல் ஆகும்.

'தினம்' என்பது வடமொழி. அதை 'நாள்' என்று கூறவேண்டும். தினந்தோறும் என்பதை நாள்தோறும் என்பர். அவ்வாறே வாரம் என்பதற்குக் கிழமை என்பது உரிய தமிழ்ச்சொல்லாகும். ஞாயிற்றுக்கிழமை தொடங்கி சனிக்கிழமை வரை முடியும் ஒரு வாரத்தின் ஏழு நாள்களும் கிழமை வட்டம் எனப்படும். மாதம் என்பதைத் திங்கள் என்று கூற வேண்டும். சந்திரன் வளர்ந்து தேய்ந்து மறையும் ஒரு சுற்றைக் குறிப்பிடும் கால அளவு என்பதால், மாதம் என்பது திங்களைக் குறிப்பதாக ஆயிற்று. திங்கள் என்னும் சொல் நிலவையும் குறிப்பதை நாமறிவோம். வருசம், வருடம் என்பதை ஆண்டு என்று கூற வேண்டும். 'தேதி' என்பதைத் 'திகதி' அல்லது 'நாள்' எண் என்று கூறலாம்.

இவ்வாறே ஒவ்வொரு நாளுக்குமான கிழமைப்பெயர்கள் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகியன. இவற்றில் ஞாயிறு என்பது சூரியனைக் குறிப்பது. திங்கள் என்பது நிலவைக் குறிப்பது. முதலிரண்டு நாட்களும் சூரிய சந்திரர்களைக் குறித்தது போக, மீதமுள்ள நாட்கள் ஒவ்வொரு கோளையும் குறித்தன. அவற்றில் புதன், சனி ஆகியன வடமொழிப் பெயர்கள். புதன் அறிவுக்குரிய கோளாகக் கருதப்படுவது. சனி கரிய நிறமுடைய கோள். அதனால் அப்பெயர்களையும் தமிழ்ப் படுத்தியிருக்கிறார்கள். அறிவுக்குரியவன் என்பதால் புதனை 'அறிவன்' என்றும், கரிய நிறத்தவன் என்பதால் சனியைக் 'காரி' என்றும் தமிழில் வழங்குவார்கள்.

அவ்வாறே விநாடி என்பது வடமொழிச்சொல். அதனைத் தமிழில் நொடி என்பார்கள். நிமிஷம் என்பதை நிமிசம், நிமிடம் என்று எழுதினாலும் வடமொழியே. அதனை மணித்துளி என்பார்கள். சிலர் மணித்துளி விநாடியைக் குறிப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள். 7 : 40 : 28 என்று கடிகாரம் சுட்டுவதை “ஏழு மணி, நாற்பது மணித்துளிகள், இருபத்தெட்டு நொடிகள்” என்று தமிழில் கூற வேண்டும்.

இதுவரை அறிந்த வடமொழிச் சொற்களைத் தொகுத்துப் பார்ப்போம்.

தினம் = நாள்

தினந்தோறும் = நாள்தோறும்

தேதி = திகதி, நாள் எண்

வாரம் = கிழமை

புதன் = அறிவன்

சனி = காரி

மாதம் = திங்கள்

வருடம் = ஆண்டு

விநாடி = நொடி

நிமிசம் = மணித்துளி

- மகுடேசுவரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us