தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வடசொல் அறிவோம் - ஏகாந்தம் என்பதற்கு தமிழில் என்ன?

வடசொல் அறிவோம் - ஏகாந்தம் என்பதற்கு தமிழில் என்ன?

வடசொல் அறிவோம் - ஏகாந்தம் என்பதற்கு தமிழில் என்ன?


PUBLISHED ON : செப் 10, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 10, 2018


Follow on Google
அ நிறம் | அளவு

உயிரெழுத்துகளில் தொடங்கும் சொற்களில் உகரத்திற்குப் பிறகு வடசொற்கள் அதிகமாக இல்லையென்றே சொல்லலாம். எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ ஆகிய உயிரெழுத்துகளில் தொடங்கும் வடசொற்கள் மிகச்சிலவே.

'எஜமான், எஜமானன்' ஆகியவை வடசொற்களே. 'தலைவன்' என்னும் பொருளில் அச்சொற்கள் பயில்கின்றன. 'எதார்த்தம், யதார்த்தம்' என்னும் வடசொற்கள் 'உண்மை' என்ற பொருள் தரும். அவன் 'எதார்த்தமானவன்' என்றால், 'உண்மையானவன், உள்ளது உள்ளபடி உரைக்கக்கூடியவன், நடந்துகொள்பவன்' என்று பொருள். 'எதேச்சையாக நடந்துவிட்டது' என்று சொல்வோம். 'எதேச்சை' என்பதும் வடசொல்லே. 'தற்செயலாக' என்னும் பொருளில் அச்சொல்லைப் பயன்படுத்துகிறோம்.

வடமொழியில் 'ஏகம்' என்பதற்கு 'ஒன்று' என்று பொருள். 'ஏகபோகம்' என்றால் 'ஒன்றுபட்ட இன்பம்.' ஒற்றையாளாகத் தனித்திருப்பவர்களை 'ஏகாங்கி' என்பார்கள். ஒற்றையாய்த் தனித்திருப்பது 'ஏகாந்தம்' ஆகும்.

'ஐ' என்ற எழுத்தில் தொடங்கும் வடசொற்களில் 'ஐக்கியம், ஐஸ்வர்யம், ஐதிகம்' ஆகியவை மிகுதியாகப் பயில்கின்றன. 'ஒற்றுமை, ஒன்றுபட்ட தன்மையை' ஐக்கியம் என்பார்கள். ஐக்கிய அமெரிக்க நாடுகள் என்பது ஒன்றுபட்ட அமெரிக்க நாடுகள் என்னும் பொருளைத் தருகிறது. 'ஐஸ்வர்யம்' என்பது 'செல்வத்'தைக் குறிக்கிறது. 'ஐதிகம்' என்பது 'தொன்றுதொட்டு வரும் வழக்கம்.'

'ஔஷதம்' என்பது 'நோய்தீர்க்கும் மருந்து' ஆகும். 'ஷ' என்னும் எழுத்தைத் தமிழில் 'ட' என்று எழுதும் வழக்கம் உள்ளமையால், 'ஔஷதம்' என்பதை 'ஔடதம்' என்று எழுதுவர்.

ஒரு சொல் தனித்த ஒற்றைச் சொல்லாகவும், பிற சொற்களோடு தொடர்பின்றியும் காணப்பட்டால், அதனை வடசொல்லா என்று ஐயுறலாம். எடுத்துக்காட்டாக, 'ஐம்புலன்' என்ற சொல்லை எடுத்துக்கொண்டால், அதனுள் ஐந்து, புலன் ஆகிய தமிழ்ச்சொற்கள் இருக்கின்றன. அதனைத் தமிழ்ச்சொல் என்று கண்டுபிடித்துவிடலாம். 'ஐக்கியம்' என்ற சொல்லில் அந்தத் தன்மையே இல்லை. அது தனிச் சொல்லாகவே வழங்கப்படுகிறது. வடமொழியிலும் உள்ளது. அதனால் அதனை வடசொல் என்று துணிந்து கூறலாம்.

தமிழில் கலந்துள்ள வடசொற்களின் எண்ணிக்கை ஏறத்தாழ ஆயிரத்துக்குள் இருக்கும். அவை பேச்சு வழக்கிலும் கலந்துள்ளமையாலும், தமிழ்ச்சொற்கள் போலவே தோன்றுவதாலும் நமக்குக் குழப்பம் ஏற்படுகிறது. 'சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்' என்பதைப்போல, சொற்களோடு பழகியறிந்தால் அவற்றை எளிதில் இனங்கண்டு விடலாம்.

- மகுடேசுவரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us