PUBLISHED ON : செப் 16, 2019

கடல், காடு, ஓரிட வாழ்விகள் என அந்தமான் தீவுகளில், இயற்கை வளம் செழிப்பாக இருக்கும். இத்தீவில் சமீப காலமாக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது.
“அந்தமானில் நிலத்தடி நீரை எடுக்கும் பழக்கமே இல்லை. அங்கே ஆழ்குழாய் பதித்து நீர் எடுக்கும் முறை கிடையாது. அப்படி எடுத்தால், அது உப்புநீராகத்தான் இருக்கும். அந்தமான் முழுக்க, வான்மழையை நம்பியே இருக்கிறது. இந்நிலையில், பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, தண்ணீர் தேவை அதிகரித்துவிடும். வேறு வழியில்லாமல், ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்படுமானால், மொத்த நிலமும் பாதிக்கப்பட்டுவிடும். அப்புறம், இப்பகுதியில் யாருமே வாழ முடியாத சூழ்நிலை ஏற்படும்” என்கிறார் மத்திய தீவு விவசாய ஆராய்ச்சிக்கழக (Central Island Agricultural Research Institute --CIARI) ஆராய்ச்சியாளர் வேல்முருகன்.
இத்தீவு மக்கள், மழைநீரை நம்பித்தான் உள்ளனர். தீவு என்றாலே, மிகக்குறைந்த மக்கள்தொகைதான் இருக்கும். ஆனால், மக்கள் கூட்டம் அதிகரிக்கும்போது, மோசமான விளைவுகள் உண்டாகும்.
மாலத்தீவுகள் போன்ற சிறு தீவு நாடுகளில், அரசு புதிய உணவகங்களுக்கு அதிகாரப்பூர்வ அனுமதிச் சான்றிதழ் (Green license) கொடுக்கிறது. அனுமதிச் சான்றிதழ் உரிமம் இல்லை என்றால், அங்கு ஓட்டல்களை நடத்த முடியாது. இந்த மாதிரி ஒரு திட்டம் இதுவரை அந்தமானில் இல்லை. மாலத்தீவில் தற்போது குப்பைகளை எரித்துச் சாம்பலாக்கும் முறை (Incinerator) உள்ளது. இந்த முறையை அந்தமானிலும் மேற்கொள்ளலாம். இங்கே வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், எந்தவிதமான குப்பைகளை வீசியெறிந்தாலும், அதனால், இந்தத் தீர்வுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
அந்தமானில் கடல் நீர், நிலத்துக்குள் புகுந்துவிட்டால், மனிதர்களால் வாழ இயலாது. அனைத்து உயிரினங்களும் அழிந்துவிடும்.
மேலும், 25 சதுர கிலோ மீட்டருக்கு, நிலத்தடி நீரில் அசுத்தமான பாக்டீரியாக்கள் கலந்துவிடும். அந்தத் தண்ணீரை அவர்களால் குடிக்க முடியாது. தண்ணீரை இறக்குமதி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுவிடலாம். அந்த நிலம் தரிசு நிலமாகவே மாறிவிட வாய்ப்புண்டு.
தீர்வு என்ன?
இதைத் தவிர்க்க, தீவுச் சுற்றுலாவை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஏற்றவாறு மாற்ற முயல வேண்டும். மாலத்தீவைப் போல இங்கும் அரசு உரிமத்தைக் கட்டாயமாக்க சில நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அது விரைவாகச் செயற்பட்டால், அந்தமான் தீவை அழிவில் இருந்து காப்பாற்ற முடியும்.
- சாரதா பாலசுப்ரமணியன்
