தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வெங்கியை கேளுங்கள்

வெங்கியை கேளுங்கள்

வெங்கியை கேளுங்கள்


PUBLISHED ON : ஜன 18, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 18, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் - த.வி.வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானி

சுதாகர், மதுரை: 2020-ல் விண்வெளி நகரங்கள் அமைத்துவிட முடியுமா?

பூமி எனும் இந்த உயிர்க் கோளம் வெறும் சூரிய ஒளியை மட்டும் வெளியிலிருந்து பெறுகிறது. உணவு, நீர், சுத்தமான காற்று என இதில் உள்ள உயிர்களுக்கு, தேவையான பல்வேறு பொருட்களை உயிரிச் சுழற்சி முறையில் தயாரிக்கும் ஏற்பாடு இங்கேயே உள்ளது. சூரிய ஒளியில் கடல் நீர் மட்டுமல்ல, அசுத்தம் அடைந்த நீர் உட்பட எல்லா நீரும் ஆவியாகி பின்னர் மழையாக பொழிகிறது. இவ்வாறு நீர் சுழற்சியில் சுத்தமான நீர் நமக்கு கிடைகிறது. உள்ளபடியே நாம் செயற்கை முறையில் விண்வெளி நகரங்களை ஏற்படுத்த வேண்டும் என்றால் பூமியை போலவே செயற்கை முறையில் உயிரிச் சுழற்சி ஏற்பாட்டைச் செய்ய வேண்டும். வெறும் சூரிய ஒளி அல்லது தெர்மோ எலெக்ட்ரிசிட்டி (Thermo Electricity) கொண்டு இயங்கச் செய்யவேண்டும். இது விண்வெளி நகரம் அமைப்பதிலுள்ள முக்கிய சவால்.

செயற்கை உயிரிச் சுழற்சி செய்து, விண்ணில் நகரம் அமைக்க பற்பல புதுமையான தொழில்நுட்பங்கள் தேவை. முதலில் கட்டுமானப் பொருள். இரண்டாவது குடிநீர். மூன்றாவது சுவாசிக்க காற்று. நான்காவது உணவு. ஐந்தாவது கழிவு மேலாண்மை.

இன்னும் என்னென்ன தேவைகள் என்று விண்வெளி நகரங்கள் அமைக்க முயற்சிக்கும்போது தெரிய வரலாம். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது இன்னும் சில ஆண்டுகளுக்கு விண்வெளி நகரம் சாத்தியம் இல்லை. நாம் மகிழ்ச்சியடையும் ஒரே விஷயம் என்ன தெரியுமா? அறிவியல் பார்வையில் பூமியே விண்ணில் மிதக்கும் ஒரு விண்கலம்தான்!

நிர்மலா, சென்னை: தேன் ஏன் கெடுவதில்லை?

ஆண்டுக்கணக்கில் கூட அல்ல. பல நூறு ஆண்டுகள் ஆயினும், நன்றாக அடைத்துப் பாதுகாக்கப்பட்ட தேன் கெடுவதில்லை.

தேனீ, தனது வயிற்றில் சேமித்த தேனை எதிர்க்கழித்து (Regurgitate) வெளியே துப்புகிறது. தேன் கூட்டில் பணிசெய்யும் தேனீக்கள் அவற்றை உண்டு தமது வயிற்றில் மறுபடி நொதிகளுடன் கலந்து மேலும் பதப்படுத்துகின்றன. சுமார் இருபது நிமிடம் இவ்வாறு பதப்படுத்திய பின், மறுபடி தேன் உமிழப்படுகிறது. இப்போது சிறிதளவு சுக்ரோஸ் (Sucrose) மிஞ்சினாலும் பெரும்பாலும் குளுகோஸ் (Glucose) மற்றும் ஃப்ருக்டோஸ் (Fructose) ஆகச் சிதைந்து விடும். இந்த கலவையை தேனீ கூட்டில் செலுத்துகிறது. பின்னர், அதன் அருகில் தனது இறகை வெகுவேகமாக அடித்து, காற்றைச் செலுத்தி தேனை உலர வைக்கிறது. பூந்தேனில் சுமார் 70% நீர் இருக்கும். மிகுதியான நீரை எல்லாம் ஆவியாக வெளியேற்ற வேண்டும். தேனில் நீர் அளவு சுமார் 17% ஆகக் குறையும் வரை தேனீக்கள் மாறி மாறி தமது இறகை அடித்து, தேனை உலர வைக்கும். நீர் அளவு குறைந்து தேன், பாகு நிலைக்கு வருவதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் பிடிக்கும்.

தேனீக்களின் வயிற்றில் வினையாற்றும் குளுகோஸ் ஆக்ஸிடேஸ் (Glucose oxidase) நொதிதான் தேன் பல ஆண்டுகள் கெடாமல் இருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தேனில் நீரின் அளவு குறைவாக இருப்பதும் ஒரு காரணம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us