தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வெங்கியை கேளுங்க!

வெங்கியை கேளுங்க!

வெங்கியை கேளுங்க!


PUBLISHED ON : மார் 21, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 21, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாணவர்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானி

ஞாபக சக்தி, கல்வி கற்பது போன்ற மனித மூளையின் செயல்திறனை செயற்கை முறையில் அதிகரிக்க முடியுமா?

-நா.யோஜனா, காமராஜர் நகர், செங்கல்பட்டு.


வெகு எளிது. வீட்டுக்கு ஒரு நூலகம் ஏற்படுத்த வேண்டும்; தினமும் படிக்கும் பழக்கம் வேண்டும். அவ்வளவுதான்.

யானையைப் போல பெரிய பாரத்தை மனிதனால் தூக்க முடியுமா? கழுகைப் போல தொலைவில் உள்ளதையும் கூர்மையாக மனிதனால் பார்க்க முடியுமா? முடியும்! பளு தூக்கி இயந்திரம் கொண்டு யானையைவிட அதிக எடையை நம்மால் தூக்க முடியும். தொலைநோக்கி அல்லது நுண்ணோக்கி கொண்டு மேலும் கூர்மையாகப் பார்வை பெற முடியும்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தனது சிந்தனையை திருக்குறளாக எழுதி வைத்த திருவள்ளுவரின் கருத்துகள், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் வடிவம், கோள்களின் இயக்கம் ஆகியவற்றை எழுதி வைத்த ஆரியபட்டரின் கருத்துகள் என எல்லாம் நூலகங்களில் திரண்டு இருக்கும் அல்லவா? எந்தத் தகவல் வேண்டுமோ அங்கே சென்று தேடினால் போயிற்று. அவ்வளவுதானே!

நினைவு ஆற்றல் என்பது என்ன? எப்போது வேண்டுமோ அப்போது ஒரு சிந்தனை அல்லது தகவலை மறுபடி நினைவுக்குக் கொண்டு வருவது. மூளையில் பதிவாக இருந்தால் மட்டுமே நினைவாற்றல் என ஏன் கொள்ளவேண்டும்? அப்படியெனில் ஜிம்முக்குப் போய் தூக்கும் பளு மட்டுமே மனிதத் திறனா? இயந்திரம் வைத்து பல மடங்கு தூக்க முடிவதெல்லாம் கணக்கில் இல்லையா என்ன?

ஜிம்முக்குப் போவதால் ஓரளவுதான் அதிக பளு தூக்க முடியும்; உடல் வலு சேர்க்க முடியும். அதேபோல நேரடியாக நமது மூளையின் திறனை ஓரளவு கூட்ட முடியலாம். அதுபோல நூல்களைப் படிக்கும் பழக்கத்தை வளர்த்து, வீட்டுக்கு ஒரு நூலகம் வைத்தால் நமது சிந்தனை திறன் நடைமுறையில் பல மடங்கு கூடும்.

சூரியன் பெரியதா, நட்சத்திரம் பெரியதா? சூரியனும் ஒரு நட்சத்திரம் தானே?

-AM. யாஷிகா தேவி, 10ஆம் வகுப்பு, மாடல் ஸ்கூல், காட்டுக்குடிப்பட்டி, திருப்பத்தூர்.


சூரியனும் ஒரு நட்சத்திரம்தான். பொதுவாக நட்சத்திரங்களை O, B, A, F, G, K, M, R, N என்ற ஒன்பது வகையாக பிரிப்பார்கள். இதுதவிர W, L, T, S என சில சிறப்பு வகைகளும் உண்டு. இந்தப் பகுப்பின்படி நமது சூரியன் G வகுப்பு விண்மீன்.

எல்லா நட்சத்திரங்களும் ஒரே அளவு உடையவை அல்ல. ஒரே ஒளிர்வுத் தன்மை கொண்டவையும் அல்ல. எடுத்துக்காட்டாக 'கேபல்லா' எனும் அகஸ்தியர் நட்சத்திரம் G வகையைச் சார்ந்தது. இதன் அளவு சூரியனை விடப் பத்து மடங்கு அதிகம்.

திருவாதிரை என்பது (பிடேல்ஜியுஸ் - Betelgeuse) M வகை நட்சத்திரம். இதன் ஆரம் சூரியனைப் போல 400 மடங்கு பெரியது. அதாவது அதன் பருமன் சூரியனை போல 64 கோடி மடங்கு கூடுதல். வேறு வார்த்தையில் கூறினால் திருவாதிரை நட்சத்திரத்துக்குள் 64 கோடி சூரியன்களை அடக்கிவிடலாம். மறுபுறத்தில் 'சிரியஸ்' B என்ற நட்சத்திரத்தை எடுத்துக் கொள்வோம். இது A வகை நட்சத்திரம். இது சூரியனின் பருமனில் 0.007 பங்குதான். அதாவது வெறும் பூமியளவு.

பல அளவுகளில் நட்சத்திரங்கள் உள்ளன. நடுத்தர சூரியனை டென்னிஸ் பந்து எனக் கொண்டால் சிறு மணல் துளி அளவு உள்ள குள்ள நட்சத்திரங்கள் தொடங்கி கால்பந்து மைதானம் அளவு பெரிதாக இருக்கும் பெரும் ராட்சஸ நட்சத்திரங்கள் வரை பிரபஞ்சத்தில் உள்ளன.

தண்ணீருக்கடியில் நம்மால் எப்படிப் பார்க்க முடிகிறது? சாதாரணமாகப் பார்ப்பதைப் போல தெளிவான காட்சியாக அது இருக்குமா?

என்.ரோஹித், திருச்சி
.

தண்ணீருக்கு வெளியிலிருந்து தண்ணீருக்குள் பார்ப்பது சற்றே சிரமம். கூடுதலான அடர்த்தி கொண்ட நீரிலிருந்து வெற்றிடத்தை நோக்கி ஒளிக்கதிர் வரும்போது நீருக்குள் உள்ள பொருட்கள் வளைந்தது போல காட்சியளிக்கும். ஒளி விலகல் என இதைக் கூறுவோம். நீங்களே ஒரு சோதனை செய்து இதை பார்த்துக் கொள்ளலாம். பாதியளவு நீர் நிரம்பிய கண்ணாடிக் குவளையில் ஒரு பென்சிலை வைக்கவும். பக்க வாட்டிலிருந்து பார்த்தால் நீரும் வெற்றிடமும் சேரும் இடத்தில் நேரான பென்சில் வளைந்தது போலக் காட்சி தரும்.

ஆனால் நீருக்குள் நீந்திச் செல்லும்போது ஒளிக்கதிர் நீருக்குள்ளே பாய்ந்து நமது கண்களை அடைகிறது. எனவே ஒளி விலகல் ஏதும் ஏற்படாது. கண்களின் விழி வெண்படலத்தின் (கார்னியா - Cornea) ஒளிவிலக்க எண் 1.33 ஆகும். நீரின் ஒளிவிலக்க எண்ணும் ஏறக்குறைய அதே அளவுதான். எனவே விழியில் நுழையும் ஒளிக்கதிர் சரியாக விழித்திரையில் குவியாது. எனவே பார்வை மங்கலாக தெளிவில்லாமல் அமையும். நீச்சல் கண்ணாடி போட்டுக் கொண்டால் ஓரளவு இந்தச் சிக்கலைச் சமாளிக்கலாம்.

உட்கார்ந்துவிட்டு எழும் போது கை, கால் சில நேரங்களில் மரத்து விடுவதாகவும். கால் இல்லாதது போன்ற உணர்வு நிலை ஏற்படுவதாகவும் சிலர் சொல்கிறார்களே; அது எதனால்?

- T. பூஜாலஷ்மி, அருள்மலர் மெட்ரிக், மதுரை
.

ஒரே நிலையில் அதிக நேரம் உட்கார்ந்து அல்லது படுத்து இருந்து எழுந்திருக்கும் போது ஜிவுஜிவு என சிலிர்ப்புடன் கை, கால்கள் மரத்துப் போனதுபோல உணர்வு ஏற்படும். இது ஒருவகை வற்றுணர்வு (பாராஎஸ்திஷியா - Paraesthesia). உடலின் சில குறிப்பிட்ட பகுதி அழுந்துமாறு ஒரே பக்கமாக உட்கார்ந்து அல்லது படுத்து இருந்தால் ஆக்சிஜன் செறிவுடன் செல்லும் ரத்த நாளத்தில் அழுத்தம் ஏற்படும். இதன் காரணமாக ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். அதன் தொடர்ச்சியாக கை கால்களில் உள்ள நரம்பு இழைகளுக்குப் போகவேண்டிய ரத்தத்தில் குறைவு ஏற்படும். இதனால் தற்காலிகமாகச் செயலிழக்கும் நரம்புகள்தான் ஜிவுஜிவு என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us