தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வெங்கியை கேளுங்க!

வெங்கியை கேளுங்க!

வெங்கியை கேளுங்க!


PUBLISHED ON : ஆக 08, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 08, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சூரியன் என்னும் நட்சத்திரத்தைச் சுற்றி இருக்கும் பூமியில் உயிர்கள் இருப்பதுபோல, வேறு நட்சத்திரங்களைச் சுற்றி உயிர்கள் இருக்குமா?

மா. மலய குமார் பிஸ்வால், 12ஆம் வகுப்பு, ஹோலி ஃப்ளவர்ஸ் பள்ளி, புதுச்சேரி.


'G வகை விண்மீன்' எனப்படும் வெகு சாதாரண விண்மீன்தான் சூரியன். சூரியனைப் போன்ற கோடானுகோடி விண்மீன்கள், நமது கேலக்ஸியான பால்வழி மண்டலத்திலேயே உள்ளன. 'இயற்கையின் போக்கில் மின்னல் போன்றவற்றால், பூமியில் உள்ள கரிமப் பொருள்கள் ஆற்றல் பெற்று, முடுக்கம் அடைந்து மெல்லமெல்ல உயிர் உருவானது' என்பது நவீன அறிவியலின் கருத்து. அப்படியெனில், பூமியில் மட்டுமே அவ்வாறான துல்லியமான கூட்டு ஏற்பட்டது என்பது நம்புவதற்கு ஏற்றதாக இல்லை. கோடானுகோடி விண்மீன்கள் உள்ள இந்தப் பிரபஞ்சத்தில் பூமியில் மட்டுமே உயிர் தோன்றியது என்பது புள்ளியியல் ரீதியில் சாத்தியம் இல்லை. எனவே வேறு கோள்களில் உயிர் இருக்கவேண்டும். பூமிதான் பிரபஞ்சத்தின் மையம்; சூரியன், கோள்கள் விண்மீன்கள் அதைச் சுற்றிவருகின்றன என ஒருகாலத்தில் நாம் கருதினோம். அப்போது பூமி பிரபஞ்சத்தில் சிறப்பான இடம் பெற்ற கோளாக இருந்தது. ஆனால் இன்று, பிரபஞ்சத்தில் உள்ள கோடானுகோடி விண்மீன்களைச் சுற்றிவரும் பல கோடிகோடி கோள்களில் ஒன்றுதான் பூமி என்பது உறுதியாகிவிட்ட நிலையில், உயர்வற்ற ஒரு பூமி எனும் கருத்து உருவாகிறது. இந்தக் கருத்தின் அடிப்படையிலும் பூமியைத் தவிர வேறு பல கோள்களில் உயிர் தோன்றி இருக்கவேண்டும்.



நிலவின் ஒரு பகுதி மட்டுமே நமக்குத் தெரிகிறது. மற்றொரு பகுதியைப் பார்க்க முடியாதா?

தேன்மொழி, 5ஆம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, உடுமலைப்பேட்டை


நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் காலமும், பூமியைச் சுற்ற எடுக்கும் காலமும் சற்றேறக்குறைய ஒன்றுதான். எனவே ஒரே ஒரு முகம் காட்டியபடிதான், நிலவு பூமியைச் சுற்றுகிறது. ஆகையால் பூமியில் இருந்தபடி அதன் மறுபகுதியைக் காணமுடியாது.

மேலும், நிலவு பூமியைச் சுற்றும் பாதை, சற்றே சாய்ந்து உள்ளது. அதாவது ஒரு சமயம் பூமிக்கு நேருக்கு நேர் நிலவு இருக்கும்; சில சமயம் பூமிக்கு சற்றே தாழ்வாக இருக்கும். நாம் உயரமாக இருந்து அடுத்தவர் சற்றே குட்டையாக இருந்தால் அவரது முகத்துடன் அவரது தலைப் பகுதியும் நமக்குப் புலப்படும் அல்லவா? எனவே தாழ்வான நிலையில் இருக்கும் போது நிலவின் துருவப்பகுதிகள் சற்றே கூடுதலாகப் புலப்படும். சிலசமயம் நமக்கு மேலே இருக்கும். அப்போதும் அதன் கீழ் துருவப்பகுதி கூடுதலாகப் புலப்படும். இதுபோன்ற காரணங்களால் நிலவின் சுமார் 59% பகுதியை பூமியில் இருந்து காணமுடியும். நம் கண்ணுக்குப் புலப்படாத பகுதியை விண்கலம் மூலம்  நிலவின் மறுபகுதிக்கு செல்லும்போது மட்டுமே காண இயலும்.



திசைகாட்டியை (Navigational Compass) எப்படிப் பயன்படுத்துவது?

V.S. கோபாலன், மதுரை.


காந்தந்தைப் பயன்படுத்தி திசைகளை அறியும் முறை முதன்முதலில் சீனாவில் உருவாகியது என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வூ சிங் ட்சுங் யோ (Wu Ching Tsung Yao) என்ற நபர், கி.பி. 1040ஆம் ஆண்டில் எழுதிய ஒரு நூலில், இரும்பினால் ஆன ஒரு மீன் உருவத்தை நீர் நிரப்பிய ஒரு கிண்ணத்தில் மிதக்கவிட்டு திசைகளை அறியும் முறை குறித்த விவரணை உள்ளது. அதன் பின்னர் காந்தத்தை நூலில் கட்டி தொங்க விட்டு திசை அறியும் முறை உருவானது.

பூமியே ஒரு பெரிய காந்தம். எந்த ஒரு காந்தப் பொருளும் பூமியின் காந்தப் புலத்தில் தாக்கம் கொள்ளும். எனவே பூமியின் காந்த தென் துருவம் நோக்கி, காந்தத்தின் வடக்கு முனை ஒழுங்குபடும். பூமியின் காந்த தென் முனை உள்ளபடியே வடதுருவம் அருகே உள்ளதால், காந்தத்தின் வடக்கு முனை காட்டும் திசை வடக்கு என எளிதில் அறிந்துக் கொள்ளமுடியும்.

ஆற்றல் மிக்க சிறிய காந்தமுள்ளை ஊசி முனையில் பாலன்ஸ் செய்தால் அது வடக்கு தெற்காக நிலைகொள்ளும். எனவே வடக்கு திசை அறிந்து ஏனைய திசைகளை நாம் அறிந்துக் கொள்ளலாம்.

எல் நினோ, லா நினோ விளைவுகளால் கடலில் மாற்றங்கள் ஏற்பட்டு கடல்வாழ் உயிர்களுக்குப் பாதிப்புகள் இருக்குமா?

மு. தீபா, 8ஆம் வகுப்பு, ஸ்ரீ முருகானந்த நடுநிலைப்பள்ளி, தேவகோட்டை
.

'எல் நினோ' மற்றும் 'லா நினோ' போன்ற நிகழ்வுகள் புயல் உருவாதல், மழை போன்ற இயற்கை நிகழ்வுகளாகும். அவ்வப்போது இந்த நிகழ்வுகள் ஏற்படும். எப்படி மழை குறைவான ஆண்டில் வறட்சி ஏற்பட்டு பயிர்கள் வாடுமோ, அவ்வாறே இதுபோன்ற இயற்கை நிகழ்வுகளும் பல்வேறு உயிரினங்களின் மீது பாதிப்பு செலுத்தும். லா நினோ ஆண்டில் தென் அமெரிக்காவில் கூடுதல் மழை பொழிவு காரணமாக, அங்கே பாம்புகளின் எண்ணிக்கை பெருகி, பாம்புக்கடியால் மடிபவர்கள் எண்ணிகையும் கூடுகிறது என சமீபத்திய ஆய்வு கூறுகிறது.

இறப்பிற்கும் கோமா நிலைக்கும் இடையே 'Tranquiler' என்ற ஒரு நிலை இருக்கிறது எனக் கேள்விப்பட்டேன். அப்படி என்றால் என்ன?

சி.பி. நவீன்பால், இளநிலை அறிவியல் முதலாம் ஆண்டு, பி.எஸ்.ஜி. கல்லூரி, கோவை.


மருத்துவ ரீதியாக, 'Tranquiler' என்று எதுவும் வரையறை செய்யப்படவில்லை. 'Tranquil' என்றால் 'சலனமற்ற' என்று பொருள். எந்தவித அலையும் இன்றி சலனமே இல்லாமல் இருக்கும் நீரைப் போல மனம் அமைதியாக இருக்கும் நிலையை, ஆங்கிலத்தில் Tranquil mood எனக் கூறுவார்கள்.

மரணம் என்பதை, 'மூளைத் தண்டுவட இயக்கம் நின்றுவிடல்' என மருத்துவம் வரையறை செய்கிறது. ஒருகாலத்தில் மரணம் என்பது ஒருவகைத் தூக்கம்தான் எனக் கருதியதால்தான் மீளாத்துயில் என மரணத்தைக் கருதினர். பின்னர் 'இருதயம் நின்றுவிடல்தான் மரணம்' எனக் கருதப்பட்டது. மருத்துவம் முன்னேறிய பிறகு, இருதயம் நின்றாலும் மறுபடி இயங்கவைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மூளைத் தண்டுவட இயக்கமற்ற நிலையில், கோமா நிலைக்குச் செல்வது மட்டுமல்ல, சுயமாக மூச்சுவிட முடியாது; எல்லாவித அனிச்சைச் செயல்களும் நின்றுபோகும். அந்த நிலைக்குச் சென்றபின் மீண்டெழ முடியாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us