sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

வெங்கியை கேளுங்க!

/

வெங்கியை கேளுங்க!

வெங்கியை கேளுங்க!

வெங்கியை கேளுங்க!


PUBLISHED ON : பிப் 13, 2017

Google News

PUBLISHED ON : பிப் 13, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாணவர்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானி

மின்விசிறியின் கீழே வியர்வையுடன் நின்றால் அதிகமாகக் குளிர்வது ஏன்?

பூர்ணிமா புருஷோத்தமன், 5ம் வகுப்பு, பத்மா சேஷாத்ரி மிலினியம் பள்ளி, கெருகம்பாக்கம், சென்னை.


கோடையில் நமது உடல் வியர்க்கும். அதனால் வெளிவரும் வியர்வை மீது காற்றுப் பட்டால், 'ஜில்' என்ற உணர்வு ஏற்படும். சூடான வியர்வைத் துளியின் ஒருபகுதியை, வீசும் காற்று ஆவியாகச் செய்கிறது. உடலின் மீது இருக்கும் வியர்வையின் மற்ற பகுதியிலிருக்கும் சூட்டை எடுத்துத்தான், வியர்வைத் துளி ஆவியாகிறது. ஆவியான வியர்வை, உடலை விட்டு நீங்கினாலும், ஆவியாவதற்காக சூடு தந்த வியர்வைத் துளி, உடலின் மீது இருக்கும். தனது சூட்டை தந்துவிட்டதால், அந்த வியர்வைத்துளி இருக்கும் பகுதி குளிரும்.

இதேமுறையில்தான், கோடை காலத்தில் மண்பானையில் நீர் குளிர்வதும் நடைபெறுகிறது. மின்விசிறி செயற்கையாகக் காற்று வீசச் செய்து, வியர்வை ஆவியாவதைத் தூண்டுகிறது. எனவேதான், கோடையில் சூட்டைத் தணிக்க மின்விசிறி உதவுகிறது.

புழுக்கமான கோடை என்றால், காற்றில் கூடுதல் ஈரப்பதம் இருக்கிறது என்று பொருள். எனவே, காற்று மேலும் கூடுதல் நீராவியை எடுத்துக்கொள்ள முடியாது. எனவே, புழுக்கமான நிலையில், உடலை மின்விசிறி குளிர்விக்காது; மாறாக, புழுக்கத்தை மேலும் கூட்டும்.

தொலைக்காட்சி ரிமோட் (Remote) எவ்வாறு வேலை செய்கிறது? ஒவ்வொரு பொத்தானுக்கும் ஒரு அலைவரிசை இருக்கிறதா?

வி.ஹரிஷ், ஜி.கே.டி. மெட்ரிக் பள்ளி, கோவை.


அகச்சிவப்பு (இன்ஃப்ராரெட் - Infrared) கதிர்களைப் பயன்படுத்தி, ரிமோட் வேலை செய்கிறது. ரிமோட்டில் ஏதாவது ஒரு பொத்தனை அழுத்தினால், சடசடவென அகச்சிவப்பு கதிரின் துடிப்புகள் வெளிப்படும். தந்தி போல நீண்ட துடிப்பு 1, குறைவான கால அளவு உடைய துடிப்பு 0 என பைனரி மொழியில் மின்னணு செய்தி வெளிப்படும். எடுத்துக்காட்டாக, தொலைக்காட்சியில் சத்தத்தைக்கூட்ட, 101101 எனவும், சத்தத்தைக் குறைக்க. 11110111 எனவும் பைனரி சங்கேதக் குறிகள் பதிந்து இருக்கலாம். இவ்வாறு பைனரி மொழியில் ரிமோட்டில் இருந்து அகச்சிவப்பு கதிர் வெளிப்படும். தொலைக்காட்சியில் உள்ள அகச்சிவப்பு கதிர் உணர்வி (சென்சார் - Sensor) இந்த பைனரி அகச்சிவப்பு கதிர்களை உணர்ந்துகொள்ளும். தொலைக்காட்சியில் உள்ள உணர் கருவி பைனரி மொழியை உணர்ந்து, அதற்கேற்றவாறு சத்தத்தைக் கூட்டவோ, குறைக்கவோ அல்லது சேனலை மாற்றவோ செய்யும். இவ்வாறுதான் தொலைக்காட்சி ரிமோட் வேலை செய்கிறது.

காதைப் பொத்திக்கொண்டால், 'உஸ்' போன்ற சத்தம் கேட்கிறதே, அது எங்கிருந்து வருகிறது?

ஜெ.ரோகித், 3ம் வகுப்பு, ஊ.ஒ.து. பள்ளி, பூலுவபட்டி, திருப்பூர்.


காதை மூடுவதுபோல ஒரு டம்ளரை வைத்தாலும், இதேபோலத்தான் சத்தம் கேட்கும். ஏனெனில், காதை மூடும்போது காதைச் சுற்றி ஒரு குழி ஏற்படுகிறது. இதனால், காற்றில் இருக்கும் ஒலி, காதை மூடி இருக்கும் அந்த டம்ளருக்குள் பிரதிபலித்து உள்ளேயே சுழலும். அப்படிச் சுழல்வதால் ஏற்படும் சத்தம்தான் நமக்கு, 'உஸ்' என்று கேட்கிறது.

மற்ற உலோகங்களைவிட தங்கம் ஏன் அதிகமாக ஜொலிக்கிறது?

ஆர்.எஸ்.பரத், லியோ மெட்ரிக் பள்ளி, அண்ணா நகர், சென்னை
.

இலை ஏன் பச்சை நிறத்தில் காட்சி தருகிறது? இலையில் உள்ள 'பச்சையம்' (க்ளோரோபில் - Chlorophyll) எனும் நிறமி, பச்சை நிறத்தைத் தவிர ஏனைய நிறங்களை உறிஞ்சிவிடுகிறது. எனவே, இலை பச்சை நிறத்தில் காட்சி தருகிறது. அதுபோல, உலோகத்தின் மீது ஒளி பாயும்போது, அந்த ஒளி அணுவின் கருவினுள் செல்வதில்லை. மாறாக, உலோகத்துண்டின் மீது இருக்கும் எலக்ட்ரான்கள் ஒளியை எடுத்துக்கொள்கின்றன.

தங்கம் போன்ற உலோகங்களில், அதன் இறுதிப் பாதையில் உள்ள எலக்ட்ரான்கள் அணுவிலிருந்து வெளியேறி, உலோகத்துண்டில் அங்கும் இங்கும் சுற்றியபடி இருக்கும். இந்த எலக்ட்ரான்களின் பின்னணியில்தான், மின்சாரத்தை நன்கு கடத்தும் பொருட்களாக உலோகங்கள் இருக்கின்றன.

உலோகத்துண்டில் ஒளி படும்போது, அந்த ஒளியால் தூண்டப்பட்டு சுதந்திர எலக்ட்ரான்கள் கிளர்வு நிலைக்குச் செல்லும். தூண்டப்பட்ட நிலையிலேயே எலக்ட்ரான்கள் நிலைத்து இருக்காது. அதனால், கூடுதல் ஆற்றலை ஒளியாக உமிழ்ந்து, எலக்ட்ரான்கள் தமது இயல்பு நிலைக்குத் திரும்பும். இதன் காரணமாக, அங்கும் இங்கும் உலவும் எலக்ட்ரான்கள் கிளர்ந்து, மறுபடி ஒளியை உமிழும். இதுதான் தங்கம் பளபளப்பாக ஜொலிக்கக் காரணம்.






      Dinamalar
      Follow us